Wednesday, March 19, 2008

பிறப்பென்னும் பேதமை- விதிகாணும் உடம்பு

தில்லியில் கல்காஜி அருகே உள்ள பஹாய் மந்திர் செல்வோர்கள் பலர் இதை கவனித்திருக்கக் கூடும். தியான மண்டபத்தை சுற்றி உள்ள அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டிகளில் கண்ணாடி போன்று இருக்கும் நீர் அடியில் நூற்றுக்கணக்காக நாணயங்கள் தென்படும். இதே போல் கங்கையிலும் பல நீர் நிலைகளிலும் மக்கள் நாணயங்களை வீசுவதைப் பார்த்திருக்கிறேன். புனித தலங்களின் நீர் நிலைகளில் இப்படி மனதில் எதையாவது வேண்டிச் செய்வார்களாம்.

அப்படிப்பட்ட வரம் தரும் கிணறு ஒன்று. அதில் புது தம்பதியினர் தம் காணிக்கை செலுத்தி வேண்டிக்கொண்டனர். “நீ என்ன வேண்டிக்கொண்டாய் ?” என்று கேட்டான் கணவன்.

“ஏழேழு பிறவிகளிலும் நீங்களே கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். நீங்கள் ? என்று பதில் கேள்வி போட்டாள் மனைவி. “இதே என் கடைசி பிறவியாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்” என்றான் கணவன்.

மனைவியின் பிக்கல் பிடுங்கல் தாங்க முடியாத கணவனின் வேண்டுதலாக நகைச்சுவைக்காக சொன்னாலும் பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.

தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்

....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)

(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)

சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.

இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

मैं अपराधी जन्म का, नख-सिख भरा विकार ।
तुम धाता दुःख भंजना,मेरी करो सम्हार ॥


மேன் அபராதி ஜன்ம் கா, நக்-ஸிக் பரா விகார் |
தும் தாதா து:க் பஞ்சனா, மேரீ கரோ ஸம்ஹார் ||


பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்

(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)

'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.

அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25

('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27

(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)

பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35

என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.

'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என்பதில் “மே அபராதி ஜன்ம் கா” என்று சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.

வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினைபுரிதலும் பின்னர் அவ்வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.

தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358

'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.

'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.

14 comments:

  1. அற்புதமான கபீரின் இரு வரிகளைத் தங்களுக்கே உரிய எளிய தமிழில்
    விளக்கியதனை எப்படிப் பாராட்டுவேன் ! என்னிடம் சொற்கள் இல்லையே !

    பாம்பாட்டி சித்த‌ர் சொல்லிய‌து போல், இவ்வுட‌ல் பெள்தீக நிலையில் பார்த்தாலும்,

    "இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண‌
    ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
    அருமையாய் இருப்பினும் அந்த‌ சூளை
    அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே ! "

    அந்த உடம்பினை எவ்வளவு தான் கட்டிக்காத்திடினும், நம்முடையது என நினைப்பிலே இருந்தாலும், அது ஒரு நாள்

    "சீயும் முஞ்செறி செந்நீரும் நிணமும்
    சேர்ந்திடு துர் நாற்றமுடைக் குடம் அது உடைந்தால்
    நாயும் நரியும் பெரிய பேயுங் கழுகும்
    நமதென்று தின்றிடும் என்று ஆடு பாம்பே..!

    அதற்காக இவ்வளவு நாற்றம் எடுக்கிறதே என தினமும் தினமும் குளித்து சோப் போட்டு சென்ட் அடித்து பிறரை வ்சீகரிக்கும் என்ற நினைப்பிலே மத மனக்களிப்பிலே
    வாழ்ந்திடினும் அது " நீரில் எழும் நீர்குமிழி நிலைகெடல் போல நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம்". அப்படி இருக்கும்போது அந்த உடலாம், நாறு மீனைப் பலதரம்
    நல்ல தண்ணீரால் நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ? "

    ஏன் போகாது என்பதற்கான காரணத்தினையும் பாம்பாட்டி சித்தர் சொல்லுகிறார்:

    "காய்த்த ம்ரம் அதுமிக்க கல்லடிபடும்
    கன்மவினை கொண்ட காயம் தண்டனை பெறும் "

    ஆகவே உடல் தண்டனை பெறுகிறது, நகம் முதல் சிகம் வரை படாத பாடு படுகிறது,உள்ளிருக்கும் ஆன்மா ஒரு நாள், போதுமடா சாமி,என்று, இவ்வீட்டை விட்டு
    நீங்கி விடினும், கர்ம வினைகள் தொடரவே செய்கின்றன்.

    இந்த கர்ம வினைகள் நம்மைத் தொடர்வதைத் தவிர்க்க இயலுமா ?ஐம்புலன்களினால் தீயவைகளை அனுபவித்ததன் பலன், மனதினை ஒரு நிலைப்படுத்தி
    ஆத்ம விசாரத்தில் ஈடுபடுத்த இயலாததின் விளைவு, மேன்மேலும் உடல் எடுத்து, கர்ம வினைகளை அனுபவிக்கும்படி அல்லவா நேரிடுகிறது.

    "மேரி கரோ சம்ஹார் " எனும்போது மேரி = என்னுடைய கர்மவினைகளை, சம்ஹார் கரோ = அழித்து விடு எனச் சொல்வது போலத்தான் தோன்றுகிறது. கர்ம வினைகள் தொலைவதற்கு, நீங்குவதற்கு அவன் அருள் இல்லையேல், வேறு ஏதேனும்
    உக்திகளும் உண்டோ ! ஆகவே அவன் அருளை எதிர் நோக்கி விண்ணப்பிக்கிறார்.
    கர்ம வினைகள் நீங்க பிறவித்துன்பமும் நீங்கும் என்பது வெள்ளிடைமலை.

    இதே கருத்துக்களுடைத்த கபீரின் ரமைனி ஏதும் நினைவில் இல்லை. மிக ஆழமான கருத்துடைய தோஹாவினைத் தந்திருக்கிறீர்கள். இதுவும் அவன் அருளே.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    http://vazhvuneri.blogspot.com

    http;//arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  2. //என்னிடம் சொற்கள் இல்லையே !//

    ஒரு முழு பதிவிற்கான தகுதியுள்ள ஒரு கட்டுரையை பின்னூட்டமாக இட்டு இந்த பதிவை பெருமை படுத்தியிருப்பதற்கு என்னிடமும் சொற்கள் இல்லை!

    பாம்பாட்டிச் சித்தரின் மேற்கோள் மிகவும் அற்புதமானவை. அவற்றைப் படிக்கும் பொழுது பட்டினத்தாரின் பாடல்களை படிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
    நன்றி. வாசகர்கள் அனவரும் கடமைப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  3. அருமையான பதிவும் / பின்னூட்டமும்.
    இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  4. அசத்தலாக இருக்கிறது நண்பரே!
    பிடியுங்கள் பாராட்டுக்களை!

    ReplyDelete
  5. நன்றி குமார்.

    வாத்தியார் ஐயா நன்றி.

    மீண்டும் வருக :)

    ReplyDelete
  6. இப்படி நீர் நிலைகளில் காசுகளை வீசி எதையாவது வேண்டிக் கொள்வதை இங்கே அமெரிக்கா வந்த பின்னர் தான் நிறைய பார்க்கிறேன். இங்கே இருக்கும் ஒவ்வொரு செயற்கை நீருற்றிலும் காசுகள் கிடக்கக் காணலாம். இப்படி எங்கே தண்ணீரைப் பார்த்தாலும் என் மகள் இப்போதெல்லாம் தூக்கிப் போட காசு கேட்டுத் தொல்லை கொடுக்கிறாள். :-)

    தமிழக வைணவத்தில் இந்த சரணாகதி மிக மிக அதிகமாகப் பேசப்படுகிறது (மற்றத் தத்துவங்களில் பேசப்படவில்லை என்று சொல்லவில்லை. எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்). தன் சுய முயற்சியால் கரும, ஞான, பக்தியோகங்களைச் செய்வதை விட சரணாகதி என்னும் ப்ரபத்தி செய்தல் நலம் என்றும் ப்ரபத்தி என்பது 'என்னால் இந்த யோகங்களை எல்லாம் செய்ய இயலாது. நீயே வழியாகவும் சென்றடையும் இடமாகவும் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வாய்' என்று முழுவதுமாகத் தருவது என்றும் வைணவம் கூறும்.

    அருணகிரிநாதப் பெருமான் சொன்னவற்றையும் வள்ளுவர் சொன்னவற்றையும் பொருத்தமாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. நன்றி குமரன்.

    //என் மகள் இப்போதெல்லாம் தூக்கிப் போட காசு கேட்டுத் தொல்லை கொடுக்கிறாள். :-)///

    'ஆற்றில் போட்டாலும் அளந்து போட' சொல்லிக் கொடுங்கள் :))

    //தமிழக வைணவத்தில் இந்த சரணாகதி மிக மிக அதிகமாகப் பேசப்படுகிறது//

    உண்மையான சரணாகதி பக்தனுக்கு வந்துவிட்டால் அதுவே அவனை துவைத நிலையிலிருந்து அத்வைத நிலைக்கு அழைத்துச் சென்று விடுமாம். அதற்கு நாமதேவரை உதாரணமாக சொல்வதுண்டு.

    ReplyDelete
  8. Great people think alike !!
    Dev/Ch

    ReplyDelete
  9. வாங்க தேவராஜன்,
    நீங்கள் சொல்வது நிஜம்தான்.
    உண்மை ஒன்றாக இருக்கும் போது அதை சொல்லவந்தவர்கள் சொல்வதும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. 'मेरी करो संहार' மிகவும் அருமை நண்பரே!!
    dev

    ReplyDelete
  11. हिंदी और तमिल भाषा के साहित्य पर रुचि रखनेवाले मित्रों केलिएएक अत्भुत platform.
    கபீரன்பனின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  12. இந்தி, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அன்பர்களுக்கு இந்த Blog நனறாக அமைந்துள்ளது. बधाईयाँ.

    ReplyDelete
  13. நல்வரவு N ஐயா

    //இந்தி, தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அன்பர்களுக்கு இந்த Blog நனறாக அமைந்துள்ளது//

    இருமொழிகளிலும் வாழ்த்திப் பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார். //

    இறைவனை சரண் அடைவதைவிட வேறு வழி இல்லை நமக்கு.

    நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி