Thursday, August 15, 2013

மனையொட்டி மாமிசக் கடையோ ?

தீண்டத் தகாத சாதியை சேர்ந்த ஒருவன் முக்திக்கு வழி சொல்கிறான். அவனோ ஒரு கைநாட்டு. அவனுக்கு ராமனும் தெரியாது ரஹீமும் தெரியாது ஆனால் எல்லாம் தெரிந்தவன் போல பேசுகிறான். அவனை தேடிப் போக வேண்டுமானால் இறைச்சி  விற்கும் தெருவை தாண்டிச் செல்ல வேண்டும். 

ஆயினும் வேத பண்டிதர்கள் நிறைந்த காசி மகா நகரத்தில் இந்த மனிதனையும் தேடிச் சென்ற பலர்  இருக்கவே இருந்தனர். அவர்களுக்கு அவனுடைய எளிமையான வார்த்தைகள் மிக சுலபமாகப் புரிந்தது. நேர்மையாக உழைத்துப் பிழைக்கும் வாழ்க்கை  நல்ல முன்னுதாரணமாக இருந்தது. நாமசெபத்தில் தளும்பேறிய அவன் வாக்கு உரைத்ததெல்லாம் சத்தியமாய் இருந்தது.  அவனுடைய பார்வையில் எல்லாம் ஒன்றே. 

ஆனாலும் அவனைத் தேடி வந்த அடியவர்களுக்கு சில சங்கடங்கள் எழுந்தன.
முதல் பிரச்சனை கபீர் என்ற அந்த தீண்டத்தகாதவனோடு சகவாசம். இரண்டாவது புலால் விற்கும் கடையருகே போவதும் வருவதும்  உயர் ஜாதியினரிடையே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காரியம் ஆகும். ஏதாவது கோவில் மண்டபமோ கங்கையாற்று படித்துறையிலோ சத்சங்கம் செய்வதானால் போய்வரலாம். ஆனால்  கபீருக்கோ அதில் நாட்டம் இல்லை. அவனைத் தேடிச் சென்றோருக்கு ஞானமுத்துகளை அள்ளி தந்தான். அவனுக்கு அதை மண்டபத்தில் விற்கும் அவசியம் இருக்கவில்லை.  

அவனுடைய குடிசைக்காக கசாப்புக் கடைத்தெருவில் நுழைவதா? பிரச்சனையை நேரடியாகவே அவர் முன் வைத்தனர் சீடர்கள். அதற்கு பதிலும் உடனே கிடைத்தது. 

 कबीरा तेरे झोंपढी   गल कटियन के पास ।
  जो करेंगे सो भरेंगे   तू क्यों भयों उदास  ॥

மனையொட்டி மாமிசக் கடையோ கபீரா, வருந்துவதும் எதற்கு 
வினையொட்டி வாழ்வு வருதே, அவரவர் வினைதரும் அவர்க்கு
மாற்று
பாசவர் பக்கம் வாசமோ கபீரா, வெதும்புதலும் எல்லோ!
பாசவினை பற்றித் திரிவர், தீர்ப்பவரும் அவரே அல்லோ 

[பாசவர் : புலால் விற்பவர் எல்லோ=surprise or pity;ஓர் அதிசயவிரக்கச் சொல்]

கபீரின் மிருதுவான வார்த்தைகள் அவர்களுக்கு மருந்தாக இருந்தது. நமது கர்மவினைகளுக்கானப் பலனை நாமேதான் தீர்த்தாக வேண்டும். நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின்  விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

சேற்றில் முளைத்ததால் தாமரை மலரின் அருமை குன்றி விடுமா? மாமிசக் கடை அருகே இருந்ததால் மகானின் மகிமைதான் குறைந்து போகுமா?. போகாது என்பதற்கு ஆதாரம், அறுநூறு ஆண்டுகளுக்கு பின்னும் அவர் பெருமையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவரைக் குறைத்துப் பேசிய பண்டிதர்கள், வேதவிற்பன்னர்கள் முல்லாக்கள் மௌல்விகள் எனப்படும் பெருமக்கள் யாவரும் காலவெள்ளத்தில் மறக்கடிக்கப்பட்டு விட்டனர். 

இறைவனின் பார்வையில் மனிதகுலம் ஒன்றேதான். அவரவர்கள் செய்த தொழிலுக்கு ஏற்ப வர்ணாசிரம தர்மம் என்பது தானாகவே உருவானது. ஆனால் அதை சாதி என்கிற முலாம் பூசி மேலென்றும் கீழென்றும் பிரித்தது மனிதரின் அறியாமை. அதனால் வரும் சீரழிவை தடுத்து நிறுத்தவே மகான்கள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருக்கின்றனர்.  

கபீருக்கும் முன்பே தோன்றியவர் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர். இவர் ஆதிகுரு தத்தாத்ரேயரின் கலியுக அவதாரமாகப் போற்றி வழிபடப்படுகிறார். காகிநாடா அருகே பிதாபுரத்தில் கி பி 1320 -ல் அவதரித்த இவர் பால்ய வயதிலிருந்தே சர்வக்ஞராகத் திகழ்ந்தார். கிருஷ்ணரைப் போல அற்புத பால லீலைகளைப் புரிந்தார். முப்பது ஆண்டுகள் வாழ்ந்த அவர், தன் அவதார அம்சங்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகில் தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லியுள்ளார். நரசிம்ம சரஸ்வதி, ஸ்வாமி சமர்த்தர், சதாசிவ பிரம்மேந்திரர், ராமலிங்க அடிகள், ராகவேந்திரர், சீரடி சாயி என பட்டியல் வெகு நீளம். அவர் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி:

வாயசபுரம் பீடிகாபுரத்து (இன்றைய காகிநாடா மற்றும் பிதாபுரம்) அந்தணர்கள் இடையே ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது. பிரச்சனை இதுதான் “ வைசியர்கள் காயத்திரி உபதேசத்திற்கு அருகதை உள்ளவர்களா, அவர்கள் பூணூல் அணிந்து காயத்ரி செபிக்கலாமா?”  ஸ்ரீபாதரின் தாய்வழி பாட்டனார் ஸ்ரீ பாப்பனார்யா எல்லோராலும் போற்றப்பட்ட பெரும் வேதவிற்பன்னர் சத்தியசீலர், சரஸ்வதி கடாட்சம் முழுவதுமாய் பெற்றவர். அவரது தீர்ப்பு ‘செய்யலாம்’ என்பதானது. காயத்ரி மந்திரம் செபிக்க சாதி வித்தியாசங்கள் ஆண் பெண் வித்தியாசங்கள் எதுவும்  கிடையாது எனவும் அவரவர் வர்ணாசிரம தர்மத்திற்கேற்ப சில விதிவிலக்குகளை அனுசரித்து எல்லோரும் அந்த மந்திரத்தால் பலனடைய  வேண்டும் என்றார். இதை பல அந்தணர்கள் ஏற்றுக் கொண்டாலும் நரசாவதானி என்பவர் மிகவும் பிடிவாதமாக எதிர்த்தார். 

பின்னர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது ஸ்ரீபாதரே அடைக்கலம் என்று அவரை அடைந்தார். ஸ்ரீபாதர் தானே தத்தாத்ரேயரின் வடிவம் என்பதை அவருக்கும் அவர் மனைவிக்கும் விஸ்வரூப தரிசனம் அளித்து உறுதி செய்தார். அதன் பிறகு அவதார ரகசியங்கள் பற்றிய உண்மைகளை ஸ்ரீபாதரிடம் கேட்டு அறிந்தார் நரசாவதானி. பின்னர் பல நாட்களாக தன் மனதை விட்டு அகலாத வைசியர்கள் பிரச்சனைக்கும் விளக்கம் கேட்டார். அதற்கு ஸ்ரீபாதர் விளக்கம் அளித்தார்.
வயற்றில் அஜீரணம் ஏற்படும் பொழுது நோயாளிகளுக்கு அமிலத் தன்மை உடைய எலுமிச்சை பழம் கொடுப்பார்கள். உடலில் ஒரு பகுதி வீணாகி விட்டாலோ கட்டி ஏற்பட்டாலோ மருத்துவர் அதை கத்தியால் அறுத்து குணப்படுத்துவார்.
நானும் அவரைப் போலவே தான். தெய்வீக விஷயங்களும் பூத பிசாசு அம்சங்களும் என்னுளே உள்ளன. நானே வைத்தியன் போலவும் ஆவி போலவும் பேய் பிசாசு போலவும் சில சமயம் நடப்பேன். என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா,பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான் ஒரு போதும் கை விட மாட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் மேலோங்கிப் பொழிவேன்.வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தர்களையும் நான் என் க்ஷேத்திரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். 
ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது . ஆதி பராசக்தி வைசியர் குலத்தில் கன்னிகா பரமேஸ்வரியாய் பிறக்கவில்லையா? வைசியர் குலத்தில் தேர்ந்த பல சித்தர்கள் உள்ளார்கள்.  பிராம்மணர், சத்திரியர், வைசியர் மட்டுமல்ல சூத்திரர்களும் உபனயனம் செய்து கொள்ள தகுதியானவர்களே ! ஆனால் சம்பிரதாய நெறி முறைகளைக் கடைபிடித்து ஒழுக வேண்டும்.  உபனயனம் செய்வதால்  நெற்றிக்கண் என்ற மூன்றாவது கண் திறக்கப்படும். உள்ளுணர்வு தூய்மை அடைந்து மனதில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம் கூர்மையாக ஒருமைப்படும். உம்முடைய மனம் முழுவதும் காய்கறிக் கடைப் பற்றியே உள்ளது . நீர் என்ன பிரம்மம் என்பது கடையில் வாங்கி விற்கும் பொருள் என்று நினைத்தீரா? ஒரு பிராமணன் அடுத்த பிறவியில்  பறையனாகப் பிறக்கலாம். ஒரு பறையன் அடுத்த பிறவியில் பிராம்மணனாகப் பிறக்கக்கூடும். பர பிரம்மமானது காலம் தூரம் ஜாதி மதம் இவை அனைத்தையும் கடந்த ஒன்று. கடவுள் மனிதனின் உள் நிலையையே விரும்புகிறார். புற அழகை அல்ல. கடவுள் உங்கள் உள்ளுணர்விற்கு ஏற்பவே வேலை செய்கிறார். 
பிரும்மத்தைப் பற்றிய விவாதம் வரும் போது நான் ஒரு பிராம்மணன். பக்தர்களின் நலன் கருதி சபை கூட்டி அவர்களுக்கு தேவையானதை அளிக்கும் போது நான் க்ஷத்திரியன். ஒவ்வொரு உயிருக்கும் அதன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒரு மதிப்பு நிர்ணயம்  செய்யப்படும். ஒவ்வொருவருடைய மதிப்பும் என்னிடம்தான் உள்ளது. ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பொருத்தமானது என்று அளந்து  கணக்கிடும் போது நான் ஒரு வைசியன் போல் ஆவேன். மக்களுக்கு சேவை செய்ய என் உடலில் அவர்களை என்னுள் சேர்த்துக் கொள்ளும்போது என் பக்தனின் அனைத்து துன்பங்களையும்  வலியையும் நான் தாங்கிக் கொள்கிறேன். அப்பொழுது நான் ஒரு சூத்திரன். உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளின் பாவத்தைக்  கழுவி விடும் பொழுது நான் வண்ணான். இறந்தவர்களின் உடலை எரித்து சாம்பலாக்கி அவர்களுக்கு நற்பிறப்பு அளிக்கும் போது நான் ஒரு சுடலை மாடன். 
இப்போது யோசித்து கூறு நான் என்ன சாதியை சேர்ந்தவன் என்று! 
   [ ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதம் - அத்தியாயம்- 7 : ஆங்கில மூலம்  Sripada Srivallabha                Mahasamsthan, Pithapuram - pin 533450  Andhra Pradesh]
இந்த சரிதாம்ருதம் முழுவதும் சாதி வித்தியாசங்கள் இன்றி எப்படி ஸ்ரீபாதர் எல்லா வகை மக்களுக்கும் தன் அருளைப் பொழிந்தார் என்பது காணக்கிடைக்கிறது. மற்றொரு அத்தியாயத்தில் வர்ணாசிரம தர்மம் என்பது பிறப்பை ஒட்டி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதும் விளக்கப்படுகிறது
ஒரு பிராம்மணன் (உண்மை) சத்தியத்தை, பிரம்மத்தைக கண்டுபிடிக்க விரும்புபவனாக இருக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு வைசியன் விவசாயம், பசுக்களை ரக்ஷிப்பது, சிறந்த வியாபாரம், வாங்குதல், விற்றல் புரிய வேண்டும். அதனால் அவன் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு சூத்திரன் கருணையும், அன்பும் கொண்டவனாக சேவை செய்யும் மனதுடன் இருக்க வேண்டும். சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு  தெய்வீக அருளைப் பெறுவதற்கு கிடையவே கிடையாது. ஒரு பிராம்மணன் க்ஷத்ரிய தர்மத்தை அனுஷ்டித்து அரசனாக ஆகலாம். ஒரு க்ஷத்ரியன் பிரம்மத்தைக கண்டுபிடிக்க விரும்புபவனாக பிராம்மண தர்மத்தை அனுஷ்டிக்கலாம். குசும சிரேஸ்டி என்ற ஒரு வைசியன் க்ஷத்ரிய தர்மத்தை கடைபிடித்து அரசனாக வரவில்லையா? பிராம்மண தர்மத்திற் கிணங்க ஒரு எதிரியைக் கொலை செய்வது பாபம். ஆனால் க்ஷத்ரிய தர்மத்தில் அது கடமை என கூறப்பட்டுள்ளது. நீ ஒரு பிராம்மணன். சத்தியத்தைத் தேட வேண்டியவன். ஆகையால் அஹிம்சையே உனக்கு மிகச் சிறந்த கடமை,  உயிர்க்கொலை புரிவனுக்கு  அஹிம்சை தர்மம் அல்ல. இறைச்சி விற்பவனுக்கு அல்ல.
ஆகையால் எவனெருவன் சிறந்த, உரிய பலனை அவன் செயல்களிலிருந்து எதிர்பார்க்கிறானோ அவன் தான் மேற்கொண்ட தர்மத்திற்கான செயலை அனுசரித்து தர்மத்தை ஒட்டி எந்த குலமாக இருந்தாலும் வேறுபாடின்றி செய்ய வேண்டும். (அத்தியாயம்-2)
எந்த மகானும் எக்காலத்தும் ஜாதிப் பிரிவுகளை ஆதரிக்கவில்லை. ஸ்ரீபாதரும் கபீரும் சொல்வது போல அவரவர் வினைகளுக்கு ஏற்பவே விளைவுகள் தீர்மானிக்கப்படுகிறது. இன்று வெறுப்பை விதைப்பவன் பின்னொரு நாளில் வேறொரு காரணம் முன்னிட்டு  பிறர் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வான். 
அன்பால் மனதை விரிவாக்கிக் கொள்வதுதான் சாதிபிரிவினைகள் ஒழிய ஒரே வழி. ஆனால் வெறுப்பெனும் விஷவிதைகள் நம் மனதுள் களைகளை போல வேர் விடாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமானால் நம்முடைய தரப்பிலிருந்தும் சிறிது உழைக்க வேண்டும். நாம் யாவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ள வேண்டும். இடைவிடாது அவனுடைய நாமத்தை பற்றிக் கொள்ள வேண்டும்.  அதை கபீர்தாஸர் இப்படி உரைக்கிறார்
पखा पाखी के कारने, सब जग रहा भुलान | 
निरपख होयके हरी भजे, सोई संत सुजान || 

பிரிவினை பேசிய காரணம், பிளந்து நிற்குது மானுடம்
பிரிவினை மறந்தே தொழுவார், விழுமிய பக்தர் அரிபாதம்

இன்று நம் நாடு சுதந்திரதினம் கொண்டாடுகிறது. உண்மை சுதந்திரம் வெளியே இருந்து கிடைப்பதல்ல. வேற்றுமை உணர்வுகள்தாம் நம்மை குறுக்கி தளைகளை உருவாக்கும் சக்தி. வேற்றுமைகளை மறந்து சகோதரபாவம் பெருகும் போது சுதந்திர உணர்ச்சியும் அதிகரிப்பதை உணரலாம். ஆன்மீக சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரத்தை விட மிகப் பெரியது. அதற்கான வழிகளை மகான்கள் நமக்குக் காட்டிக் கொடுத்துள்ளார்கள்.
பாரததேவி அனைவருக்கும் மகான்களின் பாதையை கடைபிடிக்க அருள்புரிவாளாக .

Sunday, April 14, 2013

சிந்தை கொள்ளும் விஷயப் பிரமை

ஒரு பெரும் பணக்காரர் கண்டிப்பான விடுமுறை எடுத்துக்கொண்டு  யாருடைய உபத்திரமும் இல்லாத தன்னுடைய தீவு பங்களாவில் சில தினங்களைக் கழிக்கச் செல்லுகிறார். அலைபேசி, தொலைபேசி, கணிணி மூச் !! எதுவும் கிடையாது. 

அடர்ந்த தென்னந்தோப்பு. அமைதியான கடலலையின் ஓசை; நினைத்த போதெல்லாம் கடல் நீராட்டம். கேட்ட போதெல்லாம் தித்திப்பான இளநீர் வெட்டிக் கொடுக்க களங்கமில்லா சிரித்த முகத்துடன் ஒரு வாளிப்பான இளைஞன். மரங்களுக்கிடையே கட்டப்பட்ட வலைத்தொட்டிலில் மதியத் தூக்கம். சற்றே மாறுதலான நாட்கள் அவருக்கு உற்சாகம் ஊட்டியது.

தன் கடின உழைப்பால் தான் முன்னேறி வந்த பாதை அவர் மனத்திரையில் நிழலாடத் தொடங்கியது. இந்த இளைஞன் கேட்பாரில்லா தீவில் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறானே என்ற எண்ணமும் தோன்றியது.

" நீ என்னுடன் அமெரிக்காவுக்கு வந்து விடேன். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”
“வந்து என்ன செய்ய வேண்டும் ஐயா?”
“உன்னை ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். நன்றாக தொழில் கற்றுக் கொள்ளலாம்”
”அப்புறம்?”
”திறமையை வளர்த்துக் கொண்டால் நீயே தொழில் துவங்கலாம்.”
”அப்புறம்?”
”உன்னைத் தேடி நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். செல்வம் பெருகும்”
“அப்புறம் ?”
“நீ வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். என்னைப் போல் சொந்தக் கப்பல், ஒரு தீவு பங்களா போன்றவற்றைக் கூட வாங்கும் அளவுக்கு செல்வம் சம்பாதிக்கலாம்”
“அப்புறம்?”
‘ இதென்ன கேள்வி? இப்போது என்னால் எப்படி சந்தோஷமாக விடுமுறையை கழிக்க முடிகிறது பார்த்தாயா ! அது போல் நீயும் சந்தோஷமாக இருக்கலாம்” “
”இப்பொழுதும் நான் சந்தோஷமாகவேத் தானே இருக்கிறேன். அதை ஏன் அமெரிக்காவுக்கு வந்து [தொலைத்து] பின்னர் இந்த தீவுக்கு தேடிக் கொண்டு வர வேண்டும்?”

இளைஞனின் அப்பாவித்தனமான கேள்வி அந்த பணக்காரரின் அகக்கண்ணைத் திறந்ததோ இல்லையோ கண்டிப்பாக நம் யாவரது சிந்தனையையும் தூண்டக்கூடியது தான்.
ஏதோ ஒரு கண்மூடித்தனமான வாழ்க்கைப் போக்கு. எதற்கு ஏன் என்று சிந்திக்கக் கூட அவகாசம் இல்லாமை. இந்த பொருள் ஈட்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இறைவன் பால் கவனத்தை திருப்புவது என்பது அனேகமாக இல்லை என்றே ஆகிவிட்டது.
தினசரி சுவாமிக்கு விளக்கேற்றுதல், ஏதோ சிறிது தானம் தருமம் செய்தல், அவ்வப்போது கோவில் தீர்த்தம் என்று சுற்றி வருதல் முடிந்தால் கதாகாலக்‌ஷேபமோ சத்சங்கமோ என்று மாதத்தில் ஓரிரு மணி நேரம் செலவழித்தால் அதுவே பெரிய விஷயம். நாம் மிகவும் சாத்வீகமான வாழ்க்கை கைகொண்டு இறையன்பராகி விட்டோம் என்ற போலி திருப்தி மனதுள் குடிகொண்டு விடுகிறது. 

தொலைக்காட்சி முன் அமர்ந்தால் ஏதேனும் செய்தி சானலில் லட்சம் கோடிகள் ரூபாய் ஊழல் பற்றி விஸ்தாரமாக விவரணை. சென்ற வருட ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் மறந்து போயாச்சு.
சென்ற நூற்றாண்டில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கப்பல் கப்பலாய் இந்திய மக்கள் உலகின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் வயிற்றுப் பிழைப்புக்காக கடல் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் என்றும் ஒன்றே! எப்போதும் நம்மைப் பற்றிய எண்ண ஓட்டங்களே மனதை ஆக்கிரமித்துக் கொள்ள, காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறோம்.

காலையில் தவறாது நீராடி, இறைவனைத் தொழுவது என்பது ஒரு சடங்காகிப் போனது.  இதில் ஏதாவது நமது ஆன்மாவின் முன்னேற்றத்திற்கு உதவுகிறதா ? இப்படி மக்கள் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றனரே என்கிற ஆதங்கம் கபீர் அவர்களின் ஈரடியில் வெளிப்படுகிறது.

आतम द्रुष्टि जानै नहीं न्हावै प्रादहि काल ।
लोक लाज लीया रहै, लागा भरम कपाल ॥

ஆத்மாவைக் கண்டா ரில்லை,அதிகாலை நீராடுவர் நிதம்நிதம்
பாத்திரமில்லா விஷயப் பிரமையும்  நிரம்புதே சிந்தை முழுதும்

(பாத்திரம் =தகுதி, அருகதை;)
இப்படி அருகதையற்ற செல்வத்தை சிந்தையில் இருத்தி மருகிய திருவெண்காடரை மருதவாணர் வடிவில் மகனாய் தோன்றிய சிவபெருமான் அவருக்கு ஆத்மசாட்சாத்காரம் வழங்க செய்த நாடகம்தான் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”. தம் மகனுக்கு முற்றிலும் சிவானந்தப் பேறு எய்தும் பக்குவம் வந்திருப்பதை அறிந்த அவருக்கும் பற்றற்ற துறக்கும் பக்குவம் வந்தெய்தியது.

பட்டைக் கிழித்துப் பருவூசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டி என் மெய்குழலாள் கையில் முன்கொடுத்து
கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்
விட்டுப்பிரியவென்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே.

 
என்ற எண்ணத்துடன் செல்வமெல்லாவற்றையும் சேந்தனார் என்ற கணக்கரிடம் ஒப்புவித்து வேண்டியவர்களுக்கெல்லாம் வழங்குமாறு பணித்து ஊர் பொது மண்டபத்தில் சென்று நிட்டையில் ஆழ்ந்தார். உண்மை அறியாத மன்னன் சேந்தனார் திருவெண்காடரை ஏமாற்றி பொருள் அழிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை சிறை செய்யச் சொல்லி அடிகளைக் காண பொது மண்டபம் சேர்ந்தான்.
”துறவறம் பூண்டதால் தாம் பெற்ற பயன் யாது ?” என்று அடிகளாரிடம் வினவினான்.  அவரிடம் சிவானந்தப் பேற்றைச் சொல்லி புரிய வைக்கக் கூடிய தருணம் அல்ல அது. அதற்கான தகுதியும் மன்னனிடம் கிடையாது.
அவர் புரிந்துகொள்ளும் வகையிலே, நயமாக
”மன்ன ! நீ நிற்க யாம் அமர்ந்திருப்பதுமான இதுவே எம் துறவின் பயன் “ என்று பதிலுரைத்தார்.

பின்னொரு நாளில் அவர் கபீர் சொல்லும் ஆத்மதத்துவத்தைக் கண்ட பின்னர் பாடுகிறார்

விட்டேன் உலகம். விரும்பேன் இருவினை. வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன். மெய் கெடாத நிலை
தொட்டேன். சுகதுக்கம் அற்று விட்டேன் தொல்லை. நான்மறைக்கும்
எட்டேன் என்னும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப்பு ஒன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.


நான்கு வேதங்களுக்கும் அட்டாங்க யோகத்திற்கும் பிடிபடாத ஒரு பேரின்ப நிலையாகப் போற்றுகின்றார் பட்டினத்து சித்தர்.
நமக்கும் அது எட்டாத வரை சித்தர் பெருமக்களின் பார்வையில் நாமெல்லாம் வீணர்கள்.

அதனால் தான் அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து பல அரிய செயல்களை செய்து வழிகாட்டுவதாகக் கேள்வி.

கபீர்தாஸர் சொல்லும் விஷயப் பிரமை வெறும் பொருளீட்டலுக்கு மட்டுமல்ல. அதிகாரத்தை வேண்டி அல்லது புகழ் வேண்டி செய்யப்படும் அனைத்து செயல்களும் அதில் அடக்கம். இறுதியில் எஞ்சப்போவது ஒன்றும் இல்லை.

நேற்றுதான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் சரித்ராமிருதம் படித்து முடித்தேன். சுமார் 1300 வருடக்களுக்கு முன் ஆந்திராவில் பிதாபுரம் என்ற ஊரில் அவதரித்த அவர் அப்போதே சமர்த்த ராமதாஸர், ராகவேந்திரர், சதாசிவபிரம்மேந்திரர், ராமலிங்க அடிகள் சிரடி சாயி இன்னும் பல மகான்களின் அவதாரத்தை முன்னுரைத்திருக்கிறார்.  ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் சித்தர்கள் எப்போதும் இந்த உலக சேமநலத்தை கண்காணித்து வருகின்றனராம்.

மேலும் அறிய :  வாழ்க்கை வரலாறுஸ்ரீபாத ஸ்ரீவல்லப சமஸ்தானம் 

தர்மத்தின் பாதையில் இருப்பவர்களுக்கு ஒரு கெடுதலும் வராது என்ற நம்பிக்கையுடன் நமக்களிக்கப்பட்ட நேரத்தை இறை நாமத்தில் செலவிட்டு மகான்கள் போற்றும் பாதையாக புத்தாண்டு ”விஜய” வருடத்தை வரவேற்போம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.