Saturday, March 12, 2011

கோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்

ஆவுடையக்காள் தொடர்ச்சி.......

தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு அத்வைத கருத்தரங்கத்தில் பங்கேற்று கருத்து சொல்ல முற்பட்டபோது ‘யாரிந்த மொட்டை’ என்று இளப்பமாய் அவரை பேச விடாமல் தடை செய்ய சிலர் முயன்றனர்.

‘யார் மொட்டை? என் உடலா, மனமா பிராணனா அல்லது என் ஜீவனா ? அல்லது என் ஆத்மாவா? நானென்பது என்ன ? நான் எப்படி மொட்டையாக முடியும் ? ( மொட்டை என்றால் பூரணமற்ற தன்மை, அறிவின்மை என்ற பொருளும் உண்டு)

பூரண ஞானமுள்ள அவரைப் பார்த்து அரைகுறைகள் கேட்ட பொருத்தமற்ற கேள்விக்கு தன் ஞான அனுபவத்தினாலேயே பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார். அவருடைய பாடல்களில்தான் எத்தனை வகையான வேதாந்த விளக்கங்கள், அனுபவ விசாரங்கள், ராஜயோக ரகசியங்கள், நடைமுறை உதாரணங்கள்... சொல்லி மாளாது.

அன்னே-பின்னே : வேதாந்தசார கும்மியிலிருந்து சில கேள்வி பதில்கள்:

குருவாகி வந்தவன் ஆர்? சிஷ்யனாகி போனவன் ஆர்?
கூசாமல் எந்தனுக்குத் தெரியச் சொல் அன்னே
தத் எனும் பதம் குரு, த்வம் எனும் பதம் சிஷ்யன்
சோதித்தால் சப்தம் இரண்டும் சுத்தப் பொய் பின்னே

என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி அன்னே
தன்னை மறந்தால் உருக்கும், தன்னை அறிந்தால் ஒளிக்கும்
சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி பின்னே

ஜீவனிருந்தால் அன்றோ தேக இந்திரிய விஷயங்கள்
ஜெனித்து மரித்து அலையப் போகிறது அன்னே
பாவனை எனும் ச்ருதி யுக்தி அனுபவம் வந்தவர்க்கு
சொற்பனத்தில் கற்பிதம் போல தோற்றம் காண் பின்னே

-------------------------------
தொட்டில் பாட்டு ( அனுபவ விசாரம்)

ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்
உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்
ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்

புத்தியில்லை மனமும் இல்லை அத்வைதம் தானே
முக்தியில்லை பந்தம் இல்லை என்று எனக்குச் சொல்லி
யுக்தி சொன்ன குரு வெங்கடேசுவரர் கிருபையால்
பக்தியுடனே பணிந்து அகண்டமானேன் சிவோஹம்
.
--------------------------------
மோஹன ராக கீர்த்தனையின் சில சரணங்கள்:
(நடைமுறை உதாரணங்கள்)
இருளை இரும்பு உலக்கையினால் அடித்து ஓட்டினால் போகுமோ
எருதைப் பிடித்து கறந்ததினால் ஒரு பிள்ளைக்கு பால் ஆகுமோ
அவனியில் உண்டான கர்மமெல்லாம் செய்தால் அதனால் அவித்யை போகுமோ
தத்வப் பொருள் ஸ்வானுபூதி இல்லாது சாஸ்திரத்தால் ஸ்வப்பிரகாசமாகுமோ

கையிலுள்ள நெல்லிக்கனியைக் காண கண்ணாடி பார்ப்பானேன்
மெய் ஆபரணம் கழுத்திலிருக்க வீடெங்கும் தேடுவானேன்
பொய் ஆன இந்தப் பிரபஞ்சத்தை தூர விரட்டியபின்
மெய்யாய் நிறைந்த பரபிரம்மம் தானென்றறிய அலைவானேன்?

-----------------------------------------
ஆரபி ராக கீர்த்தனை ஒன்றின் சில வரிகள்:
(ராஜயோக ரகசியங்கள்)
பிரணவ நிலையறிந்து பிராணாயமாம் செய்வாயானால்
பிறக்கவும் இறக்கவும் வேண்டி வருமோடா
................
மனதை ஜயிக்க ஜீவா உன்னாலே ஆகுமோடா
வாசி வசத்தாலே மனதை வசமாக்கடா
................
பூரகம் முப்பத்திரெண்டு கும்பகம் இரட்டியாகக் கொண்டு
ஈரண்டு ரேசகத்தை விட்டு நீ பாரடா- ஏழெட்டு
நாளைக்கெல்லாம் இவ்விதம் செய்வாயானால்
வாசி வசமாகும் நீ யோசனை செய்யாதேடா


முழு ஞானியான அவர் முன்னே வெறும் சாஸ்திர அறிவுள்ளவர்கள் எம்மாத்திரம்!! அவருடைய பெருமை புரிந்ததுமே பலர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினர்.

ஆனால் இன்றைய தினங்களைப் போலே செய்திகளை அந்நாட்களில் உடனுக்குடன் எல்லோருக்கும் எடுத்துச் செல்ல சாதனங்கள் இருக்கவில்லையே ! ஆவுடையக்காளோ அகங்காரமற்று தேகப் பிரக்ஞையின்றி உடலை சுமந்து திரிந்தவர். அதனால் அவரைப் புரிந்து போற்றியவர்கள் மிக மிக சொற்பமாகவே இருந்தனர்.

ஒருவருடைய பெருமை புரியாவிட்டாலும் போகட்டும், இழிவாக நடத்தாமலாவது இருக்கலாமில்லையா? ஆனால் நடந்ததென்னவோ அதுதான். அக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர். இப்படி அவர் சந்திக்க வேண்டியிருந்த எதிர்ப்புகளும் அவமானங்களும் கபீர்தாஸ் அவர்களின் ஒரு ஈரடியை நினைவுபடுத்துகிறது.

साकट कहा न कहि चलै, सुनहा कहा न खाय ।
जो कौवा मठ हगि भरै, तो मठ को कहा नशाय ॥


அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத பண்டமில்லை
காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை


(அவநீதி= நம்பிக்கையின்மை, அற்பம் =நாய்)


ஆணவத்தாலும் அறியாமையாலும் பேசுபவர்கள் அவநீதியோர். அவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகர்களில் இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறருடைய நம்பிக்கைகளை மதித்து பொறுப்புடன் இனிமையாக பேசுவோர் உண்டு.

ஆனால் உண்மையை உள்ளபடி அறிய முயற்சிக்காமல் எல்லாம் அறிந்தவர் போல பொறுப்பின்றி பேச விழையும் அரைகுறை ஆத்திகர்களையே ’அவநீதியோர்’ என்ற சொல் குறிக்க வந்தது. கண்டதையெல்லாம் வாயில் கடித்து ருசி காண விழையும் நாயைப் போல அவர்கள் ’தமக்கு புரியாத விஷயங்கள் பற்றியும் அபிப்பிராயம் சொல்ல முற்படுபவர்கள்’ என்பதாக கபீர் சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய பேச்சுக்கள் (அல்லது ஏச்சுக்கள்) காக்கைகள் எல்லாம் கூடி எச்சமிடுவதைப் போலவாம். அதனால் கோபுரம் சாய்ந்து விடுமா அல்லது அதன் பெருமைக்குத்தான் களங்கம் வருமா?

சான்றோர்கள் இப்பேற்பட்ட இழிவுரைகளால் மனம் சஞ்சலப்படாமல் தம் வழியே செல்கின்றனர்.

ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.

ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’ என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார். அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.

அந்த நிகழ்ச்சி மூலம் அக்காள் தமது குருபக்தியை மட்டுமல்லாமல் குருவின் பெருமையையும் அற்புதமாக உலகிற்குப் புரிய வைத்தார் எனலாம்.

(அக்காளைப் பற்றி எழுத ஆரம்பித்த பின்னர் எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்த இடுகையில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.)

ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (Published by Divine Life Society, ISBN 81-7052-095-9) என்கிற புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.

10 comments:

  1. //அக்காளைப் பற்றி எழுத ஆரம்பித்த பின்னர் எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்த இடுகையில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.//

    உங்கள் மனம் நிறைவு கொள்கிற வரை அக்காளைப் பற்றித் தொடர்ந்து எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பார்வையில் கோர்வையாக நீங்கள் சொல்வது, இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் தகவல்களை சேர்த்துப் படித்து மனதில் பதித்துக் கொள்ள வசதியாக இருப்பது மட்டுமில்லை, அங்கங்கே கபீரின் அனுபவக் கீற்றுகளும் பளிச்சிட்டுப் போவது இருபெரும் ஞானிகளின் சிந்தனைகளை ஓர்ந்து தெரிந்து கொள்கிற வாய்ப்பும் கிடைக்கிறது. ஆகத் தொடர்ந்து எழுதுங்கள்.

    இந்தப் பதிவில் தெரிந்து கொண்டவைகளின் கலந்துரையாடலுக்காகப் பிறகு வருகிறேன்.

    மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  2. தங்களுடைய ஆர்வம் கண்டு மகிழ்ச்சி ஜீவி ஐயா,

    //கலந்துரையாடலுக்காகப் பிறகு வருகிறேன் //

    தங்கள் மேலான கருத்துகளுக்கு காத்திருக்கிறோம்.:) நன்றி

    ReplyDelete
  3. ஆவுடையக்காளை பிறர் நடத்திய விதம் கண்டு மனம் கலங்கியது. ஆனால் நீங்கள் சொன்னபடி, அவர் சான்றோராதலால், சஞ்சலப்படாமல் இருந்திருக்கிறார். குரு அய்யர்வாளின் அன்பும், அவர் சீடர்களுக்கு பாடம் புகட்டிய விதமும் மனதைத் தொட்டன. மிகப் பொருத்தமான ஈரடிகளுடன் தந்திருக்கிறீர்கள். ஜீவி ஐயா சொன்னது போல் எழுத முடிந்த வரை அவரைப் பற்றி எழுதுமாறு நானும் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. வருக கவிநயா,

    //..முடிந்த வரை அவரைப் பற்றி எழுதுமாறு நானும் கேட்டுக் கொள்கிறேன்...//

    கண்டிப்பாக முயற்சிக்கிறேன். தாங்கள் வாசிப்பிற்கும் ஆர்வத்திற்கும் நன்றி

    ReplyDelete
  5. //ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்
    உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்
    ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
    ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்//

    அண்டத்தில் உள்ளவர்தான் பிண்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டால் நல்லது .
    அது தெரியவில்லை என்றால் எத்தனைப் படித்து இருந்தாலும் பயனில்லை என்று என்ன அழகாய் சொல்லிவிட்டார் அக்கா.

    நீங்கள் சொன்னது போல் எதை குறிப்பிட்டு நான் சொல்ல எல்லாமே அற்புதமான் சிந்தனைகள்.

    அடுத்த இடுகையில் நிறைவு செய்ய வேண்டும் என்று இல்லை இன்னும் எவ்வளவு எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவரை எழுதுங்கள் படிக்க ஆவலாய் உள்ளது.

    நான் ஊரிலில் இல்லாததால் தாமதமாய் பின்னூட்டம்.

    ReplyDelete
  6. நல்வரவு கோமதி மேடம்,

    //நான் ஊரிலில் இல்லாததால் தாமதமாய் பின்னூட்டம் //

    அதனால் என்ன ? :)

    யாவுமே அவன் நிச்சயிக்கும் நேரப்படித் தான் நடக்கின்றது இல்லையா?

    //..எதை குறிப்பிட்டு நான் சொல்ல எல்லாமே அற்புதமான் சிந்தனைகள்.//

    தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //தத் எனும் பதம் குரு, த்வம் எனும்
    பதம் சிஷ்யன்
    சோதித்தால் சப்தம் இரண்டும் சுத்தப் பொய் பின்னே//

    //தன்னை மறந்தால் உருக்கும், தன்னை அறிந்தால் ஒளிக்கும்
    சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி பின்னே//

    //பாவனை எனும் ச்ருதி யுக்தி அனுபவம் வந்தவர்க்கு
    சொற்பனத்தில் கற்பிதம் போல தோற்றம் காண் பின்னே..//

    //ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
    ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்..//

    -- மேலே கண்ட வைர வரிகள் போதும், அக்காளின் வேதாந்த ஞானப் பிரகாசத்தை எடுத்துச் சொல்ல..

    அத்தனையும் அவரது அனுபவம். அந்த அனுபவத்தைத்தான் ஞான ஊற்றாக சாறு பிழிந்து தந்திருக்கிறார். இந்த ஞானம் தான் அக்காளை மற்றவர்களிடமிருந்து பிரித்தும் காட்டுகிறது.

    அக்காள் சகித்துக்கொண்ட பல துன்பங்களுக்குக் காரணம், அவர் மற்றவரை விட மிக உயர்ந்த நிலையில் இறைவனின் அருகாமையைப் பெற்றது தான்.
    பெண் என்பது வேறு சேர்ந்து கொண்டது.

    ஆனால் அவர் அடைந்த இந்த உயர்ந்த நிலையின் உணர்வே அவர் அடைந்த எல்லாத் துன்பங்களுக்கும் மருந்தாயிற்று.

    பக்தி என்பது காலத்திற்குக் காலம் மாறுபட்டு வருகிறது. தெளிவாகச் சொல்லப் போனால், ஆகச் சிறந்த உணர்வுகளின் மேன்மை தொலையத் தொலைய அவற்றின் தாத்பரியங்களும் தொலைந்து போகின்றன.

    இறை பக்தியின் உச்சம் கண்டபின், தேங்கி அங்கேயே தயங்காது, அதன் அடுத்த நிலைக்குத் தாவி சந்தோஷிக்க வைத்ததே இறை ஞானம். இது,எல்லா உயிர்களிடத்தும் அவனை தரிசித்த உயரிய நிலை.
    எந்த தேக்கமும் இயற்கையின் ஓட்டத்திற்கு முரணானது. அதனால் தேக்கத்தைத் தாண்டிய இந்த நிலையும் உயரிய ஒன்றாயிற்று.

    இறைபக்தியும், இறைஞானமும் முரணான ஒன்றில்லை என்பதை எடுத்துக் காட்டவே அக்காவும்,

    "புத்தியில்லை மனமும் இல்லை அத்வைதம் தானே
    முக்தியில்லை பந்தம் இல்லை என்று எனக்குச் சொல்லி
    யுக்தி சொன்ன குரு வெங்கடேசுவரர் கிருபையால்
    பக்தியுடனே பணிந்து அகண்டமானேன் சிவோஹம்."

    --என்று தெளிவாகச் சொல்கிறார்.

    அக்கா காட்டும் பக்தி இது. சொக்கத் தங்கமாய், ஜோதி ஸ்வரூபமாய் ஜொலிப்பதும் இதுவே.

    ReplyDelete
  8. நன்றி ஜீவி ஐயா,

    //ஆனால் அவர் அடைந்த இந்த உயர்ந்த நிலையின் உணர்வே அவர் அடைந்த எல்லாத் துன்பங்களுக்கும் மருந்தாயிற்று...//

    அக்காளுடய உயர்ந்த நிலை அனுபவங்கள் எல்லா மக்களுடைய துன்பங்களுக்கும் ஆறுதல் அளித்து நிவர்த்திக்க வல்ல மருந்தாக பயன் தருவது இன்னமும் போற்றுதலுக்கு உரியது.

    மீள் வருகைக்கும் ஆழ்ந்து படித்துணர்ந்த கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்
    உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்
    ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
    ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்//

    என்ன ஆச்சரியமான ஒரு பாடல்?? எனக்குச் சொன்னாப்போலவே இருக்கே. எக்காலத்துக்கும், எவருக்கும் பொருந்தும் பாடல். என்ன படிச்சாலும் ஞானம் பெறவில்லை எனில் என்ன பயன் என்பதைத் தெளிவாய் எளிமையான பாடலின் மூலம் சொல்லிட்டாரே!


    பொய் ஆன இந்தப் பிரபஞ்சத்தை தூர விரட்டியபின்
    மெய்யாய் நிறைந்த பரபிரம்மம் தானென்றறிய அலைவானேன்?
    -----------------------------------------
    பொய்யாய் ஆனதுனு தெரியாமச் சிலர் இருந்தாலும் தெரிஞ்ச பலரும் பிரம்மத்தையா தேடி அலையறாங்க?? ஆவுடையக்காளுக்குத் தெரிஞ்சது எல்லாருக்கும் தெரியலையே! :(

    அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத பண்டமில்லை
    காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை//

    இதுவும் அருமையா இருக்கு. எங்க பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு. சூரியனைப் பார்த்து நாய் குரைச்சாப்போல எனக்கூறுவார்கள். அதனால் சூரியன் ஒண்ணும் தன் பயணத்தை நிறுத்துவதில்லையே, இங்கே ஆவுடையக்காள் சொல்வது கிட்டத்தட்ட அப்படினு சொல்லலாமா?? தப்பாய்ச் சொல்லிட்டேன் எனில் மன்னிக்கவும். பெரியோரை யார் இகழ்ந்தாலும் அந்த இகழ்ச்சியால் அவங்களுக்கு இன்னும் புகழ் தான் சேரும். அவங்களை இகழ்ந்தவர்களுக்கே அவமானம் என்பதே நான் புரிந்து கொண்ட பொருள். வேறு பொருளும் இருக்கலாமோ?

    ReplyDelete
  10. அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத பண்டமில்லை
    காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை//

    கபீரின் பாடலின் தமிழாக்கத்தைக் கபீர் பாடல் எனக் குறிப்பிடாமல் ஆவுடையக்காளின் பாடலோடு சேர்த்துவிட்டேன், மன்னிக்கவும், அப்புறமாத் தான் கவனிச்சேன். அதுக்குள்ளே பின்னூட்டம் க்ளிக் செய்து போயிடுச்சு! :((((((((

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி