Monday, March 28, 2011

கோட்டான் அறியுமோ மார்த்தாண்டன் மகிமை ?

(ஆவுடையக்காள் தொடர்ச்சி...4.)

மனதிற்கு உபதேசம் செய்வது உலக மக்களுக்கு உபதேசம் செய்வதற்கான ஒரு யுக்தி. ஆகையால் பல ஆன்றோர்கள் பாடல்களை மனதிற்கு உபதேசம் செய்வது போல அமைத்துத் தந்திருக்கிறார்கள். அவ்வகையில் தன்யாசி ராகத்தில் ஆவுடையக்காள் இயற்றிய ஒரு பாடலைக் காண்போம்.

பல்லவி
அவித்தை வசத்தை அடையாதே மனமே
ஆனந்தாப்தியில் அமர்ந்திராய் மனமே


அனுபல்லவி

கொஞ்சமாய் ஒரு வித்தை படித்தால்
பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ண மண்டலத்தில்
மிஞ்சின பேருண்டோ என்பார்
கொஞ்சியே கர்வத்தை அடைந்து கொக்கரிக்கும், மனமே


சரணம்
பக்த ஜனங்களான பேர்கள், மனமே
உத்தம சுலோகனை கீர்த்தனம் செய்தால்
கத்துகிறாளென்று சொல்லுவார்
ஸர்வகாலமும் காது கேட்கப்படாமல் கரிக்கும் ( அவித்தை)

ஸாதுக்கள் கதையைக் கேட்க, மனமே
சிரத்தை உள்ளவன் போலே வந்து தலையாட்டி கேட்கும்
வாதுக்காகிலும் இங்கே வருவார்
மகத்தானத் தர்க்கத்தால் வாய் மூட அடிக்கும் (அவித்தை)

அஞ்ஞானமானதோர் விருக்ஷம் மனமே, அதில்
அனுதினமும் காம குரோத லோப மோகங்கள் தளிர்க்கும்
ஞானமாகிற கத்தியாலே அதை வேரோடு வெட்டி
வெங்கடேசுவரரைச் சேராய் ( அவித்தை)


அவித்தையின் லட்சணத்தை சொல்வதன் மூலம் அஞ்ஞானிகளின் போக்கையும் படம் பிடிக்கிறார் அக்காள். சத்சங்கங்களுக்குள் வந்து தம்முடைய பாண்டித்தியத்தை தர்க்க வாதங்கள் மூலம் காட்டிக் கொள்ள முற்படுவோர் பலர்.

இறைவனுடைய புகழ் பாடுகின்ற இடத்தில் சுருதி, லயம், குரல் வளம் போன்ற இசை லட்சணங்களையே பிரதானமாய் வைத்து பாடத் தெரியாதவர்களை ’கத்துகிறாள்’ என்று குறைசொல்வதும் ஒருவகையில் பாண்டித்திய கர்வத்தையே குறிக்கும். தங்களை மிஞ்சிய பேர் கிடையாது என்று கொக்கரிக்கும் மனது உடையவர்கள் அவர்கள்.

அக்காள் சொல்வது போல் அனுதினமும் அவர்களுள் அஞ்ஞானம் விதவிதமாக துளிர்விட்டு பெரிய மரம் போல் வேர் விடுகிறது.

அவர்களுக்கு ஞானிகளின் உபதேசம் மனதில் ஏற்புடையதாகாது. அவர்களிடம் ஞானிகளின் பெருமைகளைப் பற்றி எடுத்துக் கூறினாலும் பயன் இருக்காது. உள்ளத்தில் அவ்வளவு இருட்டு. சகமனிதரை எடை போடுவது போலவே அவர்களையும் எடை போடுவார்கள். அவ்விஷயங்களை அவர்களிடம் பேசுவதே தவறு. ஏனெனில் அவர்கள் மகாத்மாக்களைக் குறித்து தவறாகப் பேசினால் அந்த பாவத்திற்கு அவர்களை இட்டுச் சென்ற குற்றமும் நம்முடையதாகி விடுமன்றோ !
அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்வது அர்த்தமற்றது என்பதை சொல்ல வரும் போது கோட்டான்களின் உதாரணத்தை சொல்கிறார் ஆவுடையக்காள்

ஜாதிக் குதிரையின் குணத்தை
வெகு வியாதி பிடித்த கிழக்கழுதை அறியுமோ
மூடிக் கிடக்கும் குடத்துள்ளே
வெண்கலத்து பிரதீதி தெரியுமோ
கோட்டான் சமூகமெல்லாம் கூடி
மார்த்தாண்ட ஸ்வரூபத்தின் மகிமையை அறியுமோ
கூத்தாடி கையில் குரங்கு போல்
தேட்டாளி அவித்தைக்கு வசப்பட்டு கிடக்கும்
........

(பிரதீதி , n.= 1. Clear apprehension or insight; அறிவு. 2. Fame; கீர்த்தி. 3.Delight; மகிழ்ச்சி ;
மார்த்தாண்டன்= சூரியன் : தேட்டாளி = ??)


கோட்டான் இரவிலே சுற்றுவது, பகல் வெளிச்சம் அதற்கு ஆகாது. ஏதாவது மரப்பொந்தின் இருட்டிலேப் பகலைக் கழித்து இரவு கவிந்ததும் வெளியே வரும் குணம் உடையது. அதற்கு சூரியனின் பெருமைப் பற்றித் தெரியாது. வேறு பறவைகள் அவன் பெருமையை எடுத்துக் கூறினாலும் அந்த சூரியன் இல்லாமலேயே நாங்கள் வாழவில்லையா என்று விதண்டா வாதத்தில் ஈடுபடக்கூடும்.

தம்முடைய இரவு வாழ்க்கையே ஆதவனின் வருகையால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையும் அவைகளுக்கு தெரிந்திருக்கப் போவதில்லை. அப்படி இருட்டிலேயே (அஞ்ஞானத்திலே) வாழ்ந்து, மறைந்து போகும் தன்மை உள்ளவர்களோடு தம் சக்தியை விரயமாக்க வேண்டியதில்லை என்பதை கபீர்தாஸரும் வலியுறுத்துகிறார்.

पशुवा सों पालौ पर्यो, रहु रहु हिया न खीज ।
ऊषर बीज न ऊगसी, बोव दूना बीज ॥


கருணையுடன் மேலோர் உரைப்பினும், செவிமடுக்கும் நீசனும் இல்லை
கரம்பையில் இரட்டிப்பு விதைப்பினும், முளைத்தெழும் விதையும் இல்லை

(கரம்பை =பாழ்நிலம்)

இரண்டு மடங்கு விதையைத் தூவினாலும் பாழ்நிலத்தில் விதை முளைக்காது.
அன்பு (அல்லது இரக்கம்) என்னும் ஈரம் இல்லாத மனதில் நல்ல புத்திமதிகளும் வழிகாட்டும் உரைகளும் பயனற்றவை ஆகின்றன. ஈரம் இல்லாத மண் இறுகும். அங்கங்கே வெடிப்புகள் தோன்றும். அது போல அன்பற்ற உள்ளங்களும் இறுகி சுயநலம், தற்பெருமை, பேராசை என்பனவாய் வெடித்து பாளம் பாளமாகக் காட்சியளிக்கும்.

”தமஸோர்மா ஜோதிர் கமயா” என்பது பிரார்த்தனை. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லவும் பெருங்கருணையாளனான கடவுளின் கருணை வேண்டும்.

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்....


என்று மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறை சிவனை நினைத்துப் போற்றுவது போல் என்றாவது இறையருள் பொழியும் போது ஈரம் பிடிக்கும். பின் அன்பு சுரக்கும். அது வரை எது சொன்னாலும் அதற்கு பலன் இருக்காது.

மழையறிந்து விதைப்பவன் போல ஆன்றோர்கள் அந்த ஈர மனப்பக்குவம் அடைந்தவர்களுக்கே உபதேசம் செய்ய விரும்புவர். அது இல்லாதவரை உழவன் வறண்ட நிலத்தை ஒதுக்குவது போல் நம்மை நீசர்களாய் ஒதுக்கி வைப்பர். நாமும் கோட்டான்கள் போல அஞ்ஞான இருளிலே அலைந்து கொண்டிருப்பவராவோம்.

மித்தையை நம்பி விஷய போகம் புசித்து
சத்துருக்கள் சித்தம் தவிடு பொடியாக்குவித்து,
அஞ்ஞானத்தாலே அறிவிழப்பர் மானிடர்கள்
..........
இலக்கமற்ற ஜன்மத்தை எண்ணத் தொலையாது
மறித்துமிங்கு ஓடிவரும் மாயமிது ஏதென்றால்,
(அதை) அறிந்து விசாரிக்கின் ஆத்மாவே நாமென்னும்,
தேகமொடு போகம் ஸ்திரமென்றிருக்கிறவன்
மூடர்களில் மூடன் முழுதும் அஞ்ஞானி அவன்

ஞானசட்சு தான் விளங்கி நன்றாகவே அறிந்தால்
தோன்றுவது கானல் ஜலம் சிப்பியதில் வெள்ளியே போல்,
மோகம் விட்டுப் பார்க்கிறவன் மோக்ஷ ஸ்வரூபி கண்டாய்
(என்று) தாமரையாள் மார்பன் தனஞ்சயற்கு சொல்லி நின்றார்.


மேலே கண்டது கிருஷ்ணன் அருச்சுனனுக்கு சொல்வதாக ஆவுடையக்காள் இயற்றிய ஸ்ரீ பகவத்கீதா ஸாரஸங்கிரஹம் என்ற பாடற் தொகுப்பில் வருவது. தேகத்தை நிலையானது என்று நினைந்து உலக போகங்களுக்காக அல்லாடுபவர்களே பெரும் அஞ்ஞானிகள்.

மேலும் குரு இல்லாமல் அஞ்ஞானம் விலகாது என்பதையும் அழகிய உவமைகளோடு விளக்குகிறார்.

காதம் வழி சப்பாணி கடுகு நடந்தோடுதல் போல
ஊமை பல வார்த்தைகளும் உண்டென்று உரைத்தல் போல
செவிடனுக்கு கான வித்தை தெரியுமென்று கேட்பது போல

வருமெனக்கு என்று சொல்லி வாயடியாலே அடித்துத்
திரிகிறது மாத்திரமே, திடனாக ஆத்மாவை
அறியப் போகாது கண்டாய் ஆசாரியர் அன்றியிலே,
வந்தாலும் நில்லாது மரணஜன்மம் போகாது.

சிரவண பலத்தாலே சற்றுண்டு புண்ணியங்கள்
(என்று) உலகளந்த மாதவனார் உள்மானம் சொல்லி நின்றார்


(அறியப் போகாது கண்டாய் ஆசாரியார் அன்றியே = குரு இல்லாமல் அறிய முடியாது)


பகவத்கீதை சாரம் அன்றி, ஆவுடையக்காள் அவர்கள் ஞானகுறவஞ்சி நாடகம், ஞான வாஸிஷ்டத்தில் சொல்லப்படும் சூடாலை கதை, வேதாந்த கப்பல், ஸ்ரீ வித்யை சோபனம் போன்ற அபூர்வ பாடல்கள் திரட்டுகளை இயற்றியிருக்கிறார். அவரது அனுபோக ரத்னமாலை என்ற பாடல் தமது குருநாதர் பிரிவுக்காக இரங்கல் முறையில் பாடப்பெற்றிருக்கும் அற்புத அத்வைத சாரம்.

தன் குருவின் ஆணைப்படி மீண்டும் செங்கோட்டைக்குத் திரும்பி அவர் பலகாலம் மக்களுக்கு நல்வழிகாட்டியதாக சொல்லப்படுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பாடல்களெல்லாம் அப்போது திரட்டப்பட்டவையாக இருக்க வேண்டும். ஒரு ஆடி அமாவசையன்று குற்றாலமலையேறிச் சென்றவர் திரும்பவே இல்லையென்றும் எங்கு தேடியும் அவரது தேகம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சங்கரரைப் போலவும் மணிவாசகரைப் போலவும் விதேக முக்தி அடைந்தார் என்று கருதுவர் சிலர்.

பவபயங்கள் போக்கிவைத்து பரமபதம் தந்தவர்க்கு
பக்தி வைராக்கிய நிலை தந்தவர்க்கு
நேதி நேதி வாக்கியத்தால்;
நிச்சயங்கள் காட்டி வைத்த நிர்மலர்க்கு
ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.

[ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி அவர்களின் முயற்சியால் முதல் பாடல் திரட்டு 1953-ல் வெளிவந்தது. பாரதியாரை தாய்வழி சித்தப்பாவாக உறவு முறை கொண்ட ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் பல பாடல்களை செங்கோட்டை பகுதிகளில் பயணம் செய்து திரட்டி அவ்வப்போது ஆன்மீக சஞ்சிகைகளில் கட்டுரை வடிவில் வெளியிட்டு வந்தார். அவர்களிடமிருந்து அக்காளின் பாடல்களை பெற்று ஞானானந்த தபோவனத்தை சேர்ந்த நித்யானந்த கிரி ஸ்வாமிகள் இப்போது (2002) வெளியிட்டு இருக்கிறார்கள். விலாசம் : ஸ்ரீ ஞானானந்த நிகேதன், தபோவனம் அஞ்சல்,-605756,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு]

Saturday, March 12, 2011

கோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்

ஆவுடையக்காள் தொடர்ச்சி.......

தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு அத்வைத கருத்தரங்கத்தில் பங்கேற்று கருத்து சொல்ல முற்பட்டபோது ‘யாரிந்த மொட்டை’ என்று இளப்பமாய் அவரை பேச விடாமல் தடை செய்ய சிலர் முயன்றனர்.

‘யார் மொட்டை? என் உடலா, மனமா பிராணனா அல்லது என் ஜீவனா ? அல்லது என் ஆத்மாவா? நானென்பது என்ன ? நான் எப்படி மொட்டையாக முடியும் ? ( மொட்டை என்றால் பூரணமற்ற தன்மை, அறிவின்மை என்ற பொருளும் உண்டு)

பூரண ஞானமுள்ள அவரைப் பார்த்து அரைகுறைகள் கேட்ட பொருத்தமற்ற கேள்விக்கு தன் ஞான அனுபவத்தினாலேயே பதில் கூறி அவர்கள் வாயை அடைத்தார். அவருடைய பாடல்களில்தான் எத்தனை வகையான வேதாந்த விளக்கங்கள், அனுபவ விசாரங்கள், ராஜயோக ரகசியங்கள், நடைமுறை உதாரணங்கள்... சொல்லி மாளாது.

அன்னே-பின்னே : வேதாந்தசார கும்மியிலிருந்து சில கேள்வி பதில்கள்:

குருவாகி வந்தவன் ஆர்? சிஷ்யனாகி போனவன் ஆர்?
கூசாமல் எந்தனுக்குத் தெரியச் சொல் அன்னே
தத் எனும் பதம் குரு, த்வம் எனும் பதம் சிஷ்யன்
சோதித்தால் சப்தம் இரண்டும் சுத்தப் பொய் பின்னே

என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி அன்னே
தன்னை மறந்தால் உருக்கும், தன்னை அறிந்தால் ஒளிக்கும்
சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி பின்னே

ஜீவனிருந்தால் அன்றோ தேக இந்திரிய விஷயங்கள்
ஜெனித்து மரித்து அலையப் போகிறது அன்னே
பாவனை எனும் ச்ருதி யுக்தி அனுபவம் வந்தவர்க்கு
சொற்பனத்தில் கற்பிதம் போல தோற்றம் காண் பின்னே

-------------------------------
தொட்டில் பாட்டு ( அனுபவ விசாரம்)

ஆகமப் புராணங்களை அரைத்துக் குடித்தாலும்
உலகமெலாம் சஞ்சரிக்க யோகம் இருந்தாலும்
ஏகமான அகண்டவெளி ஞானம் அற்றுப் போனால்
ஏழு கோடி மந்திரத்தை ஜெபித்தாலும் பலம் காணேன்

புத்தியில்லை மனமும் இல்லை அத்வைதம் தானே
முக்தியில்லை பந்தம் இல்லை என்று எனக்குச் சொல்லி
யுக்தி சொன்ன குரு வெங்கடேசுவரர் கிருபையால்
பக்தியுடனே பணிந்து அகண்டமானேன் சிவோஹம்
.
--------------------------------
மோஹன ராக கீர்த்தனையின் சில சரணங்கள்:
(நடைமுறை உதாரணங்கள்)
இருளை இரும்பு உலக்கையினால் அடித்து ஓட்டினால் போகுமோ
எருதைப் பிடித்து கறந்ததினால் ஒரு பிள்ளைக்கு பால் ஆகுமோ
அவனியில் உண்டான கர்மமெல்லாம் செய்தால் அதனால் அவித்யை போகுமோ
தத்வப் பொருள் ஸ்வானுபூதி இல்லாது சாஸ்திரத்தால் ஸ்வப்பிரகாசமாகுமோ

கையிலுள்ள நெல்லிக்கனியைக் காண கண்ணாடி பார்ப்பானேன்
மெய் ஆபரணம் கழுத்திலிருக்க வீடெங்கும் தேடுவானேன்
பொய் ஆன இந்தப் பிரபஞ்சத்தை தூர விரட்டியபின்
மெய்யாய் நிறைந்த பரபிரம்மம் தானென்றறிய அலைவானேன்?

-----------------------------------------
ஆரபி ராக கீர்த்தனை ஒன்றின் சில வரிகள்:
(ராஜயோக ரகசியங்கள்)
பிரணவ நிலையறிந்து பிராணாயமாம் செய்வாயானால்
பிறக்கவும் இறக்கவும் வேண்டி வருமோடா
................
மனதை ஜயிக்க ஜீவா உன்னாலே ஆகுமோடா
வாசி வசத்தாலே மனதை வசமாக்கடா
................
பூரகம் முப்பத்திரெண்டு கும்பகம் இரட்டியாகக் கொண்டு
ஈரண்டு ரேசகத்தை விட்டு நீ பாரடா- ஏழெட்டு
நாளைக்கெல்லாம் இவ்விதம் செய்வாயானால்
வாசி வசமாகும் நீ யோசனை செய்யாதேடா


முழு ஞானியான அவர் முன்னே வெறும் சாஸ்திர அறிவுள்ளவர்கள் எம்மாத்திரம்!! அவருடைய பெருமை புரிந்ததுமே பலர் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரினர்.

ஆனால் இன்றைய தினங்களைப் போலே செய்திகளை அந்நாட்களில் உடனுக்குடன் எல்லோருக்கும் எடுத்துச் செல்ல சாதனங்கள் இருக்கவில்லையே ! ஆவுடையக்காளோ அகங்காரமற்று தேகப் பிரக்ஞையின்றி உடலை சுமந்து திரிந்தவர். அதனால் அவரைப் புரிந்து போற்றியவர்கள் மிக மிக சொற்பமாகவே இருந்தனர்.

ஒருவருடைய பெருமை புரியாவிட்டாலும் போகட்டும், இழிவாக நடத்தாமலாவது இருக்கலாமில்லையா? ஆனால் நடந்ததென்னவோ அதுதான். அக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர். இப்படி அவர் சந்திக்க வேண்டியிருந்த எதிர்ப்புகளும் அவமானங்களும் கபீர்தாஸ் அவர்களின் ஒரு ஈரடியை நினைவுபடுத்துகிறது.

साकट कहा न कहि चलै, सुनहा कहा न खाय ।
जो कौवा मठ हगि भरै, तो मठ को कहा नशाय ॥


அவநீதியோர் ஏசாத ஏச்சில்லை, அற்பமது தின்னாத பண்டமில்லை
காக்கைதன் எச்சத்தால் நிரப்பினும், கோபுரத்திற்கொரு பங்கம் இல்லை


(அவநீதி= நம்பிக்கையின்மை, அற்பம் =நாய்)


ஆணவத்தாலும் அறியாமையாலும் பேசுபவர்கள் அவநீதியோர். அவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. நாத்திகர்களில் இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறருடைய நம்பிக்கைகளை மதித்து பொறுப்புடன் இனிமையாக பேசுவோர் உண்டு.

ஆனால் உண்மையை உள்ளபடி அறிய முயற்சிக்காமல் எல்லாம் அறிந்தவர் போல பொறுப்பின்றி பேச விழையும் அரைகுறை ஆத்திகர்களையே ’அவநீதியோர்’ என்ற சொல் குறிக்க வந்தது. கண்டதையெல்லாம் வாயில் கடித்து ருசி காண விழையும் நாயைப் போல அவர்கள் ’தமக்கு புரியாத விஷயங்கள் பற்றியும் அபிப்பிராயம் சொல்ல முற்படுபவர்கள்’ என்பதாக கபீர் சொல்ல வருவதை புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய பேச்சுக்கள் (அல்லது ஏச்சுக்கள்) காக்கைகள் எல்லாம் கூடி எச்சமிடுவதைப் போலவாம். அதனால் கோபுரம் சாய்ந்து விடுமா அல்லது அதன் பெருமைக்குத்தான் களங்கம் வருமா?

சான்றோர்கள் இப்பேற்பட்ட இழிவுரைகளால் மனம் சஞ்சலப்படாமல் தம் வழியே செல்கின்றனர்.

ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.

ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’ என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார். அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.

அந்த நிகழ்ச்சி மூலம் அக்காள் தமது குருபக்தியை மட்டுமல்லாமல் குருவின் பெருமையையும் அற்புதமாக உலகிற்குப் புரிய வைத்தார் எனலாம்.

(அக்காளைப் பற்றி எழுத ஆரம்பித்த பின்னர் எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்த இடுகையில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.)

ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (Published by Divine Life Society, ISBN 81-7052-095-9) என்கிற புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.