Monday, April 12, 2010

பதைப்பில் கழியும் இரவுகள்

பஞ்சவடி என்பதாக ஐந்துவகைத் தருக்கள் கொண்ட அந்த தோப்பு மயானத்திற்கு அருகே இருந்தது. பகல் போதில்கூட அணுகப் பயங்கரமாக இருந்த அந்த இடத்தில் கதாதரருக்கு நடுநிசியில் என்ன வேலை இருக்கும்?

பல முறை கதாரரர் அறியாமலேயே அவரை ஹிருதயர் பின்பற்றினார். எனினும் காட்டை நெருங்கப் பயந்து திரும்பி விடுவார். ஒரு நாள் முழு தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு கடைசி வரையில் ‘சின்ன மாமா’வைத் தொடர்ந்தார்.

கதாதரர் புதர்களையும் குழிகளையும் குட்டைகளையும் நெருக்கமான மரங்களையும் கடந்து பஞ்சவடி சேர்ந்தார். மயான பூமியிலிருந்து அவரை மீட்க வேண்டும் என்று எண்ணி அவரை பயமுறுத்துவதற்காக ஹிருதயர் மறைவிடத்திலிருந்து கற்களை விட்டெறிந்தார். ஆனால் கதாதரரோ லட்சியமே செய்யவில்லை. மேரு பர்வதத்தைப் பருக்கைக் கற்களால் அசைக்க முடியுமா என்ன?

நெல்லி மரம் ஒன்றின் அடியை அடைந்தார் கதாதரர்.

இதென்ன கூத்து ? அவர் ஏன் தம் ஆடைகளைக் களைந்துக் கொள்கிறார்?

சின்ன மாமாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ? ஏன் பூணூலையும்கூடக் கழற்றி விட்டார் !

ஏதோ பெரிய பாரம் நீங்கினாற்போல அமைதியுடன் நெல்லி மரத்தடியில் தியானம் புரிகிறாரே!

ஆகா, அண்ட சராசரங்கள் புரண்டு வந்து மோதினாலும் கவலையில்லை போல், எத்தகைய சாந்தத்துடன் அவர் தியானம் புரிகிறார்!

“மாமா, அதென்ன உங்கள் உடையையும் பூணூலையும்கூட எடுத்துவிட்டு தியானம் செய்தீர்களே! என்று மறுநாள்
தம்மை அடக்க மாட்டாமல் கதாதரரை கேட்டுவிட்டார் ஹிருதயர்.

‘கட்டுகளை எல்லாம் விலக்க வேண்டியதுதானே ! நிர்வாணம் என்று நீ கேலி செய்யலாம். அதுவே மகா நிர்வாணத்திற்கு உதவியாயிருக்கிறது’ என்றார் கதாதரர்.

கதாதரரின் இறைத் தாகத்தை கபீரின் வார்த்தைகளில் சொல்வதானால்,

अनराते सुख सोवना, राते नींद न आय़ ।
ज्यों जल छूटी माछरी, तलफत रैन बिहाय ॥


நித்தம் துயில்சுகம் கொள்வதோ, துயிலவும் இயலாது இரவிலே
மச்சம் நீர்விட்டு விழுந்ததுபோல், பதைப்பில் கழிவன இரவுகளே

[ மச்சம்= மீன் ]
பரமஹம்ஸரைப் போலவே நடுஇரவில் நம்மாழ்வார் திருமாலை நினைந்து கண்விழித்து அமர்ந்திருக்கிறார். அவர் கண்களுக்கு கரிய வானில் பறந்து செல்லும் நாரை தென்படுகின்றது. தன் ஏக்கத்தை ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார். ’பிரிவு நோயாலும் பசலை நோயாலும் அவதிப்படுகின்ற என்னைப் போல் நீயும் திருமாலை நினைந்து வருந்துவதால் உறங்கவில்லையோ’ என்கிற கருத்தை நாயகி பாவத்தை முன்னிறுத்தி பாடுகின்றார்.

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மேபோல்,
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே

(ஆயும்= தாயும்; அமருலகம் =தேவலோகம் ; பயலமை= பசலை நோய்)

இறைவன் அருள் கிடைக்கவில்லையே என்ற பதைப்பு தாயின் முகத்தைக் காணத் தவிக்கும் குழந்தையின் பதைப்பைப் போன்றது. நம் அன்பிற்குரியவர்கள் காலாகாலத்தில் வீடு திரும்பாமல் போனால் நம் மனதில் ஏற்படும் பதைபதைப்பை ஒத்தது. அப்போது உறக்கம் கொள்ள முயன்றாலும் உறக்கம் கொள்ள இயலாது. இந்த அனுபவத்தை எல்லா ஞானிகளின் ஆன்மீகத் தாகத்திலும் காண்கிறோம். தாயுமானசுவாமிகளும் பலவாறாய் இந்த பதைப்பைப் பாடுகிறார்.

சொல்லாலே வாய் துடிப்பது அல்லால், நெஞ்சம்
துடித்து இருகண் நீர் அருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே இருந்த நெஞ்சுங்கல்லால் முக்கட்
கனியே நெக்கு உருகிடவும் காண்பேன் கொல்லோ

தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே

உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான் ஏழை
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே

நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்
பாராதது என்னோ பகராய் பராபரமே


இப்படித்தான் கதாதரரும் அழுதார், அரற்றினார், பித்துப் பிடித்தவர் போல் செயலாற்றினார்.

இரவு கால பூஜை முடிந்த பின்னும் அவருக்கு அமைதி கிடையாது. சுடுகாட்டுக்கே ருத்ர பூமி என்று பெயரளித்த பசுபதியின் பத்தினியாகிய பரமேசுவரியை நினைந்து ,பசித்தக் குழந்தை தாயை எண்ணி எப்படி வறண்ட தொண்டையுடன் கதறுமோ, அப்படி பசித்த உள்ளம் வெடிப்பு வெடிப்பாகப் பிளந்துகொள்ள பவானிக்காக கூவுவார்.

அன்ன ஆகாரமின்றி இளைத்த உடலும் அழுதழுது சிவந்த கண்களுமாகத் தவிக்கும் பட்டாசாரியாரின் போக்கு யாருக்குமே புரியவில்லை.

அவருக்கும் புரியவில்லை.

’தேவி நான் இவ்வாறு மனம் வெந்து மடிந்தும் நீ தரிசனம் தராதது எதனால் என்று எனக்கு புரியவில்லை. இப்படி அவதிப்பட்டிக் கொண்டிருக்க என்னால் முடியாது’ என்று ஒருநாள் இரவு தேவியின் சன்னிதியில் மொழிந்த கதாதரரின் கண்கள் அருகிலிருந்த ஏதோ ஒன்றின் மீது பட்டதும் நிலைத்து நின்றன. உடனே அந்த சிவந்த கண்களில் ஒரு அமைதியும் திருப்தியும் நிறைந்தன.

வாள்! காளியின் சன்னிதியில் தொங்குகிற வாள்!

காளி என் துயரைத் தீர்க்கவில்லை என்றால் இந்த வாள் தீர்க்கட்டும் !

பவதாரிணி உன்னைக் காணாமல் என்னால் உயிர் வாழ முடியாது. இதோ என் உயிரை உன் காலடியிலேயே விடுகிறேன். உனக்கு நான் அளித்த மற்ற நிவேதனங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்த ஆத்ம நிவேதனத்தையாவது நீ ஏற்றுக்கொள்’ என்று ஆன்மாவின் அந்தரங்கத்திலிருத்து குழைந்து பேசிய கதாதரர் வெறி பிடித்தார் போல வாளை உருவ ஓடினார்.

அதிசயம் நிகழ்ந்து விட்டது.

ஓடிய பாதம் ஸ்தம்பித்தது.

இத்துணைக் காலம் தத்தளித்த இதயமும் ஸ்தம்பித்தது.

இதென்ன ஆலயத்தில் மின்சார வெள்ளம் பாய்கிறதா ?

இல்லை இது உடலையும் உள்ளத்தையும் மரத்துப் போகச் செய்யும் மின்சாரம் இல்லை.

உடலையும் உள்ளத்தையும் மலர்த்தும் இன்சாரம் அது!

ஆம் ! அதிசயம் நிகழ்ந்தே விட்டது

இனிமையின் சாரமாகிய அம்பிகை அவர்முன் நின்றாள்.

(நன்றி :அறிவுக் கனலே அருட்புனலே : ரா.கணபதி, இராமகிருஷ்ணா மடம்,சென்னை , (2008) ; ISBN 81-7120-490-2 pages 134 - 139)

Picture courtesy : (http://www.rkmrajkot.org)

6 comments:

  1. //உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான் ஏழை
    தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே//

    திரும்பத் திரும்பச் சொல்லிக் கதறணும் போல!

    இப்போ அறிவுக்கனலே, அருட்புனலே தான் படிக்கிறேன், குறிப்பிட்ட ச்ம்பவம் வரும் பக்கத்தை எத்தனை முறை படிச்சாலும் ஆச்சரியமே மேலோங்குகிறது. அருமையான எழுத்து வழக்கம்போல், ஒப்பிட எனத் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் முத்துக்கள்! ரொம்பச் சொன்னால் வெறும் புகழ்ச்சியாகிடும்.

    ReplyDelete
  2. நன்றி கீதா மேடம்,

    //இப்போ அறிவுக்கனலே, அருட்புனலே தான் படிக்கிறேன் //

    திகட்டாத எழுத்து வண்ணம் ரா. கணபதி அவர்களுடையது. அதனால்தான் அதை அப்படியே போட்டு விட்டேன்.

    ReplyDelete
  3. 1.but practically how could man possible in always godthought ?

    2. only bakthi is not enough and we should not satisfied that stage.

    3. ganapathy is one of instrument.

    others peoples /instruments
    are there. like you,vasudevan etc.

    ReplyDelete
  4. நல்வரவு பாலு சார்,

    ///...but practically how could man possible in always god thought ?///

    காலம் கனியும் போது அதுவும் தானாக நடக்கும். பாதை மாறாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

    நாம் யாவரும் அவனது கையில் கருவிகளே என்பதை பொருத்தமாக சொன்னீர்கள்
    நன்றி

    ReplyDelete
  5. மிக அருமையான நிகழ்வினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி கபீரன்பன் சார். ஆமாம், 'கதறி மனமுருகி நானழைக்கவோ' என்ற பாடல் நினைவுக்கு வந்தது.. :)

    ReplyDelete
  6. நல்வரவு மதுரையம்பதி,

    //..அருமையான நிகழ்வினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி //

    கபீருடைய அந்த ஈரடிக்கு வேறெதையும் நினத்துக்கூட பார்க்க முடியவில்லை. கருத்துப் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி