Monday, December 28, 2009

புலத்தைத் தின்னும் புள்ளினம்

கடந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியான ஞாயிறு மலரில் கல்லறைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.அதில் ஒவ்வொரு மதத்திலும் இறுதி சடங்குகளின் முறைகள் அவற்றின் உட்பொருள், அத்தொழிலில் அவர்களது வருமானம், மனநிலை போன்றவற்றை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

இசுலாமியர்களின் கல்லறைப் பெட்டியில் அடிப்பக்கம் இருக்காது என்பது எனக்கு ஒரு புது தகவலாக இருந்தது. அதற்கு சொல்லப்படும் காரணம் மண்ணிலிருந்து வந்தவர்கள் மண்ணுடனே போக வேண்டும் என்பதாகும்.



[படத்தை சொடுக்கினால் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.]

ஒருவேளை இதனால்தான் ”மாட்டீ கஹே கும்பார்-கோ” என்று கபீர் மண் பேசுவது போல் குறிப்பிட்டிருந்தாரோ!

குயவன் கைமண் கூறும், பிசைமின் பிசைமின் இன்று
கூடிய விரைவில் உம்மை,பிசைவேன் பிசைவேன் என்று


[இது ஏற்கனவே விளக்கப்பட்ட ஈரடி. அதைப் படிக்க இங்கே சுட்டவும்]

படைப்புத் தொழிலை குயவனுக்கு உதாரணமாக்கி சொல்லாத மொழிகளோ சமயமோ இருக்காது என்றே கூறலாம். ஏனெனில் மண்ணிலிருந்தே மனிதனுடைய தொழில் திறனும் கலைத்திறனும் வெளிப்படத் துவங்கியது.

நாம் யாவரும் அறிந்த கடுவெளிச் சித்தரின் பாடல் வரிகள்-

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி (நந்தவனத்தில்)


இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அங்கே ஒரு சீவாத்மா தனக்கென ஒரு உடல் வேண்டி பத்து மாதங்கள் கர்ப்பவாசமிருந்து உடலை பெற்று உலகில் வந்து சேர்கிறது. வந்த பின்போ வந்த வேலையை மறந்து புலனின்பங்களில் காலத்தைக் கழிக்கிறது. இறக்கும் தருவாயில் தவம் செய்து உய்யாமல் போனேனே என்ற வருத்ததுடன் உயிர் பிரிவதை ’போட்டுடைத்தாண்டி’ என்ற நையாண்டி செய்கிறார் சித்தர்.

இதையே கபீர்தாஸரும் சொல்கிறார்

आछें दिन पाछे गये, गुरु सों किया न हेत ।
अब पछितावा क्या करै, चिडियां चुग गई खेत ॥


கழிந்தன களியாட்டத் தினங்கள், குருவடி கண்டு கனிந்திலரே
கழிவிரக் கத்தால் பயனுமேது, புலத்தைப் புள்ளினம் தின்றனவே

(புள்ளினம் -பறவைகள்)

வேலையாள் ஒருவனை வயலில் காவல் காப்பதற்காக நிலத்தின் சொந்தக்காரன் அனுப்பி வைக்கிறான். அவனோ சீட்டாடுவதும், தின்பதும் பின்னர் ஒரு தூக்கமும் போடுவதாகக் காலத்தை கழித்தால் வயலில் விளைந்த தினையை பறவைகள் தின்று தீர்ப்பதில் ஆச்சரியம் ஏது?

நம் முற்பிறப்பின் நல்வினைகள் பொருட்டு மீண்டும் அவற்றை பாதுகாத்து பெருக்கிக் கொள்வதற்காக இறைவன் உடலைக் கொடுத்து அனுப்பி வைக்கிறான். வந்த பின்போ செல்வம், புகழ், பதவி போன்றவற்றை தேடும் கூத்தாட்டத்தில் வாழ்க்கையை கழித்தால் அது நம் பொறுப்பற்ற தன்மையைத் தானேக் குறிக்கும்.

இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது. அதை அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் உபதேசிக்கிறார்.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே

(இதண் =பரண் )

சுனைகளிடத்தும் அருவித் துறைகளிடத்தும், பசுமையான தினைப் புனத்திலும், பரணிடத்திலும் வள்ளிக்கு அருள் செய்யும் பொருட்டு திரிபவனே ! மனைவி மக்கள் என்று இல்லற வாழ்க்கையில் மயங்கிக் கிடப்பது தகுமோ ? (எமது) வினைகள் ஓடும் படி விரட்டும் வேலாயுதத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன்.

’குருவாய் வரும் குகன்’ தினைப்புலம் காத்த வள்ளியை அவள் தீராத பக்தியைக் கண்டு ஆட்கொண்டதன் உட்பொருளை நம்முடைய ’வினைப்புலம்’ காக்கச் சொல்வதன் மூலம் கபீர்தாஸரும் நமக்கு நினைவூட்டுகிறார்.

பிரார்த்தனைகள் மூலம் நம்முள் விளையும் ஆன்மீகப் பயிரை உலகவாழ்க்கை ஒட்டிய எண்ணங்களாம் பறவைகள் தின்று விடாமல் இருக்க குருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கபீர் அறிவுறுத்துகிறார்.

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டு எல்லாமறிந்து
குருவை அறிந்தே நினைத்துக் கும்பிடுவது எக்காலம் ?

- பத்திரகிரியார் ஞானப் புலம்பல்

இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.

சிலர் ஹரி ஹரி என்றும் சிலர் ராம் ராம் என்றும், துர்கா, காளி, சாயி, அல்லா, நானக்,புத்த மஹாவீர் என்று எந்த பேரைச் சொல்லி பாடினாலும் புள்ளினம் ஓடிடும், இறை இன்பம் தேடி வரும்.

Koyi Bole.mp3

( நன்றி: ஸ்ரீநிவாஸ் குழுவினரின் பஜன் )

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு -2010- வாழ்த்துகள்

Saturday, December 05, 2009

இன்சொலான் ஆகும் கிளமை

காலை எட்டு மணியிலிருந்து சுமார் பதினொரு மணிவரை, நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு , அரை கிமீ தூரத்திலிருந்த மெயின் ரோடு அலுவலகத்தை நடந்தே அடைந்தேன். வெயில் அசாத்தியமாக இருந்தது.

வாயிலில் வேட்டி கட்டிய கிராமத்து இளைஞன் காத்து நின்றிருந்தான். ஒடிசலான தேகம், வற்றிய கன்னங்கள். “யாரு வேணும்?” என்று கேட்டுக்கொண்டே பூட்டைத் திறந்து உள் நுழைந்தேன். ”உங்களத் தான் பார்க்கணும்னு வந்தேன்” என்ற அவன் உள்ளே வரவில்லை. கிராமத்துப் பக்க மக்களுக்கு உள்ள அடக்கம் தெரிந்தது. ”வாப்பா, உள்ளே வா” என்றழைத்தேன். நடுங்கிய கரங்களில் ஒரு உறையை நீட்டினான். வேலைக் கேட்டு வந்த விண்ணப்பம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

" ... I shall discharge all my duties to the fullest satisfaction of your esteemed office.."

”என்ன படிச்சிருக்கே ?”
பத்தாவது ஃபெயில், சார்.
ஒரு புன்முறுவலோடு ”யாரு எழுதி கொடுத்தா இந்த லெட்டரெ?” என்று கேட்டேன்.
”எங்க மாமா; ........ ஸ்கூலு வாத்தியாரா இருக்காரு”.

பொதுவாக வேலைக்கான விண்ணப்பம் என்றாலே ஆங்கிலத்தில் தான் எழுதப்படவேண்டுமென்ற நினைப்பு பலருக்கு உண்டு.

அவனுக்கு நிறுவனத்தின் அன்றைய நிலைமையை விளக்கி, விரைவிலேயே உற்பத்தி துவங்கப்படும் பொழுது அவனுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று சொன்னேன்.

“சார், குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு சார்....பார்த்து செய்யுங்க”

அவனுடைய குடும்பத்தில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் விவரங்களை கேட்டுக் கொண்டேன். வசதியற்ற குடும்ப பின்ணணி என்பது புரிந்தது.

‘சரிப்பா ! எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்லையா. நாம நெனச்ச உடனே எதுவும் நடக்கிறதில்லையே! கூடிய சீக்கிரம் பாக்கலாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இம்மாதிரி சிலர் வருவதும் விண்ணப்பங்கள் கொடுப்பதும் அந்த காலகட்டத்தில் வாடிக்கைதான். அதனால் அதை பெரிதாக நினைத்து பார்க்கவில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவனிடமிருந்து ஒரு அஞ்சல் அட்டை வந்தது. அவனுக்கு முகம் கொடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியதற்கு தமிழில் நன்றி தெரிவித்திருந்தான். அதில் முகஸ்துதி இருக்கவில்லை. அது அவன் உள்ளத்திலிருந்து வந்தது என்பது புரிந்தது. ஒருவேளை வேறு பல இடங்களில் அவன் அனுபவம் கசப்பாக இருந்ததோ என்னவோ !

முதன்முறையாக, ஒரு உரையாடல் இனிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எனக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி அது. நான் சாதாரணமாக பேசிய வார்த்தைகள் எவ்வளவு தூரம் அவனுடைய வாடிய உள்ளத்திற்கு தெம்பு அளித்திருக்கிறது என்பதை அவனுடைய வரிகளில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதெ அறவழியில் அமைந்த பண்பாகும்.


பள்ளிக்கூடத்தில் வள்ளுவர் கூறியதை படித்திருந்தாலும் மனதில் வேர்விடாத கருத்து இந்த ஒரு அஞ்சல் அட்டை மூலமாக மறக்க முடியாத பாடமாகி விட்டது.

’அகத்தானாம் இன்சொலின்’ என்னும் போது இனிமையான சொற்கள் உள்ளத்திலிருந்து உண்மையாய் வரவேண்டியவை என்று புரிகிறது. அது எப்போது உண்மையாகும் என்பதை கபீர்தாஸ் சற்று விரிவாகக் கூறுகிறார்.

ऐसी वाणी बोलिए, मन का आपा खोये
अपना तन शीतल करे, औरन को सुख होए


நவில்வீர் நயமுடனே தானடங்கி தனுவடக்கி
தம்மன்பர் தம் உள்ளங் குளிரும் உரைகளே

(தான் அடங்கி= மனதில் ஆணவமற்று ; தனு அடக்கி = உடல் அவையவ கட்டுபாடுடன் )

மாற்று :
தானெனு முணர்வு களைந்து, தனுவதால் குற்றம் தவிர்த்து
அன்பர் தம் அகம் குளிர்வித்து, நவில்வீர் நும்முரை தேர்ந்து

( நும்முரை = உமது உரை)

Body language என்பதை இன்றைய நிர்வாக இயலில் கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒருவர் இருக்கையில் அமரும் விதம், உரையாடலின் போது கைகளின் பிரயோகம், முகத்தில் காட்டப்படும் பாவனைகள் (கண் விரித்தல், நெற்றி சுருக்குதல், உதடு சுழித்தல், கொட்டாவி ), சத்தம் போட்டு சிரிப்பது, நையாண்டியாக கைகால்களை ஆட்டுவது, சோம்பல் முறித்தல் போன்றவை உடலால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஆகும். இவற்றைக் கொண்டு, ஒருவர் எவ்வளவுதான் இனிமையாகப் பேசினாலும் அவருடைய பேச்சு எவ்வளவு தூரம் உண்மை அல்லது போலி என்பது புரிந்து விடும். ’அப்னா தன் ஷீதல் கரே’ என்பதன் மூலம் கபீர் பேசுபவரின் உடற்மொழி கட்டுக்குள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உரைக்கிறார்.

அடுத்து மனதை பற்றி நிற்கும் குறை. இது அகங்காரத்தைச் சார்ந்தது. பேச்சின் தொனியிலேயே இது தெரிந்து விடும். தொனியின் மாறுபாட்டால் சொல்லவரும் கருத்தின் பொருள் மாறி போக வகையுண்டு.

பாண்டவர்களை ஒழித்து விடுவதாக சபதமிட்டு அஸ்வத்தாமன் அவர்களை துரத்திக் கொண்டு வந்தான். கண்ணனின் யோசனை ஏற்று அவர்களை ஒரு குழியினுள் பதுங்கச் செய்து அதை மூடி அதன் மேல் துர்வாசர் அமர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் துர்வாசரை அணுகி அவர்களைப் பற்றி விசாரிக்கிறான் அஸ்வத்தாமன். ”ஆமாம் நான் அவர்களை எனக்கு அடியில்தான் ஒளித்து வைத்திருக்கிறேனாக்கும்” என்று மிகவும் கோபம் கொண்டவர் போல் கூறினார். கோபத்தில் நக்கலாக பேசுகிறார் என்று நினைத்து அவர் கோபத்துக்கு அஞ்சி அஸ்வத்தாமன் அங்கிருந்து விலகிப் போய்விட்டான்.

இப்படி நம் குரலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (modulation) எப்படி கேட்பவர் உள்ளத்தில் பலவிதமான பாவனைகளை ஏற்படுத்தும் என்பதை ஒரு நிர்வாகயியல் பயிற்சி அரங்கில் சிறிய உதாரணத்துடன் விளக்கினர்.

பயிற்சியாளர் கரும்பலகையில் கீழ்கண்டவாறு எழுதினார்.

மணி பார்வதியை அடித்தான் என்று நான் சொல்லவில்லை

இந்த சொற்றொடரில் முதலில் ‘நான் சொல்லவில்லை’ என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களுக்கு ‘ வேறு யாரோ சொல்லியிருக்கவேண்டும் ‘ என்ற பாவனைத் தோன்றும்.

அதையே மணி என்ற வார்த்தைக்கு மாத்திரம் அழுத்தம் கொடுங்கள். இப்போது அடித்தவர் மணி அல்ல வேறு எவரோ என்ற பாவனை தரும். பார்வதி அடி வாங்கியது உண்மை. ஆனால் அதில் மணிக்கு சம்பந்தம் இல்லை .

அடுத்ததாக ’பார்வதியை ’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்லுங்கள். மணி அடித்தது உண்மை. ஆனால் பார்வதியை அல்ல.


இவ்வாறு நமது அன்றாட பேச்சில் நாம் சொற்களை கையாளும் விதம் பல விதமான பாவனைகளை கேட்பவர் மனதில் உண்டாக்கும்.

ஆகவே பேச்சு என்பது வெறும் எண்ணங்கள், நிகழ்வுகள் மட்டுமல்லாமல் உணர்வுகளும் கலந்து வெளிப்படுவது.

ஒருவன் தவறு செய்திருக்கலாம் என்பது நமது ஊகம். ஆனால் அவனைப் பற்றிய முந்தைய நிகழ்வுகள் அவன் தான் குற்றவாளி என்ற முடிவுக்கே இட்டு சென்று நமது வார்த்தைகளிலும் அதற்கான தொனி வெளிப்பட்டு விடும். அதை ஆங்கிலத்தில் prejudice என்பர். நமது கருத்துகளே சரி என்கிற அகங்காரத்தினால் வருவது. எனவேதான் மன அமைதியில்லாமல் எது பேசினாலும் அங்கே பொருட் குற்றம் வரக்கூடும்

அதனையே ”மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்கிறார்.

பல நேரங்களில் ஏதும் பேசாமலே மௌனம் காப்பது உத்தமம். ஞானிகள் பெரும்பாலும் கைகொள்வது இந்த அணுகுமுறைதான். தம் குறைகளை காது கொடுத்து ஒருவர் கேட்டாலே சொன்னவருக்கு பாதி மனப்பாரம் குறைந்து விடும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் சேவை.

மனிதப் பிறவி என்பதே அந்த இறைவனின் சொரூபம் என்றும் நமது இயல்பான குணமே ஆனந்தம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆனந்தமாயுள்ளவனிடம் கோபமிருக்காது, அகங்காரமிருக்காது. அப்போது வெளிவரும் சொற்கள் யாவுமே இன்பம் தருபவையாகவே இருக்கும்.

அதனால்தான் குழந்தைகளின் பேச்சு யாவரையும் கவருகிறது.

சிறுபஞ்சமூலம் இந்த உண்மையை “இயல்புக்கு மாறான வன்சொற்களால் பகைமை வரும்” என்று சொல்கிறது. ஆமாம் வன்சொற்கள் மனித இயல்புக்கு மாறானவை. அவனது இயல்பு ஆனந்தம். அதனால் அவன் சொற்கள் இன்சொல்லாகவே இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இன்சொலான் ஆகும் கிளமை; இயல்பு இல்லா
வன்சொல்லில்ன் ஆகும் பகைமைமன்-மென்சொல்லித்
ஓய்வு இல்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவு இல்லா வீடாய் விடும்.


(கிளமை= உறவு ; வீவு இல்லா = அழிவு இல்லாத ; வீடு =மோட்சம்)

[இனிய மொழிகளால் உறவு ஏற்படும்; இயல்புக்கு மாறான கொடிய சொற்களால் பகைமை வரும் ;மென்மையான சொற்களால் தொடர்ந்து பெருமையும் அருளும் பெருகும்; கருணையுள்ள நெஞ்சத்தால் கேடில்லா வீடு பேற்றை பெறலாம். ]

புல்லாங்குழலில் இனிய நாதம் வருவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மூங்கிலில் நேரான அடைப்புகளற்ற உட்கூடு இருக்கவேண்டும். வளைந்து இருக்கும் மூங்கிலில் மூச்சுக் காற்றின் பாதை சீராக இருக்காது. அடைப்புகள் உள்ள குழலிலும் இசைக்கு வாய்ப்பில்லை. நம் மனம் அகங்காரம், தன்னலம் போன்ற கோணல்கள், அடைப்புகள் இல்லாமல் போகும் போது அழகான புல்லாங்குழல் போலாகிறது. அதை அவன் கை கருவியாக்கி செயல்பட்டால் நம் பேச்சு ஒவ்வொன்றும் இனிய நாதமாக இருக்கும். எப்போதும் பிறர்க்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கும் என்பர் சான்றோர்கள்.

”அகத்தான் இன்சொலினிதே அறம்” என்று வள்ளுவர் சொல்வதும் “மன்கா ஆபா கோயே” என்று கபீர் சொல்வதும் ஆன்மீகப் பயணத்தில் இந்த முக்கியமான கட்டத்தை அடைவதற்காகத்தான். ஏனெனில் வீடு பேறு நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல்கல்.