Saturday, October 24, 2009

தண்மை பொழிவார் தொண்டர்

திரைப்படத்தின் முதல் காட்சி. மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டிருக்கும் ஒரு குடும்பம். அண்ணன், தம்பி (அல்லது தங்கை) பெற்றொர்களுடனும் உறவினர்களுடனும் பிறந்த நாளோ தீபாவளியோ கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாம் காட்சி: ஒரு கொலை வெறிக் கும்பல் திடீரென்று உள்ளே புகுந்து சிறுவர்கள் கண் முன்னாலேயே தாய் தந்தை சித்தப்பா, வேலைக்காரன் போன்ற அனைவரையும் சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறது.

கடைசி் காட்சி: சட்டம், காவல் துறை உதவி யின்றியே வளர்ந்து விட்ட சிறுவர்கள் கொள்ளையர் கும்பலை பழி தீர்த்துக் கொள்கிறார்கள். சுபம்.

இது ஃபார்முலா படம். மொழிகள் வேறாக இருக்கலாம், நடிகர்கள் வேறாக இருக்கலாம், களம் வேறாக இருக்கலாம்.
நீதி நிலை நாட்டப்படுகிறது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறைகளுக்கிடையே பழி உணர்ச்சியுடன் கூடிய நாயகன் உணர்வுகளை நியாயப் படுத்தி காட்டப்படும் சித்திரம்.

அடுத்தது சின்னத் திரை.

சேனல் ஒன்று : மருமகளைக் கொல்வதற்கு ’சுபாரி கில்லர்’களை ஏற்பாடு செய்யும் மாமியார்;

சேனல் இரண்டு :தொழிலதிபரான மாமனாரை தீர்த்துக் கட்ட ஸ்லோ பாய்ஸன் கொடுக்கும் மருமகன்;

சேனல் மூன்று : “அவர்கள் குடும்பத்தை உடைத்து நான் யார் என்பதைக் காட்டுகிறேனா இல்லையா பார்” என்று சவால் விடும் பெண்மணிகள்.

இத்யாதி..இத்யாதி
இங்கு பெரிய திரையை போல் கதை சுருக்கம், சுபம் எல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மெகா தொடர்களின் போக்கு மேற்கொண்டு எப்படிச் செல்லும் என்பது அந்தந்த கதை டிபார்ட்மெண்டுக்கே இன்னும் தெரிந்திருக்காது


எந்த சேனலைத் திருப்பினாலும் கோடிகளில்தான் உயிர்கள் விலை பேசப்படுகிறது. லட்சங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது ! பெரிய திரையில் உடல்ரீதியான வன்முறை என்றால் சின்னத்திரையில் மனோரீதியான வன்முறை வலம் வருகிறது.

தொழிலாளர் முதலாளி மோதல்களெல்லாம் அரத பழசு. இப்போதெல்லாம் சிறிய உரசல்களையெல்லாம் மகாபாரதம் போல் குடும்ப சண்டைகளாக்கி வெறுப்பை விதைத்து, வளர்த்து வியாபாரம் செய்வது தான் நவீன யுக்தி. அந்த மசாலாதான் ருசிக்கிறது. இந்தத் தொடர்களை உணவு தட்டைக் கையில் வைத்துக் கொண்டு கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே தின்னா விட்டால் பலருக்கு சாப்பாடு உள்ளே இறங்காது.

இவ்வாறு பார்க்கும் இடம் எல்லாம் காழ்ப்புணர்ச்சியும் பழி தீர்த்தலும் தான் நியாயம் என்ற வகையில் கருத்துகளை தொடர்ந்து உள்வாங்கி வருவதால் குடும்ப விரிசல்கள் மேலும் விரிந்து உடைகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. ஏன் புது புது யுக்திகளை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் குற்றங்களும் அதிகமாகின்றன.

எப்படி கபீர்தாஸ் இவைகளை எல்லாம் காணும் முன்பே இதற்கேற்றாற் போல் பொருத்தமான ஈரடிகளை சொல்லி வைத்திருக்கிறார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.

क्रोध अगनि घर घर बढी, जलै सकल संसार ।
दीन लीन निज भक्त जो, तिनके निकट उबार ॥


வெறுப்பின் சுவாலை சூழுதே, மனைமனையும் பற்றி எரியுதே
அறிவாய் உய்யும் வழியதே, அடியவர் அன்பில் திளைப்பதே


दसौं दिसा से क्रोध की, उठी अपरबल आग ।
सीतल संगत साध की, तहां उबरिये भाग ॥


பகைமை பரவுது பெருங்கனலாய், பத்துத் திசையும் வெகுபலமாய்
தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய்


இரண்டு ஈரடிகளிலும் கபீர் பரிந்துரைப்பது சான்றோர்களின் உதவியால் மனதில் வளரும் வெறுப்பு என்னும் நச்சுப்பொருளை தவிர்க்க முடியும். அதற்கு எப்பொழுதும் மேலோர் துணை அவசியம் என்பதாகும்.

பகைமையும் அன்பும் இருளும் ஒளியும் போல. Mutually exclusive. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்க முடியாது.

ஆகையால் பிடிவாதமாக மனதில் எழும் அல்லது தூண்டப் பெறும் வெறுப்பு உணர்ச்சிகளைக்கூட வெறுத்து ஒதுக்க வேண்டும். நம் நல்லெண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் மீது வெறுப்பை கொட்டுபவர்களிடமிருந்து விலகி நிற்பதே நலம். குறைந்த பட்சம் நாம் வெறுப்பை விதைக்காமல் இருக்கலாம் அல்லவா!

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார் தம் வாயிற் சிதைந்து


என்று பெரியோர் பெருமையை புகழ்கிறது நாலடியார். கரும்பினைக் கடித்து, கணு நொறுங்குமாறு இடித்து அதன் சாற்றை பிழிந்தாலும் பிழிந்தவர்க்கு அது இனிக்கவே செய்யும். அது போல மனம் புண்படும்படி சிறியவர் திட்டித் தீர்த்தாலும் பெரிய மனதுடைய சான்றோர்கள் அவர்களை திரும்பத் திட்ட மாட்டார்கள். அவர்களுடைய மேன்மையான நடத்தை இன்பம் தருவதாகவே இருக்கும்.

அதற்கு தேவையான மனப்பான்மையை அவர்கள் எப்படிப் பெறுகிறார்கள்? நிறைந்த அன்பினால் வரும் தன்னம்பிக்கை அது. தன்னம்பிக்கை உடையவனை குலைக்கமுடியாது. அவன் கொண்ட கொள்கையில் மாற்றம் இராது.

சிலம்பம், கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு முறைகளை கற்றவர்கள் வெகு எளிதில் கோபம் அடைவதில்லையாம். அதன் பின்ணணி அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. அவர்களுக்குத் தெரியும் எதிரியின் பலவீனமே அவர்களின் முன்கோபமும் வெறுப்புணர்ச்சியுந்தான் என்பது. அவர்கள் எதிரியை தலைமேல் அமரும் ஈயைப் போல தாங்குவர் என்கிறது இன்னொரு செய்யுள்

மதிதிறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப்பாரும் இறக்க -மிதித்தேறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று

(கதம்= கோபம்; காய்தல்=வருத்துதல்)

மனதில் அன்பு பெருகும் போது பெரும் தியாகத்திற்கு கூட தயாராகி விடுகிறது நம் உள்ளம். அன்பில் சிறந்தவர் தமக்கு வெற்றி தரத் தக்க ஆற்றலையும் வலிமையையும் கூட விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை ஏனாதிநாதர் நாயனாரின் தியாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

கும்பகோணத்திற்கு* தென்கிழக்கில் ஏனநல்லூர் என்ற ஊரில் வசித்தவர் ஏனாதிநாதர். அரச குடும்பத்தினருக்கு வாள் வித்தை பயிற்றுவிப்பது அவருடைய தொழில். வாள் வித்தையில் மிகச் சிறந்த அவ்வீரர் தொழிலின் மூலம் தமக்குக் கிடைத்த வருவாயை சிவனடியார்களின் சேவைக்கென பயன்படுத்தி சிவத் தொண்டிலும் சிறப்புற்றிருந்தார். அவர் புகழ் எல்லாத் திசைகளிலும் பெருகி வளர்ந்தது.
(* காஞ்சிபுரத்தருகே உள்ள ஏனநல்லூர் என்றும் சொல்வதுண்டு)

அதே காலத்தில் அதிசூரன் என்னும் இன்னொரு வாள் ஆசிரியனும் இருந்தான். தன்னை விட அதிகம் வாட்கலை கற்றவர் இல்லை என்ற செருக்குடன் திரிந்தான். அவனுடைய தற்பெருமையே அவனுடைய தொழில் மங்குவதற்கு காரணமாயிற்று. அதைப் புரிந்து கொள்ளாத மூடன் ஏனாதிநாதர் மேல் பொறாமை கொண்டான். அவரை வெற்றி கொண்டால் தன் புகழ் ஓங்கும் என்றெண்ணி அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் போருக்கு அழைத்தான்.

இருதரப்பிலும் உள்ளோர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டனர். அதிசூரன் தோற்கும் நிலைக் கண்டதும் களத்தை விட்டோடினான். தனது தோல்வியை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே சூழ்ச்சியால் வெல்லும் எண்ணத்துடன் ஏனாதிநாதருக்கு தனிப் போர் செய்ய தூது விட்டான். நரிக்கு சிங்கம் பயப்படுமா? அதனையும் ஏற்று வாளும் கேடயமும் ஏந்தி போர்களம் புகுந்தார். கேடையத்தால் முகத்தை மறைத்தபடியே வாள் வீசி வந்த அதிசூரனுக்கு ஏனாதிநாதரின் தாக்குதலை தாங்க இயலாமல் போனபோது தம் முகத்தை மெள்ள அவர் காணுமாறு கேடயத்தை விலக்கினான். அப்போது அதிர்ச்சி ஏற்பட்டது ஏனாதிநாதருக்கு. அதை பெரிய புராணம் இப்படி உரைக்கிறது.

கண்ட பொழுதே ’கெட்டேன்! முன்பு இவர் மேற்காணாத
வெண் திருநீற்றின் பொலிவு மேற்கண்டேன் - வேறு இனி என்?
அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினர்
’ என்று மனம்
கொண்டு ’இங்கு இவர் தம் கொள்கைக் குறிவழி நிற்பேன்’ என்று (645)


கைவாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் ”நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு”
என்று இரும் பலகை
நெய்வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்
(646)

(அடர்த்து நேர்வார் போல்= சண்டையிடுபவர் போல)

அதுவரை போரில் வெற்றி பெற வேண்டும் என்றிருந்த குறிக்கோள் போய், மடை திறந்த வெள்ளம் போல் திருநீற்றைக் கண்ட உடனேயே சிவபெருமான் பால் அன்பு பெருக்கெடுத்தது. சிவனடி்யார் சித்தமே சிவன் சித்தம் என தன் உயிரையும் தர தயாராகி விட்டார் ஏனாதிநாதர். போதாதற்கு நிராயுத பாணியை கொன்றதாக அவப் பெயர் அவருக்கு வந்து விடக்கூடாது என்று சண்டையிடுபவர் போல் பாசாங்கு செய்து அதிசூரன் வாளினால் மரணத்தைத் தழுவினார்.

அதிசூரன் சிவனடியார்களுக்கு ஏனாதிநாதர் துன்பமிழைக்க மாட்டார் என்ற கொள்கையைப் பயன்படுத்தி சிவனடியார் வேடம் பூண்டு வஞ்சகமாக அவரைக் கொன்றான் என்பதை ”முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு..” என்ற வாசகங்களால் அறிகிறோம்.

வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத மூட பக்தியிது என்று மனித குலம் நினைக்கலாம். ஆனால் அதற்கு சேக்கிழார் சொல்லும் பதில்;

மற்றினி நாம் போற்றுவது என் ? வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொற்கொடியாற் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
.
(பற்றலர் =பகைவன்)

பகைவனுடைய வாளாலேயே உலகப் பாசத்தை அறுத்து உடன்பிரியாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சிவபெருமானது பெருமையை போற்றுவது எங்ஙனம் ? என்று சொல்லி இறைவன் புகழுக்காக உயிரைக் கொடுப்பதே மேலான செயல் என்று வலியுறுத்துகிறார்.

அன்பெனும் ஊற்று வெளிப்படுவதற்கு ஊற்றுக் கண் ஒன்று வேண்டும். ஏனாதிநாதர் அதைச் சிவச்சின்னமாக பகைவனின் நெற்றியில் அணிந்த திருநீற்றில் கண்டார். இனி வேறு என்? அண்டர் பிரான் சீரடியார் ஆயினர் ,,இவர்தம் கொள்கை குறிவழி நிற்பேன் “ என்று தம்மவராக பாவித்து அவருடைய தேவையே பெரிது என்று முடிவு செய்கிறார்.

மொழி தெரியாத மாநிலத்தில் தமிழ் பேசுபவரைக் கண்டால் உடனே அன்பு பொங்குகிறது. கண்காணாத தேசத்தில் இந்தியர் என்றாலே ஒருமை பாராட்டி மகிழ்கிறது மனம்.

நல்ல சத்சங்கங்களிலே புத்தகங்களிலே மகான்களின் வாழ்க்கையிலே தினம் ஈடுபாடு கொள்ளும் போது பல வகைகளிலே அது திறந்து வெளிப்பட வாய்ப்புண்டு.
எல்லாமே அவனாகி நிற்கும் அடிப்படை, சத்சங்கங்களின் மூலம் புரிய வரும் போது யார் யாரிடம் எதற்காக வேற்றுமை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருகிறது.

மழையில் நனைந்த விறகு தீயினை ஏற்காது. அன்பில் நனைந்து விட்ட உள்ளமும் வெறுப்பினை ஏற்காது. அந்நிலையில் வெறுப்பை உமிழும் அன்பரிடமும் கூட வெறுப்பு கொள்ளாது அன்பையே பாராட்டும் குணம் மேலோங்குகிறது.

அதனால்தான் கபீர் ”அறிவாய் உய்யும் வழியதே; அடியவர் அன்பில் திளைப்பதே” என்றும் ”தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய் ” என்றும் அறிவுறுத்துகிறார்.

பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம். மனைமனையும் பற்றி எரியுது என்பது பொய்யாகி குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி. அன்பே சிவம்.

Monday, October 12, 2009

அவரவர் இறையவர் குறைவிலர்

தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களை இயக்கும் மின்சக்தி மோட்டர்கள் ஏராளமாக வொர்க் ஷாப்பில் கிடப்பில் கிடக்கும். பல வேலை செய்யாது;ஒரு சில ஸ்டாண்ட்‍‍ ‍பை என சொல்லப்படும் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும். வேடிக்கை என்ன வென்றால் எதற்கான ஸ்டாண்ட் பையோ அதற்கான தேவை வராது. வேறு ஏதோ ஒரு மோட்டருக்கான அவசியம் வந்துவிடும். அந்நிலையில் வொர்க் ஷாப்பில் தேடல் துவங்கும்.

சார், இங்கே NGEF-5 H.P. மோட்டர் இருக்குது சார். பொகஞ்சு போனதும் அஞ்சு ஹெச்.பி. தான சார் ?

அது கிர்லோஸ்கர் மோட்டர். என்ன ஸ்பீட் போட்டிருக்கான் பாரு"

ஆவாது சார், இது 2800 . நமக்கு 1440 இல்ல வேணும்.

அதோ அந்த க்ராம்டன் மோட்டர பாருப்பா. அது கூட 5 h.p. தான் நெனக்கிறேன்.

அது பேஸ் ஃபிரேம் (base frame) செட் ஆவாது சார். போறாததுக்கு போனவாட்டி ரீவைண்ட் பண்ணி வந்ததிலேந்து சுகமில்ல சார். அடிக்கடி ட்ரிப் ஆவுது.

அரைமணி முக்கால் மணி தேடிய பிறகு உதவியாளருக்கு ஒரு ஐடியா. "சார், ஒரு கூலிங் டவர் சும்மா தான இருக்கு. அதுல இருக்கிற மோட்டரும் 5, 1440 தான். பேஸ் ஃப்ரேம் கூட செட் ஆயிடும். ஆனா கப்ளர் ஷாப்ட் மட்டும் கடைஞ்சி போட வேண்டியிருக்கும். லேத் க்கு ஆள அனுப்பினா மதியத்துக்குள்ள தயார் பண்ணிடலாம். அப்புறமா ரெண்டு நாள்ல கூலிங் டவருக்கு வேற ஒண்ணு செட் பண்ணிடலாம்"

கொஞ்சம் யோசித்து, “அப்படியா சொல்ற. அதுல கைவைக்க வுடுவாங்களாய்யா? சரி மேனஜர் சார் கிட்ட பேசிப் பாக்குறேன். நீ ஒடனே லேத்துக்கு போன் பண்ணு.”


இது தினசரி வாடிக்கை. பார்ப்பதற்கு இந்த மோட்டர்களெல்லாம் ஒன்று போலவே இருக்கும். ஆனால் அவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை நுணுக்கம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.

சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.

மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.

குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)

ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

கபீர்தாஸ் மிக எளிமையாக இந்த வேற்றுமையை தினசரி நிகழ்விலிருந்து படம் பிடித்துக் காட்டுகிறார்.

मांगन को भल बोलनो, चोरन को भल चूप ।
माली को भल बरसनो धोबी को भल धूप ॥


இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில்தான் எவ்வளவு வித்தியாசம்.

இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.

இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.

(ரம்யா அவர்கள் ஏற்கனவே இந்த கதையை சுவையாகக் கூறி விட்டிருப்பதால் மீண்டும் இங்கே எழுதுவது அவசியம் இல்லை)

இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.


ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகைவகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.

அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.

ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.

அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.

ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.

அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.

இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.

அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!

இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே


வரும் தீபாவளி நன்னாளில் யாவருக்கும் அந்த கண்ணனின் அருள் பெருகுவதாக.

அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.