Saturday, September 26, 2009

அந்தகன் முன்னே ஆடற்கலை

எப்போதும் யாவர்க்கும் திறந்து இருக்கும் ரமணாஸ்ரமத்தி்ற்கு ஒரு அன்பர் விஜயம் செய்தார். மகரிஷியின் சமீபமாக அமர்ந்து கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“பகவான்! ஜனனக் கட்டுப்பாடு (birth control) பற்றிய தங்கள் கருத்து என்ன ?”

பதிலேதும் வராமல் போகவே கேள்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். பின்னரும் ஏதும் பதில் வரவில்லை. ஒரு வேளை தான் சரியாகச் சொல்லவில்லையோ என்று மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்ந்து போனார். அந்த அறையில் மீண்டும் அமைதி நிலவியது.

இப்போது ரமணரின் குரலில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது.

”உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”

[இரமணருடைய எதிர் கேள்வி ஆழமானது. மரணத்தை ஒழித்தால் பிறப்பும் கூட ஒழிந்து விடுமன்றோ !

‘கருப்படுத்தி என்னை எமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?


‘என்னை ஒரு கருப்பைக்குள் வைத்து பிறப்பு தந்து பின்னர் எமன் பிடித்துச் செல்லும் முன் நின் வடிவாய் உருசெய்து பிறப்பு இறப்பற்ற வீட்டுலகை பெற திருவருள் வருவது எப்போதோ’ என்று ஜனன மரணத்தை ஒழிக்கும் வகை வேண்டுகிறது பத்திரகிரியாரின் அருட்புலம்பல்]


மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.

அன்பரிடமிருந்து பதில் வரவில்லை.

இப்படி யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்று புரியாமல் பல சமயங்களில் தடுமாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்போது தம்முடைய கேள்விகளாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

தாம் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானத்தின் மேல் உள்ள அபார பற்றுதலும் பெருமையுமே இதற்கு முக்கிய காரணம். கபீர்தாஸருடைய காலத்திலும் அப்படிப் பட்டவர்கள் இருந்திருப்பார்கள் போலும் !

ज्ञानी से कहिये काह, कहत कबीर लजाये ।
अंधे आगे नाचते, कला अकारथ जाय ॥

ஞானிக்கு உரைப்பது மென்னே, கபீரும் நாணம் கொள்வனே
நாட்டியமோ அந்தகன் முன்னே, அதனால் ஆவதும் என்னே


மாற்று:

பண்டிதர் பாடம் கேட்டார், நாணம் கொண்டான் கபீரும்
அந்தகர் முன்னே ஆடற்கலை, வீணாய் போச்சுது பாரும்


ஞானி என்பதற்கு பொதுவாக முற்றும் அறிந்தவர் என்று பொருள் கொள்வோம். ஆனால் இங்கே சாஸ்திரங்களைக் கற்றறிந்தவர் என்ற பொருளில் வருகிறது. அடக்கமற்றவர்களாயின் அவர்களுக்கு எதை எடுத்துரைத்தாலும் எடுபடாது.

பிறவிக் குருடனுக்கு சித்திரக்கலையோ ஆடற்கலையைப் பற்றியோ சொல்லினால் எப்படி விளங்காதோ அது போல அஞ்ஞானிகளுக்கு ஞானிகளின் சமீபம் கிட்டினாலும் பயன் இருக்காது. இதை மாற்றுவதும் முடியாது.

சிவாய நம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் இல்லை என்பது ஔவையாரின் வாக்கு. சிந்திப்பதை விட்டு அறிஞர்கள் ஆராய்ச்சியில் இறங்கினால் என்னவாகும். பட்டினத்தார் சொல்கிறார்:-

கார காரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
கார காரம் என்பார் வகையறியார் பூரணமே


இறைவனின் திருநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு இயல்புகளைச் சொல்லி அவற்றின் மேன்மையை பல்வகையாய் விளக்குவார்கள் ஆனால் அதன் மூலம் உன்னை அடையும் வழியை மட்டும் அறியமாட்டார்களே என்று விசனப்படுகிறார் பட்டினத்து அடிகள்.

மாந்தோப்பில் நுழைந்து மரங்களின் உயரம், காய்களின் எண்ணிக்கை, இலைகளின் அளவு இப்படி பலப்பல கணிப்பில் ஈடுபட்டவர்களை விட ஒரு பழத்தைப் பறித்து சுவைப்பவன் புத்திசாலி என்று பரமஹம்ஸர் கூறுவாராம்

கபீர்தாஸர் குறிப்பிடும் அறிவுக் குருடர்கள் இவர்கள். இதற்கான தீர்வை ஏற்கனவே கபீர் சொல்லியிருக்கிறார்

செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே

இன்று சரசுவதி பூஜை. கிரந்தம் படிப்பது வீணே என்று சொல்ல என்னமோ போலிருக்கிறது. கபீர் சொல்ல வருவதும் பொருளறியாமல் செய்யப்படும் செயல்களைத்தான் வீண் என்கிறார்.

இதற்கு கவியரசர் கம்பனும் உடன்படுகிறார். அவளை அண்டினால் எது செய்ய வேண்டினும் அது சித்தியாகும், முக்தி உள்பட !

சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள், எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்கலா முறப் போதிக்கலாம், சொன்னதே துணிந்து
சாதிக்கலாம் மிக பேதிக்கலாம் முத்திதான் எய்தலாம்
ஆதிக் கலாமயில் வல்லி பொன் தாளை அடைந்தவரே


யாவருக்கும் அன்னை சரசுவதியின் அருள் சித்திக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

-----------------------------------------------
பலரும் விரும்பிய கட்டுரைத் தொகுப்பு -முதல் பாகம் -கபீரின் நிழலில்... என்ற பெயரில் வலையேற்றப்பட்டுள்ளது.

வேண்டுபவர் அதை Scribd வலைப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Kabirin_nizhalil

(இங்கேயே படிக்க விரும்புவர்கள் வலது பக்க மேல் மூலையில் Toggle Full screen மெனுக் குறியை பயன்படுத்தி படிக்கலாம். கூகிள் ரீடரில் இந்த விட்ஜெட் காண்பிக்கப்படுவதில்லை )

கீழே உள்ள இணப்பின் மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
கபீரின் நிழலில்...
கபீரின் நிழலில்......
Hosted by eSnips

Friday, September 04, 2009

தேடுகின்றலை தெருவுதோறலறிலை

   குப்பை மேட்டிலே நாயொன்று தொங்கிய காதுகளுடன் யோகியை போல அரைக்கண் மூடி முன்னம் கால்களுக்கு இடையே தலையை வைத்து படுத்துக் கிடந்தது. எவ்வளவு நேரமாகவோ தெரியாது.

     விருட்டென்று அதன் காதுகள் குத்திட்டு நின்றன. தலையைத் தூக்கி ஒரு பார்வையில் நிலவரத்தைப் புரிந்து கொண்டு சத்தமாய் குரைக்கத் தொடங்கியது. கூடவே இன்னும் சில தெரு நாய்களும் சேர்ந்து கொண்டன. யாரோ ஒருவர் தன் வளர்ப்பு நாயை பிடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். அவ்வளவுதான். அவர்கள் அந்த தெருவை விட்டு செல்லும் வரையிலும் எட்டி நின்று குரைத்து தீர்த்து தன் கடமை முடிந்ததென்று மீண்டும் வந்து படுத்துக் கொண்டது. 

   சிறிது நேரம் கழித்து அதன் மூக்கு எதையோ மோப்பம் பிடிக்க, எழுந்து சைக்கிளில் போய் கொண்டிருந்த தின்பண்டம் விற்பவன் பின்னேயே சென்றது. அவன் எங்கெல்லாம் நின்றானோ அங்கெல்லாம் ஏதோ எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தவாறு நின்றது. அவன் தெருமுனை தாண்டியதும் தன் எல்லையை மீற முடியாமல் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டது. 

    இது நாம் யாவரும் அன்றாடம் காணும் காட்சி. ஞானிகளின் பார்வையில் இந்த நாயின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பிறந்ததிலிருந்து ஏதேதோ ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். எதையெதையோ பின் தொடர்கிறோம். விதியால் வரையறுக்கப்பட்ட நம் எல்லைக்குள் சில கிட்டுகின்றன. பல நிராசையாய் முடிகின்றன. 

மனிதப் பிறவி அளிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து மனது வேண்டாதவற்றைப் பற்றிக் கொண்டு சதா திரிகிறது. இதை கவனிக்கும் ஞானிகளுக்கு மக்களை நல்வழி படுத்த வேண்டிய நல்லெண்ணம் ஏற்படுகிறது.

“நீ அப்படியிருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் “ என்றெல்லாம் உபதேசம் சொன்னால் ‘இவன் யார் சொல்வதற்கு’ என்ற எண்ணம் மேலோங்கும். அதற்கு பதிலாக “என்னால் நல்லவிதமாக நடந்து கொள்ள முடியவில்லையே ! நல்லவிதமாக பேசத் தெரியவில்லையே” என்று யாராவது சொல்லிக் கொண்டால் சொல்லப்படுவது என்ன என்பதையாவது கவனிப்பார்கள். அப்படி மாணிக்கவாசகர் சொல்லிய பாடல் ஒன்று. 

  ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை என்புருகி 
 பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் 
  சூடுகிறதுமிலை சூட்டுகின்றதுமிலை துணையிலி பிண நெஞ்சே   தேடுகின்றிலை தெருவுதோறலறிலை செய்வதொன் றறியேனே 

 இவரைப் போலவே கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதரும் புத்தி உரைக்கிறார். 

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச் 
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் 
 புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே 

(புந்தி கிலேசம்= அறிவில் ஏற்படும் மயக்கம் ; காயக்கிலேசம்= உடலைப் பற்றிய ஈடுபாடு)

ஒருவருடைய பிறவி கடைத்தேற என்னென்னத் தேவையோ அவற்றில் ஈடுபாடு இன்றி காலத்தைக் கழிக்கிறார்களே என்ற கழிவிரக்கம் இவர்களைப் போலவே கபீர்தாஸருடைய பல பாடல்களிலும் காணப்படுகிறது. 

  राम नाम जाना नहीँ, लागी मोटी खोर । 
 काया हांडी काठ की, ना वह चढै बहोर ॥

இராம நாமம் அறியலையே, நாடா பேதமை புரியலையே 
காட்டம் போல் காயமிதே, உலைக்குள் போனால் மீளாதே 
(நாடா பேதமை = இறைவனை நாடாத அறிவின்மை; காட்டம்= காஷ்டம், விறகு;
 காயம்=உடல்; உலை= அடுப்பு ) 

 கபீர், மனித உடலை விறகுக்கு ஒப்பிடுகிறார் . 

சிலவகை மரங்கள் வெறும் அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும். அவைகளின் காயோ பழமோ பயன்படுவதில்லை. அவைகளில் பறவைகளும் கூடுகட்டி வாழ்வதில்லை. முள் நிறைந்த அம்மரங்களை வெட்டி வந்து விறகாய் எரிப்பது ஒன்றே அவைகளால் கிடைக்கும் பயன். 

 உலகத்தில் பெரும்பாலோர்க்கு இறைவழியில் நாட்டமின்றி குப்பை மேட்டு நாய் போல வாழ்நாள் போய்விடுகிறது. ”அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ? ஐயோ நாட்டமில்லாமல் தினங்கள் போய்கொண்டிருக்கின்றனவே” என்ற கவலையோ ஏக்கமோ தோன்றுவதுமில்லை. கடைசியில் அவர்களுடைய பிறவி விறகின் கதையாக முடிகிறது.

 மாயையை உண்மை என்று நம்பி இறையருளை இழந்து, இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தவிக்கும்நிலையைப் பற்றி கபீர் மேலும் சொல்கிறார். 

  रामनाम  कडआ लगै, मीठा लागै दाम । 
  दुविधा में दोऊ गये, माया मिली न राम॥ 

  இராம நாமம் கசக்குதே, இகமாய லோகமும் இனிக்குதே
  இராமனோ மாயையோ அத்தே! இரண்டு மின்றிப் போகுதே 

(அத்தன்=கடவுள் : அத்தே =கடவுளே -நிராசையின் வெளிப்பாடு) 

 மனதுக்கு இனிக்கின்ற விஷயங்களையும் கசக்கின்ற விஷயங்களையும் அருணகிரியார் பட்டியலிட்டு கபீரைப் போலவே முக்திக்கான தஞ்சத்தை தேடுகிறார்.

  பால் என்பது மொழி; பஞ்சு என்பது பதம்; பாவையர் கண் 
 சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை 
 வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்
 கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே. 

  படிக்கின் றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள் 
 முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு 
  மிடிக்கின்றிலை பரமாநந்த மேற்கொள விம்மிவிம்மி 
  நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே.

       மனிதன் வாழ்நாள் வீணாவதைப் பற்றி கபீர்தாஸருடைய மிகப் புகழ்பெற்ற பாடல் - இசைக் கலைஞர்கள் பலரும் விரும்பிப் பாடும் பாடல் “பீத் கயே தின் பஜன் பினா” என்பதாகும். . பாடலை தொடர்வதற்கான வரிவடிவமும் அதற்கான பொருளும் தரப்பட்டுள்ளன. 

 बीत गये दिन भजन बिना रे . பீத் கயே தின் பஜன் பினா ரே 
भजन बिना रे, भजन बिना रे .. பீத் கயே தின் பஜன் பினா ரே
(தினங்கள் போகின்றனவே அவனைத் துதியாமலே, ;ரே என்பது விளித்தல்)

 बाल अवस्था खेल गवांयो . பால் அவஸ்தா கேல் கவாயோ 

जब यौवन तब मान घना रे .. ஜப் யௌவன் தப் மான் கனா ரே 
(வேடிக்கையும் விளையாட்டும் குழந்தை பருவத்தை கவர்ந்தது இளமை பருவம் கர்வத்தி்ல் கழிந்தது)

लाहे कारण मूल गवाँयो . லாஹே காரண் மூல் கவாய்
अजहुं न गयी मन की तृष्णा रे .. அஜ்ஹு ந கயீ மன் கீ த்ருஷ்ணா
(பேராசை என்பது மூலத்தை கவர்ந்து சென்றது ஆயினும் வேட்கையின் தாகம் விடவில்லை) (மூலம் என்று குறிப்பிடப்படுவது இறைவனுடனான பிணைப்பு ) 

 कहत कबीर सुनो भई साधो . கஹத் கபீர் ஸுனோ பாயி ஸாதோ 
पार उतर गये संत जना रे பார் உதர் கயே ஸந்த் ஜனா ரே 
(அன்பர்களே கபீர் சொல்வதை கேளுங்கள். வேட்கை விட்டவரே இறை அன்பர் ஆயினர்) 

கீழுள்ள இணைப்பில் ‘பாரத் ரத்னா’ பண்டிட் பீம்ஸேன் ஜோஷி அவர்கள் பாடியிருக்கும் இந்த பாடலை கபீர்தாஸரின் வாழ்க்கை சித்திரங்களுடன் காணலாம்.


பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரரும் இதே கருத்தை தானே வலியுறுத்துகிறார். 

  பாலஸ்தாவத் க்ரீடாஸக்தா; தருணஸ்தாவத் தருணீஸக்த: 
  வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: பரே ப்ருஹ்மணி கோ அபி ந ஸக்த: 

 பாலபருவத்தில் விளையாட்டில் கவனம். தருண வயதில் பெண்ணின் மோகம்; முதுமையோ கவலையில் போகுது. ஆனால் பரபிரம்மத்திற்காக ஆசைப்படுவோர் இல்லை. 

 ஞானிகள் யாவரும் ஒன்றையே மொழிகின்றனர். கேட்பதற்கு தான் நமக்கு மனம் வேண்டும்.
 ____________________________________________ 

  இந்த பதிவுடன் கபீரின் கனிமொழிகள் வலைப்பூ மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. கபீர்தாஸரின் விருப்பமும் வாசக அன்பர்கள் தருகின்ற உற்சாகமுமே இதை நடத்தி வருகிறது என்றால் மிகையாகாது. அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் காணும் இடுகைகளை சிறப்பிக்கும் வகையில் பல ஒலி ஒளி கோப்புகளை வலையேற்றிருக்கும் வலைப்பக்க- முகம் தெரியாத- நண்பர்களுக்கும் கோடானு கோடி நன்றி.