Saturday, July 18, 2009

அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம்

கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. பெரும்பாலான புது மாணவர்களுக்கு உற்சாகத்தை விட கவலை அதிகம். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியவர்கள் கவலையெல்லாம் சந்திக்கப் போகும் ராகிங் பற்றியதே என்றால் மிகையாகாது. குருக்ஷேத்ராவில் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்த மாணவொருவன் ஒரே வாரத்தில் கல்லூரியை விட்டே ஓடி வந்து விட்டான். மீண்டும் அங்கு போவதற்கு மறுத்து விட்டான். பல நாட்கள் அவன் பட்ட துன்பமும் தாய் தந்தையருக்கு ஏற்பட்ட துன்பமும் சொல்லி முடியாது.

ஒருவனைச் சுற்றி பலபேர் கூடி பாட்டுப் பாடச் சொல்வது ஆடச் சொல்வது எல்லாம் ராகிங்-ல் சர்வசாதாரணம். அதில் தரக்குறைவான நடத்தைகளும் பேச்சுகளும் புது மாணவனை புண்படுத்தும் வகையிலேயே இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைப்படம் போலே அடித்து வீழ்த்தி தப்பிக்க முடியாது போகின்றதே :(

நம் ஒவ்வொருவரை சுற்றியும் தினமும் ஐந்து பேர். தூங்கும் நேரம் தவிர எந்நேரமும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் அவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது புது மாணவனைப் போலவே எப்போதடா விடுதலை என்று ஏங்கிப் போகிறது மனது. கபீர் இந்நிலையைப் பற்றி சொல்வதைக் காண்போம்.

कबीर बैरी सबल है, एक जीव रिपु पांच ।
अपने-अपने स्वाद को, बहुत नचावै नाच ॥


வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே


(வைரி=எதிரி ; ஒன்று= ஒரு சீவன்; அஞ்சுமே= ஐந்து புலன்களுமே; அரங்கு என்பது உலகத்தை குறிக்கவந்தது)

ஐம்புலன்கள் என்ற எதிரிகள் தத்தம் விருப்பத்திற்கேற்ப மனிதனை ஆட்டிப் படைக்கின்ற நிலையை இந்த ஈரடியில் சித்தரித்திருக்கிறார் கபீர்தாஸ்.

புத்திக்கு நல்லன எவை என்பது தெரிந்தும் அவற்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் புலன்வழியே அல்லாதனவற்றில் விருப்பு கொண்டு தினங்கள் கழியும் போது குற்ற உணர்ச்சி பலமாக பிடித்தாட்டுகிறது. அதனாலேயே பல நேரங்களில் மன அழுத்தம் அதிகமாகிவிடுகிறது. கண்ணதாசன் போலொரு கவிஞனுக்கு பழி உணர்ச்சியும் அதிகமாகி படைத்தவனை தண்டிக்கவும் சொல்கிறது.
............
”அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டுப் பார்த்திருப்பேன்.
படுவான், துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
.......”

கடவுளே ஆனாலும் புலனின்பங்களின் இழுப்பிலிருந்து தப்புவது எளிதல்ல என்னும் கற்பனை சராசரி மனிதனுக்கு ஆறுதல் தந்தாலும் பிரச்சனைக்கு விடையாவதில்லை. அதற்கு ஞானிகளின் வழியையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது

ஞானிகளும் புலன்களின் சக்தியை குறைத்து மதிப்பிடவில்லை. அவைகளின் பலத்தை யானைகளின் பலத்திற்கு ஒப்பிடுகின்றனர். மாணிக்க வாசக பெருமான் சொல்வது

ஆனை வெம்போரில் குறுந்தூறு எனப்புல
னால் அலைப்பு உண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினை
யேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமு
தத்தையும் ஒத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற
ஒண்மையனே


யானை நடந்தாலே அடியில் புற்களும் புதர்களும் நசுங்கும். அவைகளிடையே போர் ஏற்பட்டால் சிறிய புதரின் கதி எப்படியிருக்கும்? அப்படி ஒரு புதர் சிக்குண்டு அவதிப் படுவது போலே புலன்களுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் என்னை விட்டு விடுவாயோ என்று கலங்குகிறார் மணிவாசகர்.

யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடும். அப்பொழுது ஏற்படும் அபாயத்தைக் காட்டிலும் மதம் பிடித்த -கூட்டத்தை விட்டு ஒதுங்கிய -ஒற்றை யானை மிகவும் அபாயகரமானது என்பர். அதனாலோ என்னவோ கபீர் ஒற்றை யானையாக புலன்கள் வசப்பட்ட மனதை இன்னுமொரு ஈரடியில் சித்தரிக்கிறார்.

कबीर मनहि गयंद है, आंकुस दे दे राखु ।
विष की बेली परिहरो , अमृत का फल चाखु ॥


கரியதன் பலமுண்டு மனதிற்கு, கைகொள் கபீரா ஒரு தோத்திரம்
கரியதை ஒழிக்க வழியுண்டு, கைகொள் அமிழ்தமாம் தோத்திரம்


[கரியதன் பலம் =யானையின் பலம்; தோத்திரம் = 1)அங்குசம் :2) வழுத்துதல் ,போற்றுதல்; கரி்யதை =நஞ்சுடைய மனதை]

தோத்திரம் என்பதற்கு அங்குசம் என்று இன்னொரு பொருளும் உண்டு. வழிக்கு கொண்டு வரத் தேவைப்படுவது யானைக்கும் ஒரு தோத்திரம் மனதுக்கும் ஒரு தோத்திரம் !

அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது.

அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே.
(977)

உடல் என்ற காட்டுக்குள் ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகள் வாழ்கின்றன. அஞ்சு எழுத்தாகிய ’நமசிவாய’ வை அங்குசம் ஆக்கி ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்க வல்லவர்களுக்கு அந்த ஐந்திற்கும் ஆதியாகி நிற்கும் ஆதிமுதல்வன் வீடு சேரலாம்.

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாள்தோறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே
( )

[நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் ; அஞ்சற்று விட்டது = சங்கிலி அறுபட்டொழிந்த]

அணையா விளக்காய் எல்லா உள்ளங்களிலும் நிறைந்து ஒளிவிடும் செம்பிரானை உணர்ந்து நாள்தோறும் உறங்கச் செல்லும் வரை வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித்தால் ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த யானை போன்று கட்டுக்கடங்காமல் போய்விடும்.

துஞ்சுமளவும் தொழுமின் என்பதை இறக்கும் வரையிலும் என்ற பொருளிலும் கொள்ளலாம். அப்போது வாழ்நாள் முழுதும் இடைவிடாமல் சிந்தித்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(picture courtesy : Indian Holidy dot com)

சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அமைதியான யானை அடங்கிய மனதுக்கு அழகான உதாரணம். தன்னைச் சுற்றி எவ்வளவு தாரை தம்பட்டைகள், அடித்து கொண்டாட்டங்கள் நடத்தினாலும் அமைதி குலையாது மணிக்கணக்காக கோவில் உற்சவங்களில் பங்கு கொள்ளும் பக்குவத்தை காண்கையில் பெரும் ஆச்சரியம் ஏற்படும். பலமுறை ஞானிகளின் மனமும் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. தங்களைச் சுற்றி எது நடந்தாலும் அதில் அவர்கள் சம்பந்தப்படாதவர்களாகவே இருப்பார்கள்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இளைஞர் பகவான் ரமணரை அண்ணாமலையார் கோவில் யானையுடன் சேர்த்து எடுத்திருந்த ஒரு புகைப்படத்தை தபால் மூலம் அனுப்பி வைத்தார். அதன் பின் பக்கத்தில் “சரீரத்தை அறியாத பெரிய ஆத்மாவும் ஆத்மாவை அறியாத பெரிய சரீரமும் ஒரே இடத்தில்” என்பதாக குறிப்பும் எழுதியிருந்தார்.

அதற்கு என்ன அர்த்தம் என்று நாகம்மாள் கேட்டதற்கு பகவான் சொன்ன பதில்:

“எவ்வளவு ஆகாரம் கொடுத்தாலும் போதாது என்று பிளிறிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ அதை ஆத்மாவை அறியாத பெரிய சரீரமென்று குறிப்பிட்டிருக்கிறார். நான் எப்போதும் ஆடி அசைந்து மெதுவாக நடந்து எப்படி எப்படியோ நிற்கிறேன் இல்லையா! அதனாலோ என்னவோ நான் சரீரத்தை அறியாத ஆத்மாவாம். அதுதான் அவர் அபிப்பிராயமாக இருக்கலாம்”
.

பூரண ஞானிக்கு தேகபாவனை இருப்பதில்லை என்பதை உயர்த்தி இளைஞர் குறிப்பு எழுதிய போதும் அதை வெகு நயமாக வேடிக்கையாக திசை திருப்பியது ரமணரின் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்.

மனித உடல் என்னும் சிறு கூட்டிலே அடைப்பட்டிருக்கும் நிலையை விஸ்வத்தை தன்னுள் உணர்ந்த மகான் எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டார் !!

ஆன்மீகத்திலிருந்து யானையை பிரிக்கமுடியாது. ஆனைமுகத்தான் முதற்கடவுள். ஆன்மீக இலக்கியத்திலும் யானைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.

இரண்டாவது ஈரடிக்கு மாற்று:
குஞ்சரம் போலாச்சு மனசு, கபீரா அங்குசம் வீசு
நஞ்ச துவும்போ யாச்சு, நாமா மிர்தம் வந்தாச்சு

25 comments:

  1. ஆனை பத்திய பதிவுக்கு நன்னியோ நன்னி!
    - ஆனை பாகன்.

    ReplyDelete
  2. /இன்னொரு முறை குஞ்சு சுவாமிகள் பகவானின் தேக நடுக்கத்தையும் கோலூன்றும் அவசியமும் நடுவயதிலேயே வந்து விட்டது குறிப்பிட்டு காரணம் வினவிய போது, ”பெரிய யானையை சின்ன குடிசைக்குள் கட்டி வைத்தால் குடிசையின் கதி என்னவாகும்? இதுவும் அவ்வளவுதான் !” என்று பதில் கூறினாராம்./

    அருணாச்சல சிவ குரு ரமணா!

    ReplyDelete
  3. //அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
    அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
    அஞ்சையும் கூடத்து அடக்கவல்லார்கட்கே
    அஞ்சு ஆதி ஆதி அகம்புகல் ஆமே. (977)//

    அஞ்செழுத்தும் அங்குசம் ஆயிற்று! அந்த (திரு) மந்திரமே மருந்தும் ஆயிற்று!

    ReplyDelete
  4. அங்குசம் - ஐந்தெழுத்து அருமை. ஐந்தெழுத்தை அங்குசமாகக் கொள்ள முயல்வோம்... :)

    ReplyDelete
  5. ஆனைப்பாகனிடம் தான் அங்குசத்தை பயன்படுத்தும் முறை பற்றி கேட்க வேண்டும். விரைவில் கூடும் என்று எதிர்பார்ப்போம். :)

    நன்றி தி.வா.சார்

    ReplyDelete
  6. வருக கிருஷ்ணமூர்த்தி சார்,

    தாங்கள் குறிப்பிட்ட யானை உதாரணம்தான் இந்த இடுகைக்கு வழிகாட்டியது. அதற்காக தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  7. ///அஞ்செழுத்தும் அங்குசம் ஆயிற்று! அந்த (திரு) மந்திரமே மருந்தும் ஆயிற்று ///

    நல்வரவு ஜீவி சார். வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க மதுரையம்பதி,

    //...ஐந்தெழுத்தை அங்குசமாகக் கொள்ள முயல்வோம்.//

    அதுக்குதான் ஆனைப்பாகனிடம் ரிக்வெஸ்ட் பண்ணியிருக்கு :))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
    பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ
    தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
    கூவிக் கொள்ளும் கால மின்னும் குறுகாதோ?

    குமைத்தல் என்பதை ‘ragging'கு நிகரான சொல்லாகக் கொள்ளலாம். நாஞ்சில் வட்டாரத்தில் வழக்கில் உள்ள சொல்.
    மெய்யடியார்களும் இந்த ஐவருக்கு அஞ்சுகின்றனர்.

    தேவ்

    ReplyDelete
  10. தேவ் சாருக்கு நல்வரவு

    இடுகை எழுதும் போது Ragging என்பதற்கு சரியான வார்த்தையைத் தேடிக் கிடைக்காமல் விட்டுவிட்டேன்.

    ’குமை’ என்ற வார்த்தைக்கு அகராதி தரும் பொருளும் மிக நெருங்கியே வருகிறது. (Tamil Lexicon)

    ”v. intr. < குமை +. To suffer thrashing; அடியுண்ணுதல். கானகம்போய்க் குமை தின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2)”


    குமை²-த்தல் kumai-
    , 11 v. tr. Caus. of குமை¹-. 1. To tread down, tread out into a mash; துவைத்தல்.

    துன்புறுத்தப்படல் என்று பொதுவாகக் கருதலாம்.

    ‘புது மாணவனை மூத்த மாணவர்கள் பலர் சேர்ந்து குமைத்தனர்’

    பொருத்தமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.
    சரியான எடுத்துக்காட்டுடன் தந்த பொருத்தமான பரிந்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //குமைத்தல் என்பதை ‘ragging'கு நிகரான சொல்லாகக் கொள்ளலாம். நாஞ்சில் வட்டாரத்தில் வழக்கில் உள்ள சொல்//

    குமி, குமை = அருமையான தமிழ்ச் சொல் தேவ் சார்! திருவாய் மொழியில் மாறன் பயன்படுத்தும் இந்த "குமை"-ங்கிற சொல் நாம் அப்பப்போ பயன்படுத்தறது தான்!

    குமி அடுப்பு-ன்னு சொல்லுவாய்ங்க! ஒன்னு மேல ஒன்னு "சூழ்ந்து" கரித்துண்டுகள் குமியும்! கொஞ்சூண்டு இடைவெளி தான் விட்டுக்கும்! அதுல காற்று வர, ஒன்னு மேல ஒன்னு பத்திக்கிட்டு எரியும்! பத்த வெச்ச ரெண்டே நிமிடத்தில் டீ குடிக்க வெந்நீர் ரெடி! :)

    மனம் குமைந்தான்-ன்னும் சொல்லுறது இல்லையா? அது போல குமைதல்!

    கரித் துண்டுகள் சூழும் குமி அடுப்பு போலத் தான்
    கபீர் தாசரும் ஐம்புலன்கள் சூழ்ந்து கொண்டு பத்த வைக்குது என்கிறார்!

    கரி = யானை தானே! ஐந்து யானைகள்! அதுவும் பொருந்தித் தான் வருது! :)

    ReplyDelete
  12. //வைரியின் பலமதிகம் கபீரா, ஒன்றுக் கெதி்ராய் அஞ்சுமே
    தத்தம் போக்கில்ஆட்டுமே, அரங்கில் பல்வகைக் கூத்துமே//

    தமிழாக்கம் ரொம்ப நல்லா வந்திருக்கு கபீரன்பன் ஐயா!
    மன ஆக்கமும் அடியேனுக்கு வர வேணுமே!

    கபீர்தாசர் யானையைக் காட்டுவது போல் அப்பர் சுவாமிகள் ஆமையைக் காட்டுகிறார்!

    யானையும், ஆமையும் அமைதிக்குப் பேர் போனவை!
    என்ன ஆரவாரம் நடந்தாலும் கூடுமானவரை அமைதியா இருக்கும்! அம்புட்டு சீக்கிரம் அசைந்து கொடுக்காது!

    ஆனால் சில சமயம் அவையே தடுமாறுகின்றன அல்லவா?

    ஆமையை அடுப்பில் ஏத்தி வச்சி கறி பண்ணாங்களாம் கிராமத்தில்!
    எப்பமே தண்ணீரில் இருந்து ஆமைக்கு வெந்நீரு இதமா இருக்கு!

    ஆனா அந்த இளஞ்சூடு கொஞ்ச நேரத்துக்குத் தான்! அப்பறம் பத்திக்கப் போவுது-ன்னு அதுக்குத் தெரியாம, ஜாலியா இருக்கு! :)

    வளைத்து நின்று ஐவர் கள்வர்
    வந்து என்னை நடுக்கம் செய்ய
    தளைத்து வைத்து உலையை ஏற்றித்
    தழல் எரி மடுத்த நீரில்

    திளைத்து நின்று ஆடுகின்ற
    ஆமை போல் தெளிவு இலாதேன்
    இளைத்து நின்று ஆடுகின்றேன் என்
    செய்வான் தோன்றினேனே

    என்று பாடுகிறார் அப்பர் சுவாமிகள்!

    ஆமைக்கு ஓடும், ஆனைக்கு அங்குசமும் எப்படித் தேவைப் படுகிறது பாருங்கள்!

    ReplyDelete
  13. வாங்க கே.ஆர்.எஸ்.

    விவரமான பின்னூட்டத்திற்கு நன்றி.

    //...தழல் எரி மடுத்த நீரில்
    திளைத்து நின்று ஆடுகின்ற
    ஆமை போல்.... //

    ’சற்பத்தின் வாயில் தவளை போல’
    என்று பட்டினத்தார் சொல்லும் உவமையும் போல இது, வந்து கொண்டிருக்கிற துன்பத்தை அறியாது இன்பத்தை நாடி நிற்கும் போக்கை குறிப்பது.

    //ஆமைக்கு ஓடும், ஆனைக்கு அங்குசமும் எப்படித் தேவைப் படுகிறது பாருங்கள்!//

    ஆமையின் ஓடு தற்காப்பிற்காக இறைவன் கொடுத்திருப்பது. யானையின் அங்குசம் மனிதனின் கண்டுபிடிப்பு. இவையிரண்டும் எப்படி ஒன்றாகும்? சொல்லவந்ததை நான் புரிந்து கொள்ளவில்லையோ ?

    ReplyDelete
  14. ஆமையின் ஓடு தற்காப்பிற்காக இறைவன் கொடுத்திருப்பது. யானையின் அங்குசம் மனிதனின் கண்டுபிடிப்பு. இவையிரண்டும் எப்படி ஒன்றாகும்?

    THANKS FOR RAGGING TAMIL TRANSLATION

    ReplyDelete
  15. //ஆமையின் ஓடு தற்காப்பிற்காக இறைவன் கொடுத்திருப்பது. யானையின் அங்குசம் மனிதனின் கண்டுபிடிப்பு. இவையிரண்டும் எப்படி ஒன்றாகும்?//

    ஆமைக்கு ஓடு இயற்கையிலேயே இருந்தாலும், சில கணங்களில், ஆசை மிகுதியால், கூட்டுக்குள் சுருக்கிக் கொள்ளாமல், தானே மாட்டிக் கொள்கிறது...

    ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் என்பார் வள்ளுவர்.

    அது போல் நமசிவாய என்னும் பஞ்சாட்சரமும் கூடு போல் நம் தற்காப்புக்காக இறைவனே கொடுத்தது! அதைக் கொண்டு ஐந்தடக்கல் ஆற்றின்...?

    அங்குசத்தை இன்னொருவர் பயன்படுத்த வேண்டும்!
    ஓட்டை உயிரே பயன்படுத்த முடியும்!

    யானைக்கு வெளிப் பொருளாய் அங்குசம்!
    ஆமைக்கு உட்பொருளாய் ஓடு!

    ஒன்று ஸ்தூல பஞ்சாட்சரம்!
    ஒன்னொன்று சூட்சும பஞ்சாட்சரம்!

    Two Lines of Defence :)

    ReplyDelete
  16. நல்வரவு பாலு சார்,

    எனக்கு வந்த அதே சந்தேகம் உங்களுக்குமா ?

    கே.ஆர்.எஸ் சந்தேகத்தை நீக்கிட்டாரு.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  17. கே.ஆர்.எஸ்.! நீங்க அப்பர் சுவாமியோட ஆமையை அம்போன்னு விட்டுட்டு, கடைசி வரியில ட்ராக் மாறி வள்ளுவர் சொல்ற ஆமையை மனசுலேயே வச்சுக்கிட்டு எழுதினா எங்களை மாதிரி வாசகர்களுக்கு குழப்பம்தான் வரும். ஏன்னா கொதிக்கிற தண்ணியில ஆமையோட ஓடு எந்த பிரயசோனமும் தராதே.

    /// Two Lines of Defence :) ///

    இப்போ எல்லாரோட சந்தேகமும் தீர்ந்திருக்கும் :)))

    மிக்க நன்றி

    ReplyDelete
  18. //கபீரன்பன் said...
    கே.ஆர்.எஸ்.! நீங்க அப்பர் சுவாமியோட ஆமையை அம்போன்னு விட்டுட்டு, கடைசி வரியில ட்ராக் மாறி வள்ளுவர் சொல்ற ஆமையை மனசுலேயே வச்சுக்கிட்டு எழுதினா எங்களை மாதிரி வாசகர்களுக்கு குழப்பம்தான் வரும்//

    ஹா ஹா ஹா

    //ஏன்னா கொதிக்கிற தண்ணியில ஆமையோட ஓடு எந்த பிரயசோனமும் தராதே//

    கொதிக்கிற தண்ணிக்கு வந்ததே ஓட்டுக்குள் இல்லாமல் போனதால் தானே! :)

    ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றி, ஓட்டுக்குள் சுருங்கி இருந்தா, அதைக் கல்-ன்னு நினைச்சி விட்டுப் போயிருப்பார்கள்!

    உன் ஓட்டுக்குள் நீயே ஒடுங்கப் பார்!
    இல்லை வெளி அங்குசத்துக்கு அடங்கப் பார்!

    ஒன்று ஸ்தூலம்!
    இன்னொன்று சூட்சுமம்!

    அடியேன் இப்போ சூட்சுமத்தில் இருந்து ஸ்தூலமாவே சொல்லிப்புட்டேன் கபீரன்பன் ஐயா! :)

    ReplyDelete
  19. நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஐந்து பேர் என மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களை சுட்டிக்காட்டியது
    புதுமை.

    அவற்றின் சிறப்புக்கும் சீற்றத்திற்கும் நாம் எவ்வாறு அடிமையாகிறோம் என வர்ணித்தது
    அருமை.

    அப்பபுலன்களின் தாக்கத்திலிருந்து விடுபட, வர வேண்டும்
    தனிமை.

    அத்தனிமைதனைப் பெறத் திறனும், துணிவும் வந்துவிடின், எஞ்சிய வாழ்வு
    இனிமை.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  20. "அங்குசத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்பட்டு யானைக்கு சுதந்திர மனப்பான்மை போய் அடிமை மனப்பான்மை வந்து விடுகிறது. நம்முடைய மனமும் இறைவன் நாமத்தால் மீண்டும் மீண்டும் குத்தப்படும் பொழுது சரணாகதி அடைந்து அமைதி படுகிறது. அதை “அங்குஸ் தே தே ராகு” என்கிறார் கபீர். அவர் மட்டுமல்ல திருமந்திரமும் அதையே உபதேசிக்கிறது."

    ஆம் யானையை எப்போதும் எல்லாவற்றிலும் ஆன்மீகத்தின் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது...

    ReplyDelete
  21. நன்றி சுப்புரத்தினம் ஐயா,

    //அத்தனிமைதனைப் பெறத் திறனும், துணிவும் வந்துவிடின், எஞ்சிய வாழ்வு இனிமை //

    மிக அருமை. நன்றி

    ReplyDelete
  22. வாங்க கிருத்திகா

    //ஆம் யானையை எப்போதும் எல்லாவற்றிலும் ஆன்மீகத்தின் குறியீடாகத்தான் பார்க்க முடிகிறது...//

    மிகவும் உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  23. ஆனை பத்திய உதாரணங்களும், அதை ஒட்டிய ஆமை பத்திய விளக்கங்களும் அருமை! நன்றி. அடுத்த பதிவு எதைப் பத்தினு இதிலே தெரிஞ்சுக்க முடிஞ்சது, அதே போல் ராகிங் பத்தியே வந்திருக்கு. அதிலும் அடுத்த பதிவுக்கான குறிப்பு வந்திருக்கு. நன்றி. :)))))))))))

    ReplyDelete
  24. நன்றி கீதா மேடம்

    ///...அதே போல் ராகிங் பத்தியே வந்திருக்கு. அதிலும் அடுத்த பதிவுக்கான குறிப்பு வந்திருக்கு.நன்றி. :))))))))))) //

    ராகிங் பற்றி குறிப்பிடுகிற இந்த இடுகையில் அடுத்து வந்திருக்கும் ”அரியவனா எளியவனா இறைவன் ? என்கிற இடுகை பற்றி என்ன குறிப்பு இருக்கிறது? புரியவில்லையே !

    ReplyDelete
  25. அருமையான உவமைகளுடன் கூடிய அழகான பதிவு.

    மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி