Wednesday, May 27, 2009

அந்தபுரம் சுற்றும் பூனை

பள்ளியில் யாவருக்கும் சொல்லிக் கொடுக்கப்படும் பிரபலமான ஆங்கில குழந்தைப் பாடல் ஒன்று:

Pussy cat pussy cat where have you been
I had been to London to look at the queen
pussy cat pussy cat what did you do there
I frightened a little mouse under the (queen's) chair

பூனை ஒன்று அரசவையில் நுழைவதால் அதற்கு பெருமை ஏதும் இல்லை. ஆனாலும் இவ்வுலகில் ஆதாயம் ஏதேனும் கிடைக்குமா என்ற தன்னலத்தால் பல பெரும்புள்ளிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி வருவோர் அனேகம். பல்லிளித்து கால்பிடித்து தகுதிக்கு மேல் புகழ்ந்தேனும் செல்வாக்கு உடையவரின் நல்லெண்ணத்தை சம்பாதித்து கொள்ள துடிக்கிறது அவர்கள் மனம்.

இதற்கானக் காரணம் பிறரை வைத்து தம்மை தாமே எடை போட்டுக்கொள்ளும் பலவீனமே.

நம்மை சுற்றி இருப்பவர் சிறப்பாக வாழ்கின்றனர் எனக் கருதினால் நாமும் அவர் போல் ஆவதற்கு விரும்புகிறோம். அப்போது அதற்கான வழி முறைகளை தேட ஆரம்பிக்கிறது உள்ளம்.

அதன் முதல்படியாக நம் விருப்பங்களுக்கு ஊக்கம் கிடைக்கும் சூழ்நிலைகளையோ நண்பர்களையோ நாடுகிறது. அவர்கள் செய்யும் பல காரியங்கள் ஏற்புடையாதாகிறது. ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் “ஊரோடு ஒத்து வாழ்” என்பது போன்ற பழமொழிகளின் துணைகொண்டு ஏற்புடையதாக்கிக் கொள்கிறோம். செல்வாக்கு உள்ளவர்கள் ஆதரவைத் தேடி சமூகத்தில் நமது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எல்லாக் காலத்திலும் எல்லாத் துறையிலும் கண்டு வரும் மனித இயல்பு இது.

கபீர்தாஸரும் இத்தகைய சந்தர்பவாதத்தை கேலி செய்கிறார்.

स्वारथ कू स्वारथ मिलै, पडी पडी लंबा बूब ।
निस्प्रेही निराधार को, कोय न रांखै झूंब ॥


தன்னலம் மிக்கார் கூடின், நீண்டு முழங்குதே ஆரவாரம்
தன்னல மில்லாத் தீனருக்கோ, ஏது மில்லை புகழாரம்

(மிக்கார்= மிகுந்தவர்கள் )
மாற்று:
கட்டித் தழுவி கவிபுனைவர் தன்னல நெஞ்சர் சேர்கையிலே
எட்டித் தள்ளி விலகிடுவர் தியாகச் செம்மல் வருகையிலே

சுயநல அடிப்படையில் எழும் நட்பில் எவ்வித ஆழமும் இருப்பதில்லை என்பதை யாவரும் அறிவர். ஏனெனில் ஒருவன் கஷ்ட தசையில் சிக்கிக் கொள்ளும் போது முன்பு கூடி குலாவிய நண்பர்கள் காணாமல் போய் விட்டிருப்பார்கள். இந்த உறவு காரண காரியங்களோடு கூடியது.

குளத்திற்கும் பறவைகளுக்கும் உள்ள உறவு போன்றது.

“வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது;
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது “

என்பது திரைப்படப் பாடல் ஒன்றில் வரும் மிகவும் பொருள் பொதிந்த வரிகள்.

சான்றோர்கள் நிலை முற்றிலும் மாறானது. அவர்கள் கொள்ளும் நட்பு வலுவானது. பிரதிபலன் கருதாதது. பிறர் தம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர் என்பது பற்றிய சிந்தை யில்லாதவர்கள். உலகத்தவரால் கவனிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு சிறுமை ஏதும் வந்துவிடுவதில்லை. அவர்களை அரண்மனைக்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் யானைக்கு ஒப்பிடுகிறார் குமர குருபர சுவாமிகள்.

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய
கந்துகொல் பூட்கை களிறு.

{கந்துகொல் பூட்கை = கட்டுத்தறியை உடைக்கும் வலிமை உடைய ; புறங்கடைய களிறு= வெளியே நிற்கும் யானை (போல) வேத்தவை =வேந்தன் அவை ; மிகல் மக்கள் காவார்= அரசவைதான் பெருமையென்று மேன்மக்கள் காத்திருக்கமாட்டார்: வேறுசிலர் = மேன்மக்கள் அல்லாதவர் ; மாத்தகைய அந்தபுரத்து பூஞை= பெருமைக்குரிய அரண்மனை அந்தபுரத்தை சுற்றிவரும் பூனை (போல்) காத்துக் கொண்டாங்கு உவப்பு எய்தார்= பயன் கருதி காத்திரு்ப்போரும் மகிழ்வு அடைவதில்லை. }

அரண்மனைக்கு வெளியே நிற்பதால் யானைக்கு சிறுமை உண்டாவதில்லை. அரண்மனைக்குள்ளே சுற்றித் திரிவதால் பூனைக்கு யாதொரு பெருமையும் இல்லை. அந்தபுரம் என்று சொல்ல வந்தது ’யாரும் நுழைய முடியாத இடத்திலும்’ புகும் தன்மை உடையது பூனை என்பதை குறிக்க வந்ததாகும்.

கபீரும் குருபரரும் சொல்ல வருவது ஒன்றே. சான்றோரைத் தேடி, போற்றி அவர் அடி ஒட்டி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாத வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை ஆகும். அதனால் எவரும் பயனடைவதில்லை. காலம் வீணே போய்க்கொண்டிருக்கும் என்பதே.

Tuesday, May 12, 2009

இறைவன் வாழும் இல்லம்

விளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு பஞ்ச் வாசகத்தை தேர்ந்தெடுத்தது. பெரியவர்களெல்லாம் ஒன்று கூடி ஆலோசித்து நமது கலாசாரத்தை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் முண்டகோபநிஷத்திலிருந்து ஆய்ந்தெடுத்த வரிதான் ”சத்யமேவ ஜயதே.”

அதை எந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தனரோ மக்களின் போக்கு சத்தியப் பாதையிலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்று பலரும் புலம்பும்படியாக இருக்கிறது. அந்த வாசகம் மக்கள் மனதிலே சத்தியத்திற்கான தாகத்தை உண்டு பண்ணாமல் ’அசத்யமேவ ஜயதே’ என்று கிண்டலுக்கும் உள்ளாகி விட்டது.

நாம் ’ஜயதே’ என்ற சொல்லுக்கு பொருள் கொள்ளும் விதத்தில் உண்மை மாறுபடுகிறது. சத்தியத்தை கடைபிடிப்பவன் காலத்தால் அழியாத புகழ் பெறுகிறான், அவனுடைய வாழ்நாளிலே அவன் சத்தியத்தை கடைபிடிப்பதால் வரும் இன்ப துன்பங்கள் ஒரு பொருட்டல்ல. அவன் இறைவனுக்கு அருகானவன். முக்தி நிலைக்கு தக்கவன். அதுவே உண்மையான வெற்றி.

சுவாமி ராமா தன் குருவுடன் புகைவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியிலே ஒரு நிலையத்தில் அந்நிலைய அதிகாரியாக இருந்த ஒரு சிஷ்யர் குருவைக் கண்டதும் மகிழ்ந்து அவரை வணங்கி ஆசி கோரினார்.சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார். பிரியும் வேளை வந்தது. குருவிடம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கும் படியான உபதேசம் ஒன்றை வேண்டினார்.“இனி எக்காரணம் கொண்டும் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசாதே” என்று உபதேசித்து அருளினார் குரு. பின் புகைவண்டியில் தம் பயணத்தை தொடர்ந்து ஊர் போய் சேர்ந்தனர்.

அன்று இரவு ஓய்வெடுக்கும் பொழுது குரு சத்தம் போட்டு சிரிப்பதைக் கண்ட சுவாமி ராமா அதற்கான காரணத்தை வினவினார்.”அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான். எல்லாம் உபதேசம் கேட்டதால் வந்த வினை” என்று சிரித்தாராம்.

நடந்தது இது தான்.சற்றே சபல புத்தி இருந்த அந்த அதிகாரி பலமுறை நிர்வாகத்தின் பணத்தை சிறு சிறு அளவில் கையாடல் செய்ததுண்டு. அவற்றை சுலபமாக பொய் கணக்குகள் மூலம் சரிகட்டியதும் உண்டு. ஆனால் அன்று உண்மையைத் தவிர வேறு பேசக்கூடாது என்று குருவிற்கு உறுதி அளித்ததானால் அன்று மாலையில் நடந்த தணிக்கையில் உண்மையை ஒத்துக் கொண்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

குரு எங்கோ அமர்ந்து கொண்டு அந்த நிகழ்வை சுவாமி ராமாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் அவர் முக்காலத்தையும் உணர்ந்தவராகவே இருக்க வேண்டும். அவருடைய உபதேசத்தை கடைபிடித்ததால் சிறை வாசமென்றாலும் அதுவும் நல்லதற்கே. அந்த அதிகாரியின் வாழ்க்கையில் அன்று பொன்னாள். குரு அருள் முழுவதுமாக கிட்டி ஆன்மீகப் பாதையில் அவர் முதலடி எடுத்து வைத்து விட்டார். இனி எது வரினும் அவருக்கு குருவருள் துணை நிற்கும்.

(Life with Himalayan Masters, Swami Rama: )

பல மனத் துன்பங்களையும் சத்தியத்திற்காக தாங்கிக்கொள்வதும் ஒரு தவமே. அரிசந்திரன் கதை சொல்வதும் அதுவே.அதை கபீரின் வாயால் கேட்போம்.

सांच बराबर तप नहीं,झूठ बराबर पाप ।
जाके हिरदे सांच है, ताके हिरदे आप

வாய்மையினும் உயர் தவம் இல்லை, பொய்யினும் பெரும் பாவம்
வாய்மை வழி நின்றார் உள்ளம், பரமா என்றும் நீ வாழும் இல்லம்

வாய்மை வழி நின்றார் உள்ளம் இறைவன் இல்லம் ஆகும் என்பதை திருமந்திரப் பாடல் ஒன்றிலும் காணலாம்.

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னை
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித்தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைத்திடும் மெய்யர்க்கே

இறைவன் பொய்கலந்தார் உள்ளத்தில் புகுவதில்லை என்று திருத்தமாக சொல்கிறார்.

[முதன் முறையாக படித்தபோது மெய்கலந்தார் என்பதை வாய்மை நிறைந்த சான்றோராகவும், பொய் கலந்தார் என்பது காரணகாரியங்களுக்காக உண்மையையும் பொய்யையும் கலந்து திரியும் சாதாரண மக்களை குறிப்பிடுவதாகவும் தோன்றியது.

மெய்கலந்தார் என்பதை மெய்யுணர்வு அடைந்தவர்கள் என்றும், பொய்கலந்தார் என்பதை பொய்யான உலகத்தின் மேல் நாட்டமுடைய மக்கள் என்றும் பொருள் விளக்கவுரை தரப்பட்டுள்ளது]

நாம் அன்றாடம் பல வகைகளிலும் பொய்யுரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். வேலையெதுவும் இல்லாமல் வீட்டிலே தான் இருக்கிறோம். கைபேசியில் ஒரு அழைப்பு.

தவிர்க்க முடியாத முக்கிய நபர்.ஆனால் தவிர்க்க விழையும் விஷயம். வெகு நாட்களாக அவர் கேட்டுக்கொண்டி்ருந்த ஒரு காரியம் இன்னும் முடிக்கப் படவில்லை.

”ஹலோ வணக்கம் சார்.நான் இப்போ ட்ரைவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.வீட்டுக்கு போனதும் கூப்பிடட்டுமா?”

உண்மையை சந்திக்க மனதில் திராணி இல்லை.ஒரு பொய்யை தொடர்ந்து ஒன்பது பொய்கள். அது தரும் துயரம் சொல்லி மாளாது.ஒவ்வொரு முறையும் புதிய புதிய காரணங்கள்,சப்பைக் கட்டுகள்,முன்பு சொன்ன பொய்களை மறந்து சிக்கிக்கொள்ளும் அவஸ்தைகள் இத்யாதி. பாரதியார் அதை பாஞ்சாலிக்கு துகிலின் நீளம் கண்ணன் அருளால் வளர்ந்ததற்கு ஒப்பிடுவார்.

ஐய, நின்பதமலரே -சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி- என்றாள்;

பொய்யர் தம் துயரினை போல்- நல்ல
புண்ணிய வாணர் தம் புகழ் போல்
......
......
....
வண்ணப் பொற் சேலைகளாம்-அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே

மிக சுலபமாக வளர்வது பொய்தான்; புகழ் வளர்ச்சி சற்று நிதானமே. அதனால்தான் பொய்யருக்கு முதல் இடம் கொடுத்தாரோ.

மனிதனை சார்ந்து சத்தியமில்லை,சத்தியத்தை சார்ந்து மனிதன் இருக்கிறான்.அதை புறக்கணிக்குமளவும் அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான்.சத்தியத்தை கடைப் பிடிக்குமளவும் அழியாத தன்மைக்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்கிறான் என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

பொய்யை விட பெரும் பாவம் இல்லை என்றும் சொல்கிறார் கபீர். ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை சற்றே திரித்ததற்காக தர்மபுத்திரனும் சில நாழிகைகள் நரகத்தின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பர்.

அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்ற வீமன் அஸ்வத்தாமனை கொன்று விட்டேன் என்று துரோணருக்கு கேட்கும்படியாக கர்ஜிக்கிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் அது உண்மையா என்று,வாழ்நாளில் பொய்யே உரைக்காத,தர்மனிடம் கேட்கிறார்.

பொய் சொல்லி அறியாத தர்மனோ திக்கித் திணறி ”ஆம்.உண்மைதான். அஸ்வத்தாமன் என்கிற யானை” என்று உரைக்கிறார்.அதில் இரண்டாம் பகுதியை சொல்லும் போதே கபடக் கண்ணன் தன் சங்கை ஊதி இறந்தது யானை என்கிற உண்மையை அறியாதவாறு செய்து விடுகிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் போரை விட்டு விலகி அமர்கிறார்.

பாண்டவர்கள் வென்றார்கள்.

பலகால ஆட்சிக்குப் பின் மனித உடலோடு சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தர்மபுத்திரர். அங்கே கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. துரியோதனனும் அவனுக்கு துணை போனவர்கள் சொர்கத்தில் இன்பமாக அமர்திருக்க தனக்கு பிரியமான பாண்டவர்களோ திரௌபதியோ எங்கும் காணப் படவில்லை. அவர்களிருக்கும் இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டிக் கொள்கிறார் தர்மர். அதன் காரணமாய் பிணக் குவியல்களுக்கிடையே துர்கந்தம் வீசும் இருட்டுப் பாதையிலே அழைத்துச் செல்லப்படுகிறார். அவற்றை சகிக்க முடியாமல் “இன்னும் எவ்வளவு தூரம் ?”என்று உடன் வந்தவனை கேட்கிறார். ”வேண்டுமானால் திரும்பி விடலாம்” என்கிறான் தூதன்.

தயக்கத்துடன் திரும்ப எத்தனித்த தர்மருக்கு “வேண்டாம், வேண்டாம் இப்போது தான் எங்களுக்கு சற்று ஒளி தெரிகிறது.குளிர்ந்த காற்று வீசுகிறது” என்று பல குரல்களில் வேண்டுகோள் கேட்கிறது. என்ன இது எல்லாம் பழக்கப்பட்ட அருச்சுனன், வீமன் நகுலன் பாஞ்சாலி அவர்களின் குரல் போலல்லவா இருக்கிறது ! அவர்கள் என்னுடன் தர்மத்தின்பால் நின்றதற்காக இது தான் பரிசு என்றால் நானும் இங்கேயே இருந்து விடுவேன். எனக்கு சுவர்க்கம் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

சிறிது நேரம் கழிந்தது. தர்மரின் உறுதி மாறாததைக் கண்ட இந்திரனும் எமதர்மனும் அவன் முன்னே தோன்றினர். நரகம் மறைந்து சுவர்கம் தோன்றியது. தர்மரின் பூதவுடல் நீங்கி தேவ உடல் வந்தது. தர்மருக்கு வைக்கப்பட்ட ஒரு சோதனைதான் அது என்று அவரை தேற்றினர்.

சூட்சுமம் அறிந்த பெரியவர்கள் அந்த சோதனைக்கான காரணத்தை சொல்லும் போது போரில் உண்மையை மறைக்க துணை போனதுதான் சில நாழிகைகள் பொய்யான காட்சியில் மனத்துன்பத்தை அனுபவிக்கும்படி செய்தது என்கின்றர்.

வாய்மையை காப்பாற்றுவதும் ஒரு தவமே. அந்த தவத்தில் மன அழுக்குகள் நீக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாறும் பொழுது இறைவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் மனிதன்.

சுடச் சுடரும் பொன்போல ஒளிவிடும்,துன்பம்
சுடச்சுட நோக்கிற்பவர்க்கு (267)

அதற்காக வாய்மையை கடைபிடிப்பவர்கள் யாவரும் துன்பத்திலே உழன்று கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணம் கொள்ளத் தேவையில்லை. கஷ்ட காலத்திலும் சத்தியத்தை கைவிடாததால் அவர்கள் மேன்மை பொன்போல் ஒளிருகிறது.

அப்பேர்பட்டவர்களின் உள்ளம் எப்போதும் இறைவன் குடிகொண்டிருக்கும் இதயமாக திகழ்கிறது.