Friday, April 24, 2009

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மனம் பல காரணங்களால், கவனக்குறைவால் வறண்டு போய் விடுகிறது.அப்பொழுது உலக வாழ்க்கையே துன்பமாக தெரிகிறது.
அதற்கான மருந்தை தேடி பல இடங்களிலும் அலைகிறோம். அந்த நோய்க்கான காரணத்தை வள்ளுவர் சொல்கிறார்

புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பிலவர்க்கு

மனதிலே அன்பு குறையும் போது வாழ்க்கை வறண்டு போகிறது.

எங்கள் வீட்டு புழக்கடையில் ஒரு அடி-குழாய் இருந்தது.எப்பொழுதாவது பத்து பதினைந்து நாட்களுக்கு ஊருக்கு போய்வந்த பின் அடித்தால் அது நீர் இறைக்காது. உடனே சேமித்து வைத்திருக்கும் ஒரு வாளி தண்ணீரை அதில் ஊற்றி பின்னர் அடிக்கத் துவங்கினால் அது சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மேலே கொண்டுவரும.

அதற்கு சொல்லப்படும் காரணம் “வாஷர் காய்ஞ்சு போச்சு”

[குழாயினுள் இருக்கும் தோல் வாஷர் காய்ந்த்து போனால் அளவில் சுருங்கி மேலும் கீழும் அடிக்கும் பொழுது காற்றை உள்வாங்கி வெளிவிடும். அதனால் அடியில் இருக்கும் நீர் மேலே எழும்புவதில்லை. அதுவே நீர் ஊறிய பின் குழாயின் உள்பக்கத்தில் விரிந்து அடைத்துக்கொள்ளும்போது காற்று வெளியேறுவதால் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப நீர் மேலெழுந்து வரும்].

அகத்து உறுப்பான அன்பு, எல்லா உயிர்களுக்குள்ளும் நிலத்தடி நீர் போல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் சுயநலம், பொய்மை,கோபம் போன்ற குணங்கள் கடும் பாறை போல் மேலே அதை மூடிக்கொள்கிறது.

எப்படி நீரை மேலே கொண்டு வருவதற்க்கு நீரையே மருந்தாக பயன் படுத்த வேண்டியிருக்கிறதோ அது போல மனிதர்களின் வறண்ட மனதினுள் ஒரு வாளி அன்பை ஊற்றினால் அதுவும் விரிந்து தன்னுள்ளே இருக்கும் அன்பெனும் அமுதை வெளியே கொண்டு வரக்கூடியதுதான்.

ஒரு வாளி அன்பா ? இல்லையில்லை ஒரு துளி போதும். கபீர் சொல்வதை காண்போம்.

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்னொளி பாய்ந்தது.

(அவிழ்தம் =மருந்து; தனு=உடல்)

மருந்து என்று சொல்லப்பட வேண்டுமானால் உட்கொள்ளும் அளவில் மிகக் குறைவாக இருப்பினும் வீரியத்தில் பல மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். உணவு தரும் சக்தி, உட்கொள்ளும் அளவை பொறுத்தது ஆனால் மருந்து உடலின் ஆற்றலையே மாற்றி அமைக்க வல்லது.
அன்பின் சக்தி மருந்தை போன்றது. ஒருவருடைய மன ஆற்றலையே மாற்றி அமைக்க வல்லது. ரன்சக் என்றால் அளவில் மிகக்குறைவானது. ஆனால் அதன் செயல் பரிமாணம் பலரும் போற்றும் படியாக மாறுகிறது.

முதல் படியாக இறைவனிடத்து அன்பு. அடிக்கடி ராமகிருஷ்ணர் காளியின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பாவசமாதிக்கு சென்று விடுவாராம்.

அந்த மேன்மையை திருமூலர் இப்படி ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

ஓதும் மயிர்க்கால் தொறும் அமுதூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்த
மாதி சொரூபங்கள் மூன்று (அ)கன்றப்பாலை
வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே - திருமந்திரம்

காற்றில் காண இயலாதவாறு கலந்திருக்கும் நீர் மேகமாக திரண்டு மழை போல் பொழிவது போல் திருமூலர் உரைக்கும் ’மயிர்க்கால் தொறும் ஊறும் அன்பு’அளவில்லாமல் பெருகும் போது பிற உயிர்களிடம் பெருகி பாய்கிறது. அப்போது நல்லவன் தீயவன் பேதம் இல்லை. மழை யாவர்க்குமாம் என்பது போல் மேன்மக்கள் அன்பும் யாவர்க்குமாய் பயனளிக்கிறது.

சிவனையே நினைந்து அவனடியாரை கண்ட மாத்திரத்திலேயே அன்புப் பெருக்கெடுத்து அவர்களைப் போற்றி பணியும் மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் வேடத்தில் வந்த முத்தனாதன் வஞ்சகமாகக் குத்திய போதும்,அவனுக்கு ஊறு உண்டாகக்கூடாதென்று ஆணையிட்டான். அந்த கயவனை பத்திரமாக எல்லைக்கப்பால் கொண்டு விட்டாயிற்று என்பதை தெரிந்து கொள்ளும் வரை உயிரை பிடித்திருந்து பின்னர் பெருத்த அமைதியுடன் உயிரைத் துறந்த மெய்ப்பொருளார் மேனமை அனபு நிறைந்திருந்தால் மட்டுமே சாத்தியம். உலகம் உள்ளளவும் அவர் பெருமை போற்றப்படுகிறது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

Monday, April 06, 2009

ராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்

கோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவார்கள்.

சாப்பிடுபவர்களும் தத்தம் மனநிலைக்கு ஏற்றபடி சிலவற்றை ருசித்தும் சிலவற்றை ஒதுக்கியும் வயிறை நிரப்பிக் கொள்கிறார்கள்.

ஒருவன் பிரட் தயாரிப்பதில் மன்னன். சிறப்பான பிரட் தயாரித்து வைத்திருக்கிறான். ஆனால் பிரட் பிடிக்காத அன்பர்கள் அதை விட்டு சப்பாத்தியே பரவாயில்லை என்கிறார்கள். ”கை கொடுத்த தெய்வம்” படத்தில் சிவாஜி போல் சப்பாத்தியை கண்டு முகம் சுழிப்பவர்கள் அதே கோதுமை மாவை நீரில் கரைத்து தோசையாக வார்த்துத் தின்னத் தயாராகிறார்கள். இன்னும் சிலர் கோதுமையை உப்புமாவாக்கி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்!

எப்படியோ கோதுமை உடலுக்கு ஊட்டம் தருவது. எந்த வடிவில் உள்ளே போனால் என்ன? நல்லது தானே செய்யும்.

இந்த முறை உங்களுக்கெல்லாம் கபீரின் கனிமொழியை இசை விருந்தாக படைக்கலாம் என்று ஒரு எண்ணம்.

கபீரின் பாடல் ஒன்று இங்கே பல கலைஞர்களின் கையில் சிக்கிக் கொண்டு பலவிதமான ருசிகளை கொடுக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த (அல்லது தெரிந்த) பாணியில் வடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நான் வெறும் மெனு கார்டை நீட்டும் சாதாரண ஊழியன். எல்லாவற்றையும் ருசித்து எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது கங்கை கரை கோதுமையில் வளர்ந்த ஆன்மீகம். எந்த வகையில் ருசித்தாலும் ஆன்ம பலம் கூடும் !!

முதலில் பாடல் :

भजो रे भैया (मन) राम गोविंद हरी ।
राम गोविंद हरी भजो रे भैया राम गोविंद हरी ॥
जप तप साधन कछु नहिं लागत, खरचत नहिं गठरी ॥
संतत संपत सुख के कारन, जासे भूल परी ॥
कहत कबीर राम नहीं जा मुख, ता मुख धूल भरी ॥


இந்தி அறியாத அன்பர்களுக்காக ஆங்கில வடிவில்,தமிழில் பொருளுடன் :)

bahajo re bhaiya raam govind hari
துதித்திடு அன்பனே, ராமா, கோவிந்தா, ஹரி (என்றே துதித்திடு)

jap thap saadhan nahi kuch laagath, kharachath nahIm gatarI |
ஜபம் தவம் சாதனை வேண்டாம், செலவும் இதற்கு கிடையாது

santhath sampath sukh ke kaaran, jaase bhool parI |
சந்ததியென்றும் சம்பத்து என்றும் சுகத்தின் காரணமான அவனையே மறந்தனையே

kahath kabeer raam nahIm jaa mukh, thaa mukh dhool baharI ||
சொல்வனே கபீரும் இராமனை செபிக்காத உதடுகள் தூசி படிந்த உதடுகளாகும்
_______________________________________________________



புருஷோத்தம் தாஸ் ஜலோடா.

______________________________________
முகமது ரஃபி பாடியது :



இவர் பாடலில் ”பையா” என்பது ”மன்” என்று மாற்றப்பட்டுள்ளது. அது போலவே நடுவில் ஒரு வரி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது
______________________________________________

ஜகஜித் சிங்
________________________________________________________
ராகுல் வெள்ளால்

>

இந்த மகத்தான கலைஞர்களுக்கு வந்தனம். ரஃபி, எம்.எஸ் மற்றும் பெயர் தெரியாத கலைஞர்கள் பாடியவற்றை வலையேற்றம் செய்து வைத்திருக்கும் அன்பர்களுக்கும் மனதார நன்றி

இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் 13/05/2018 அன்று புதிப்பிக்கப்பட்டுள்ளது. சில பழைய இணப்புகள் செயலற்று போன காரணத்தால் இது தேவை பட்டது