Wednesday, January 21, 2009

கல்லா மூடர் கருத்தறியார்

புனித தேவனின் திருமொழிகள் புத்தகத்தின் மேல் கையிட்டு சத்தியம் செய்து நான் சொல்கிறேன் - என் தவறை உணர்ந்ததாக உறுதி கூறுகிறேன். என் தவறு அர்த்தமற்ற என் குறிக்கோளினாலும் கர்வத்தாலும் ஏற்பட்டது. பூமியானது சூரியனை சுற்றி வரவில்லை என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்”

மனம் தளர்ந்து, வழக்கு விசாரணையிலிருந்து வெளியேறுகையில் கலீலியோ அருகில் இருப்பவரிடம் கூறியதாக சொல்லப்படுவது Eppur si muove (இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது).


கிபி 1633 ஜூன் 10 ஆம் தேதி இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பிறகு அவருக்கு ஆயுள் முழுவதும் வீட்டுக் காவலில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. எந்த கட்டுரைகளையும் பிரசுரிக்கவோ, பொதுக் கூட்டங்களிலோ கருத்தரங்குகளில் பங்கு கொள்ளவோ அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

அவர் செய்த தவறு கோப்பர்நிகஸ் என்ற விஞ்ஞானியின் கருத்தை ஏற்று பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற பெரும் உண்மைக்காக வாதாடியதுதான். அது அன்றிருந்த மதக் கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்தமையால் அதிகாரம் படைத்திருந்த மதகுருமார்கள் தம் விருப்பம் போல் அவரை தண்டிக்க முடிந்தது.

கலீலியோ உரிமைகளுக்காக போராடும் போராளியல்ல. தன் உயிர் கொடுத்து உண்மையை நிலை நாட்டவேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

உண்மை என்றும் தன் காலிலே தான் நிற்க வல்லது. எனவே மூடர்களுடன் விவாதம் செய்து தன் நாட்களை வீணாக்க விரும்பால் அவர்களின் போக்கிலே சென்று அவர்கள் விரும்பியபடி உறுதி மொழி அளித்து விட்டார்.

அது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டிருந்தாலும் மேற்கொண்டு தொலை நோக்குக் கருவி வடிவமைத்தல், கோள்களின் விண்வழி பாதைகள் பற்றி பல ஆராய்சிகளை எஞ்சிய நாட்களில் செய்து அவற்றை எழுதி வைக்கவும் செய்தார். அவர் மறைந்தது 1642 ஜனவரி 8 ஆம் தேதி

என்னே காலத்தின் கட்டாயம் !

அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகரணங்களின் மூலம் நிலைநாட்ட இயலுகிறது. ஆனால் ஆன்மீகம் கூறும் உண்மைகளை உணர தத்தம் அனுபவங்களாலேயே தான் முடியும். அந்த அனுபவங்கள் வாய்க்கும் வரை ஆசானின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து சாதனையை தொடரவேண்டும்.

அடிப்படைக் கோட்பாடுகள் எல்லாத் துறையிலும் உண்டு. அவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்துறையில் மேற்கொண்டு அறிவை வளர்த்துக் கொண்டு முன்னேற முடியும்.

திரிகோணவிதி கணித முறையை பலரும் அறிவோம். அதன் அறிமுக வகுப்பில் செங்கோண முக்கோணத்தில் sin x, cos x, tan x என்பனவெல்லாம் என்னவென்று விளக்க ஆரம்பிக்கிறார் பாட ஆசிரியர். ஒரு அதிகப் பிரசங்கியான மாணவன் எழுந்து செங்கோணமுக்கோணத்திற்கு மட்டும் ஏன்? பிற வகை முக்கோணக்களுக்கு ஏன் அப்படிப்பட்ட வரைமுறைகளை செய்யக் கூடாது என்று கேட்கிறான். பாவம் ஏனோ ஆசிரியர்க்கு உடனடியாக ஒரு சமாதானமான பதில் தரமுடியவில்லை. அது அப்படித்தான் என்று கூறி உட்காரச் சொல்கிறார். அந்த மாணவனோ விடுவதாயில்லை. அவன் தொடர்ந்து வாதாட ஆரம்பித்ததால் யாவருடைய நேரத்தையும் வீணாக்கினான்.

அங்கே குதர்க்க புத்தியை விட்டு பாடம் கேட்டால் பின்னர் வரும் வகுப்புகளில் பிற வகை முக்கோணங்களையும் முதலில் படித்த பாடத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும் என்ற உண்மை புரிந்திருக்கும்.

அது போலவே ஆன்மீகத்திலும் பலர் எவ்வித முயற்சியும் இல்லாமலே தம் சிற்றறிவைக் கொண்டு சான்றோர்களையும் ஞானிகளையும் ”புத்திசாலித்தனமான” கேள்விகள் கேட்க முற்படுகின்றனர். அத்தகையவர் தொடர்பு சற்றும் பயனில்லை என்கிறார் திருமூலர்.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கவும் கடன் அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறியாரே


கல்லாத மூடர் என்று குறிப்பிடுவது உண்மையை ஏற்க விருப்பமில்லாதவர்களை பற்றியதாகும்.

அதை கடைசி வரியில் தீர்மானமாக கல்லாத மூடர் (எனப்படுபவர்), கருத்தறியாரே என்று சொல்வதன் மூலம் அறியலாம். அவர்கள் எழுத்தறிவுள்ளவர்கள் படித்தவர்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் தர்க்கம் செய்பவர்கள்.

எனவே தான் கல்லாதார் (எழுத்தறிவு இல்லாதவ்ர்) நல்லராம் என்று படித்தவர்களைக் காட்டிலும் படிப்பறில்லாதவர்களை நல்லவர்கள் என்று போற்றுகிறார். அவர்கள் பிறரை தவறான வழியில் இட்டுச் செல்ல முடியாதல்லவா !

கபீர்தாஸரும் மூடரைப் பற்றி கூறுகிறார். அவர்களுடைய இலட்சணங்கள் என்னென்ன ?

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥


கேளார் மூடர், மேலோர் உரை; தன்ம விசாரம் செய்யார்
தேடார், மெய்பொருள் அருமை; தன்மன் வாயில் சேர்வார்


(தன்மம்=தர்மம்; தன்ம விசாரம்= தர்ம அதர்மங்களை ஆராய்து அறிவது; தன்மன் =யமன்)

’தர்ம தேவதை என்றே யமன் குறிக்கப்படுகிறான். அதனால் தான் எமதர்மன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒவ்வொருவருடைய தர்ம அதர்ம கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளையும், அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்களையும் முடிவு செய்வதால் அவனுக்கு அந்த பெயர்.

ஒவ்வொருவருக்கும் அவரது கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளும் வாழ்க்கை முறையும் அமைகிறது.

இது நமதுஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடு. இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிறவித்தளை அறுத்தலைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்கவோ உண்மை அறிந்த ஞானிகளின் கூற்றுகளை புரிந்து கொள்ளவோ முடியும்.

அவற்றை ஏற்க மறுத்து குதர்க்கம் பேசும் மக்களை ”...காணவும் ஆகாது”, “... கேட்கக் கடன் அன்று” என்றார் திருமூலர். ஏனெனில் அவர்கள் மீண்டும் மீண்டும் யமனுடைய பிடியிலே சிக்கித் தவிப்பவர்கள். அவர்களுக்கு விடுதலை வேட்கை யில்லை. அவர்களால் நம்முடைய மனது குழப்பம் அடையுமே தவிர தெளிவு ஏற்படாது.

அவர்கள் ஏன் அப்படி் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை சொல்கிறது நீதிவெண்பா.

கன்மமே பூரித்த காயத்தோர் தம் செவியில்
தன்ம நூல் புக்காலும் தங்காதே - சன்மம் எலும்
புண்டு ச்மிக்கும் நாய், ஊண் ஆவின் நெய் அதனை
உண்டு சமிக்குமோ ஓது.


கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த உடம்பை உடையவர் காதில்;
தன்ம நூல் புக்காலும் தங்காதே = புண்ணிய நூற் பொருள் நுழைந்தாலும் தங்காது
சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்
ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ
ஓது = சொல்


ஒரு வகையில் மூடர்களின் போக்கை பிறவி குணம் என்றே சொல்கிறது நீதிவெண்பா. குறிப்பிட்ட நபர்களின் கர்ம வினைகளை ஒட்டியே அவர்களுக்கு ஆன்மீக நாட்டமும் ஞானம் கைகூடுவதும் கூட நடக்க வாய்ப்புண்டு.

இதனால் மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் போக்கு அறிந்து முரண்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம் வழியே நாம் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். நெரிசலான போக்குவரத்து சாலையில் வண்டியோட்டுவது போல. ஏனெனில் சாதகன் போக வேண்டிய பாதை வெகுதூரம்.

பின் குறிப்பு:

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥

மூரக் ஷப்த் ந மானய், தர்ம் ந ஸுநை விசார் |
ஸத்ய ஷப்த் நஹீ கோஜைய், ஜாவை ஜம் கே த்வார் ||

ஷப்த் என்ற வார்த்தைக்கு மேலோர் உரை என்ற வகையில் மேலே பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. பல இடங்களில் ஷப்த் என்ற சொல்லை நாம செபத்திற்கான ‘மந்திரம்’ என்ற வகையிலும் கபீர் கையாண்டு இருக்கிறார். அவ்வகையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமாயின்

மூடர்கள் மந்திரம் ஒப்பார், கேளார் தன்மம், விசாரம்
தேடார் சத்தியப் பொருளும், போவார் மறலி வாயிலே


(விசாரம் =சத்விசாரம், நற்சிந்தனைகள் ;
மறலி= யமன்)

தர்ம் ந ஸுநை என்றும் ந ஸுநை விசார் என்றும் ”ந ஸுநை” (கேளார்) இடையில் நின்று இருபக்கமும் பொருள் தரும்.

Monday, January 05, 2009

வேருக்கு நெக்கு விடும் பாறை

ஐக்கிய நாட்டுச் சபை பொதுக்குழுவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றவர் திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட். பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவர். இவர் நேருவின் உடன் பிறந்த சகோதரியும் ஆவார். மகாத்மா காந்தியின் ஒரு அறிவுரை பல சந்தர்பங்களில் தன்னை எப்படி நிலைக்கு கொண்டு வந்தது என்பதை ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார். முதற் பகுதி மட்டும் இங்கே.



என் வாழ்க்கையின் மிகச் சிறந்த அறிவுரையை சுமார் பத்து வருடங்களுக்கு முன் (~1945) கொடுத்தவர் உலகத்தில் மிக உத்தமர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மஹாத்மா காந்தி அவர்கள்.

பெரும்பாலோர்க்கு மனத்துன்பம் அனுபவிக்கும் காலங்களில் மனித வர்க்கத்தின் மீது நம்பிக்கை மிகக்குறைவாக இருக்கும். அது போல என்னுடைய சோதனைக் காலம் அது. கணவனை இழந்து இரண்டு பெண்களுடன் அனாதரவாய் நின்றேன். இந்திய சட்டத்தின் கண்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தவர்கள்தான். அவர்களுக்கென்று எந்த தனி உரிமையோ நிலையோ சமுதாயத்திலோ சட்டத்திலோ இல்லை.

இதனால் நான் சந்தித்த போராட்டங்களும் அவமானங்களும்தான் எத்தனை! விடுதலைப் போரில் ஆண்களுக்கு சமமாக ப்ங்கேற்று குடும்பத்தைத் துறந்து சிறைவாசங்களை அனுபவித்து நாங்கள் போராடுகையில் அனைவரும் சமம். ஆனால் கணவர் மறைந்ததனால், மகனில்லாத விதவைக்கு குடும்பச் சொத்தில் எவ்வித பாத்யதையும் கிடையாது. கணவன் வீட்டார்கள் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் உறவின் விரிசல் வளர்ந்து கொண்டே போனது. நெஞ்சில் கசப்பு நிறைந்திருந்தது.

இந்நிலையில் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்காவிற்கு செல்ல ஆயத்தமானேன். அதற்கு முன் விடைபெறும் வகையில் மஹாத்மாவை சந்தித்தேன். பலவிஷயங்களை பேசிய பிறகு ஒரு கேள்வி எழுப்பினார் “உன் உறவினர்களுடன் சமாதான்ம் செய்து கொண்டாயா ?”

இது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. அவர் அவர்களின் பக்கம் பரிந்து பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.”நான் யாருடனும் சண்டையிட்டதில்லை.ஆனால் தங்களது தனிப்பட்ட வசதிக்காக பழமையான சட்டத்தின் உதவியைத் தேடும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள எனக்கு விருப்பவில்லை “என்று பதிலளித்தேன்.

சில கணங்கள் சன்னலுக்கு வெளியே பார்த்திருந்தார்.பின்னர் என் பக்கம் திரும்பி ஒரு புன்னகையுடன் “நீ கண்டிப்பாக அவர்களை சந்தித்து விடைப் பெற்றுக்கொள். பண்பாடும் இங்கிதமும் இதை எதிர்பார்க்கிறது. இன்னமும் இந்திய பண்பாட்டில் இவை முக்கியமானவை.”

“அது முடியாது. தங்களை திருப்தி செய்வதற்காகக் கூட எனக்கு இன்னல் விளைவிப்பவர்களை என்னால் சந்திக்க இயலாது

உன்னைத் தவிர உனக்கு இன்னல் விளைவிக்க வேறொருவரால் முடியாது” என்றார் புன்னகை மாறாமல். "உன் இதயத்தில் இருக்கும் காழ்ப்பு உணர்ச்சிகளை விரைவிலேயே நீ தடுக்காவிட்டால் மேலும் கெடுதலை விளைவித்துக் கொள்வாய்.”

நான் மௌனமாயிருந்தேன். அவர் மேலும் தொடர்ந்தார்.

“சந்தோஷமற்ற இச்சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள நீ வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறாய். ஆனால் யோசித்துப்பார். உன்னிடமிருந்து நீயே தப்பித்துக்கொள்ள முடியுமா ? உன் உள்ளம் கசப்பான எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது வெளியிலிருந்து மகிழ்ச்சி கிடைக்குமா? சிறிது தாழ்மையுடன் நடந்து கொள். உன் அன்பிற்குரியவரை நீ இழந்துவிட்டாய். அதுவே பெரும் துக்கம். உன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லாததால் அதையும் மீறிய துன்பத்தை உனக்கு நீயே இழைத்துக் கொள்ளலாமா?”

காந்திஜீயின் வார்த்தைகள் மனதை விட்டு அகல மறுத்தன.

சில தினங்களின் மனப் போராட்டத்திற்குப் பின் என் கணவரின் சகோதரரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணத்திற்கு முன்பாக அவர்களை சந்திக்க விழைவதாகக் கூறினேன். அங்கே சென்று ஐந்து நிமிடங்களுக்குள்ளாக என் வருகையால் அனைவரின் மன இறுக்கமும் விலகியதைக் கண்டேன்.என் எதிர்காலத் திட்டங்களை கூறி அவர்களிடம் ஆசி வேண்டினேன். அது என்னுள் ஒரு அற்புதத்தை விளைவித்தது. ஒரு பெரும் மனப்பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு உண்டானது. பிற்காலத்தில் என்னுள் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்கு அந்த சிறு நிகழ்ச்சி வித்திட்டது.


(Smt Vijayalakshmi Pundit's article republished in Readers'Digest November 2006; original was in 1955 when she was High Commissioner for India )

சான்றோர்கள் சாதாரணமாகச் சொல்லும் சிறிய அறிவுரைகளும் பல அரிய மாற்றங்களை நம் மனதில் ஏற்படுத்த வல்லது என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் அறிகிறோம்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


அறம் அறிந்த சான்றோர்களின் இனிய சொற்கள் வஞ்சகம் இல்லாமலும்,மனதிற்கு குளிர்ச்சி உடையதாகவும் இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். இரண்டு காரணங்களை சொல்கிறார். முதலாவது மனதை குளிர்விப்பது. இரண்டாவது அவர்கள் சொல்லில் உள்ள நேர்மை.

மனித மனங்கள் வறண்டு போகாமல் நல்வழிக்கு திருப்பப்படும் அதிசயத்தை ஏற்படுத்துவதால் தான் சாதுக்களின் பேச்சை அமுத மழை என்று சொல்கிறார் கபீர்.

कुटिल वचन सब्से बुरा, जासे होत न छार ।
साधु वचन जल रूप है, बरसे अमृत धार ॥


கடுஞ்சொல் யாவினும் கொடிது, அதனால் அச்சொல் விடுவாய்
சிட்டர் வார்த்தை நீர்போலே, தாரையும் விழுமே இன்னமுதாய்

(சிட்டர் = சிரேஷ்டர், ஞானி, மேலோர்; தாரை= தொடர்ச்சியாய் வருவது, உதாரணம்- எண்ணெய் ஒழுக்கு)

மாற்று :

வன்சொல் தருமே தாபம், வேண்டாம் என்றும் வெவ்வுரை
இன்சொல் ஆகுமே சீதளம், சாது சொல்வதும் அமுதவுரை


(தாபம் = வெம்மை; வெவ்வுரை=கடுஞ்சொல்; சீதளம்=குளிர்ந்தது)

நம் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் உள்ளத்தில் வெறுப்பின் சுவடுகளை சுமக்காமல் வாழ்க்கையை நடத்துவது மிக அவசியம். ஒருவர் எந்தத் துறையை சேர்ந்தவராய் இருப்பினும் மகாத்மாவின் அந்த எளிய அறிவுரை பொருந்தும்.

“No one can harm you but yourself" :

அவர் திருமதி பண்டிட்டிடம் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லை என்று ஏன் கூறினார்? ஏனெனில் பணிவு மனப்பான்மையை ஏற்கவொட்டாது மனதை நான் என்னும் அகங்காரம் ஆட்டுகிறது. அது மனிதர் மேல் தனக்கிருக்கும் பிடியை விட மறுக்கிறது. வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சில கட்டாயங்களை ஏற்க முடியாமல் சங்கடப்படுத்துகிறது.

Prayer for Serenity என்று ஒன்று உண்டு. அதன் வாசகங்கள் இப்படி வரும்.

God! give me courage
-to change things that I can;
-accept those I cannot and
-the wisdom to know the difference
.

இந்த பிரார்த்தனையின் நோக்கமே மனதில் பணிவு வர வேண்டும் என்பதே. பணிவற்ற மனதில் விவேகம் குடிகொள்ள முடியாது.

பணிவான மனப்பான்மையே நல்லவழி என்ற நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையின் நிஜங்களை எதிர்கொள்ளும் தைரியம் வரும்.திருமதி பண்டிட்டுக்கு அந்த தைரியத்தை கொடுத்தது காந்திஜியின் கனிவான அறிவுரை.

அதே அறிவுரையை வேறு யாராவது சொல்லியிருந்தால் திருமதி பண்டிட் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.

மஹாத்மா சொன்னதோ மிக மிக மென்மையான வார்த்தைகள்தான்.

மென்மை என்ற காரணத்தினால் வலிமையில்லை என்று குறைத்து எடை போட முடியாது. யானையைக் கொல்லும் வல்லமை உடைய ஈட்டி பஞ்சு பொதியை ஊடுருவ முடியாது. கடப்பாரையால் பிளக்க முடியாத பாறையை பசுமரத்தின் வேர் பிளந்து விடும் என்கிறது ஔவையின் நல்வழி பாடல்.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.


“No one can harm you but yourself"

கீதையிலும் (6:5)அதே கருத்துதான் சொல்லப்படுகிறது.

आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ஆத்மாவுக்கு ஆத்மாவே பந்து, ஆத்மாவுக்கு ஆத்மாவே எதிரி
. பகைவர் எவரும் வெளியில் இல்லை. நமக்கு நாமே பகை.ஆகையால் வரும் இன்னல்கள் வெளியிலிருந்து வருவது முடியாது.

இப்படி படி்த்தும் ஆராய்ந்தும் கூட மனதில் வேர் விடாத கருத்து எப்படி ஒரு சாதாரண உரையாடல் மூலம் மனதிற்குள் நிரந்தரமாகப் புகுந்து கொள்கிறது ?

செபமந்திரம் சித்தியானவரின் மூலம் உபதேசம் பெறும் போதுதான் சீடருக்கும் மந்திரம் சித்திக்கும் என்று கூறப்படுவதுண்டு. (சீடருக்கு அதில் சிரத்தையும் இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம் !:))

அது போல் கனிவாகப் பேசுவதையே வாழ்வின் சாரமாக்கிக் கொண்டவர் வாய்வழியாக அறிவுரைகள் வரும் பொழுது அதனோடு அவர்களின் ஆன்ம சக்தியும் சேர்ந்து வருகிறது. அது விதையில் அடங்கிய ஜீவசக்தி போன்றது. புலன்களுக்கு புரியாது. அது ஆன்மாவைத் தொடுவது. அதனால் தான்அது துயர் தீர்க்கும் மருந்தாகிறது.

இனியவைக் கூறல் என்பதை ஒரு பெரும் தர்மம் என்றே திருக்குறளும் திருமந்திரமும் சொல்கின்றன.

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்
இன்சொலினதே அறம்

திருமந்திரம்:

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே


சாதுக்கள் விதைக்கும் நல்லெண்ணங்கள், கபீர் சொல்லும் அமுத மழையான இன்சொற்களோடு வரும் போது எந்த வறட்டு மனமும் ஈரமாகி தன்னுள் அந்த விதையை ஏற்று கொள்கிறது.

அவ்விதையிலிருந்து தாழ்மையெனும் வேர் விடுகிறது. அதன் மூலம் மண்ணில்(உலகில்) சுற்றிக் கிடக்கும் ’குப்பைச் சத்தை’களையே எருவாக ஏற்று அதிலிருந்து பயனுள்ள சத்தை(அனுபவத்தை)உறிஞ்சி ஆரோக்கியமான தாவரமாய் வளர்கிறது. வேர் வெறும் சத்தை உறிஞ்சிட மட்டுமல்ல. தாவரத்தின் பலமே அது தான். மண்ணோடு பிடித்து நிலை நிறுத்துவது.

காலப்போக்கில் அது மலர்கள் தரும் செடியாகவோ,பசி தீர்க்கும் பயிராகவோ ஏன் கனிகளும் நிழலும் தரும் மரமாகவோ வளர்ந்து பரிணமிக்கிறது.

அப்படி இறைவன் அளித்துள்ள திறமைகளை மீண்டும் உலகின் நன்மைக்காக வழங்கும் போது மனிதப்பிறவியும் பயனுள்ளதாகிறது.

மனதில் தாழ்மையிருந்தால் வாக்கில் இன்சொல் தானே வந்திடும்.