Wednesday, September 24, 2008

பழையதை தின்று சும்மா கிட

திருமணம் ஆகி குழந்தை பிறந்திருப்பினும் இல்வாழ்க்கையில் விருப்பமின்றி துறவி போல வாழ்க்கையை நடத்தியவர் ஆனந்தம்மாள். ரமணபகவானின் திருவடிகளிலே தவம் செய்து காலம் கழித்தார். ஒருநாள் கனகம்மாள்- இன்னொரு பக்தை-அவரைக் கண்டுவரச் சென்றார். கண் மூடி தியானத்திலிருந்த ஆனந்தம்மாள் சத்தம் கேட்டு திரும்பினார். கனகம்மாளைக் கண்டதும் தன்னருகில் அமருமாறு அழைத்தார். அருகிலமர்ந்த கனகம்மாள் அவரிடம் ஒரு சிறிய தின்பண்டப் பொட்டலத்தை நீட்டினார்.

“என்ன அது! என்ன கொண்டு வந்தே “

“ஒன்றுமில்லை. சாதுக்களுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொஞ்சம் பக்கோடா செய்து கொண்டு வந்திருக்கிறேன்”

அதை பிரித்துப் பார்த்துவிட்டு “சரி சரி ரொம்ப நல்லாயிருக்கு! சாதுக்களுக்கு இதெல்லாம் வேண்டுமா! அதோ அந்த மூலையைப் பார். தனம் ஊரிலில்லை. இரண்டு நாளைக்கு வேண்டிய சாதத்தை அந்த பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கும்படி சொன்னேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிடுவேன். அதற்கு மேல் என்ன வேண்டும். அப்படியே சும்மா இருக்க வேண்டியதுதானே ! எண்ணம் வந்ததாம்! அதற்காக செய்து கொண்டு வந்தாளாம்! கண்ணை மூடிண்டு சும்மா கிடப்பியா ! அதை இதை செய்துண்டு அலைவியா. பகவான் என்ன சொல்லித்து, எதையும் நினைக்காமல் சும்மா கிடக்கும்படித்தானே சொல்லித்து.அதை விட்டு விட்டு நீ ஏன் நேரத்தை வீணாக்குகிறாய். அவன் சன்னிதியில் கண்ணை மூடிண்டு கிடக்க வேண்டியது தானே” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

தாயுமானவரின் கீழ்கண்ட வரிகளை படித்தவுடன் மேலே சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே

(இச்சித்து =விரும்பி)


கடவுளின் பற்று அதிகமாகுமளவும் உலகக் கடமைகளை அவன் குறைத்து விடுவானாம், இது கீதை சொல்லும் வழி.

அப்படி குறைத்து வருவதை அறியாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது ப்ரவ்ருத்திகளை உண்டாக்கிக் கொள்வது வலையில் சிக்கிக் கொண்ட பறவையைப் போலவே ஆகும். “பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும். புது விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளுமளவும் ‘நேரம் வீணாகிறது’அதாவது பிறவி வீணாகிறது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் எவ்வளவு பொருள் பொதிந்த கருத்துகள்.

போகட்டும், நாம் செய்ய முனையும் காரியங்கள் எதுதான் நம் விருப்பப்படி நடக்கிறது ! தாயுமானசுவாமிகள் ஆராய்கிறார் பாருங்கள்.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார். சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

பிரம்மனிலிருந்து தொடங்கி, சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க விரும்பும் சாதாரண பக்தன் வரை யாருடைய செயலின் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பதை ஒரு நகைச்சுவை ரஸத்தில் விவரித்திருக்கிறார். கண்கூடாக இதை காலந்தோறும் கண்டும் நமக்கு ஏனோ புரியாமல் போகிறது. அதை ஔவையாரும் சொல்லி வியக்கிறார்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

எல்லாமே ஈசன் செயல் என்றுதான் கபீரும் சொல்கிறார். தான் வெறும் ஒரு சூத்திர பொம்மை. சூத்திரத்தை கையில் வைத்து ஆட்டுவிப்பவன் எங்கோ இருக்கிறான்.

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ

ஓரொரு சமயம் நாம் நினைப்பது நடந்து விடுகிறது. உதாரணம் கபீரின் வலைப்பூ. அப்போது ”செய்விப்பவன் அவன் யாரோ’என்ற வரியை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஔவை சொல்வது போல் ‘அது வரினும் வந்தெய்தும்’

எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. பல முறை பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் அவன் இதை நடத்திக்கொண்டு வருகிறான். ”பழையதை தின்று சும்மாக் கிடக்காமல்” பதிவுகளை எழுத மனம் பரபரக்கும் போது பல மனக்குழப்பங்கள், குற்ற உணர்வு.

எல்லாவற்றையும் மீறி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தனி மடல்களிலும் பின்னூட்டத்திலும் வாசகர்கள் காட்டிய பரிவும் அன்புமே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

குருவருள் அவர்களுக்கு என்றும் பெருகட்டும்.
__________________________________________________

இதுவரை வெளியாகியிருக்கும் ஈரடிகளை தேடவும் புதிதாக காணப் பெறுவோர்க்கு அவர்கள் அறிந்திருக்கும் தோஹாக்களின் மொழிபெயர்ப்பைத் தேடவும் வசதியாக கூகிள் தேடு பொறி ஒன்று பக்கப்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே தமிழ் அல்லது ஹிந்தி இரண்டிலும் உள்ளீடு செய்யலாம். தேடலுக்கான விடை புதிய பக்கத்தில் தரப்படும். இதைத் தவிர அந்த ஈரடிகள் அதன் ஹிந்தி மூலத்துடன் ஒரு சிறு மின்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அதற்கான இணப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


மின்புத்தகத்தை இங்கேயே படிப்பதற்கு வசதியாக அதை முழுத் திரைக்கு விரித்துக் கொள்ளலாம். எழுத்துகளை பெரிதாக்கிக்கொள்ளவும் இதில் + - மெனுக்கள் உள்ளன. இதை புத்தகம் போல பக்கங்களை புரட்டவும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து கீழே நகர்த்திச் செல்லத் தேவையில்லை.

மென்புத்தக்கதைப் பற்றியும் அதை மேம்படுத்தவும் தங்கள் கருத்துகளை பின்னூட்டமாகவோ தனி மடலிலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய விழைவோர் இந்த esnip சுட்டியை பயன்படுத்தவும்.

Wednesday, September 17, 2008

நாவாய் இன்னும் நடுக்கடலில்...

ஆணவமலம் என்பது எல்லா நிலைகளிலும் வெவ்வேறு பரிணாமங்களில் எப்போதும் கூடவே இருப்பது.மனம் இருக்குமளவும் அதுவும் இருக்கும். வேறொரு வகையில் சொல்வதானால் அது தான் மனதின் செயற்பாட்டுக்கே தளமாகிறது.

மகரிஷி நாரதரையும் அது விட்டு வைக்கவில்லையாம். சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது. அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.

மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார் நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக் கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக் குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்து வருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விட நேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான். இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.

இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?

ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர். சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து ”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறை சுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.

’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.

’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால் என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம் செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.

“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம், குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன் மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே. அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.

கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை. பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.

இறை வடிவமான குருவிடம் பூரண சரணாகதி என்பது இதற்கான ஒரு உபாயமே. பாதையை தவறவிடாது மேலே செல்ல வழி காட்டுபவர் குரு. அதைக்குறித்து கபீர் சொல்வது

लेने को गुरु नाम है ,देने को अन्न दान ।
तरने को आधीनता, बूडन को अभिमान ॥


லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்ன தான்
தர்னே கோ ஆதீனதா, பூடன் கோ அபிமான்


கொள்வ தற்கு குருநாமம், கொடுப்ப தற்கு அன்னதானம்
பணிவதால் மிதத்தல் கூடும்,கர்வத்தால் கலம் மூழ்கும்

(மிதத்தல் =ஆன்மீகப் பயணம்; கலம் மூழ்கல்=ஆன்மீகப் பயணத்தில் தோல்வி)

பேச்சு வழக்கில் ”லேனா தேனா” என்றால் எடுத்தலும் கொடுத்தலும் என்பதைக் குறிக்கும்.நம் உலக வாழ்க்கைகான அச்சு லேனா-தேனா.அதைச் சுற்றியே வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. எதையாவது எடுத்துக்கொண்டால் பதிலாக வேறு எதையாவது கொடுக்க வேண்டியிருக்கிறது.

பழைய திரைப்படப் பாடல் ஒன்று.

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான்
அதில் ஆயிரமாயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தகுதிக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்.

ஆசைப்படும் வாழ்க்கைக்கு ஏற்ப விலை தர வேண்டும். சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

பெரும்பாலானோர் ஆசைப்படாத ஆனால் விலை மதிக்கமுடியாத பொருள் ஒன்று உண்டு. அதுவே குருவருள். அதற்கு தர வேண்டிய விலை மிக சுலபம்.பிற உயிர்களின் பசியாற்றுதலும் அன்பு பாராட்டுதலுமே ஆகும். எளிமையாக இவைகளை போற்றி வாழ்ந்தாலே குருநாமம் சித்தியாகி பிறவி கடலை கடந்து கரை சேர்ந்து விட முடியும். மனதில் ஆயிரமாயிரம் பொருட்களுக்கான ஆசையை விலக்கி “லேனே கோ குரு நாம் ஹை, தேனே கோ அன்னதான்” என்பது எவ்வளவு சுலபமான வழி ! நேர்வழியே ஆனாலும் அபாயம் இல்லாமல் இல்லை. குரு கபீர் அதையும் உணர்த்துகிறார்.

அதுவே நம்மை அறியாமல் உள்ளே புகுந்து கொள்ளும் கர்வம்.பணிவான மனம் உடையவன் வெற்றிகரமாக மிதந்து கரை சேர்ந்து விடுவான். ஆனால் கர்வம் என்ற குணம் பிறவிக் கடலை கடக்க வொட்டாமல் நடுவிலேயே மூழ்கடித்துவிடும். அது எப்பேர்பட்டவரையும் ஏமாற்றி உட்புகுந்து விடும். அதை சுட்டிக்காட்டுவதே மேற்குறிப்பிட்ட ராமகிருஷ்ணரின் கதை.

இன்னுமொரு ஈரடியிலும் இதே உதாரணத்தைக் கையாளுகிறார் கபீர்.

कबीर गर्व न कीजिएं, रंक न हसिये कोय ।
अजहूं नाव समुद्र में , ना जानैं क्या होय ॥


கபீர் கர்வ் ந கீஜியே ரன்க் ந ஹஸியே கோய்
அஜ்ஹூ நாவ் ஸமுத்ர் மே, நா ஜானை க்யா ஹோய்


காவாய் கர்வம் கபீரா, எளியரைக் கண்டே எள்ளாய்
நாவாய் இன்னும் நடுக்கடலில்,நடப்பதை முன்னம் ஏதறிவாய்

(காவாய்= காத்துக்கொள்வாய்; எள்ளாய் =இகழாதே, நாவாய்= படகு)

கர்வம் என்கிற பிணியிலிருந்து எப்போதும் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ளுதல் அவசியம். ஏனெனில் அது உள்ளே புகுந்துவிட்டால் அவரிடம் உள்ள பல நல்ல குணங்களை பறித்துக் கொள்ள வாய்ப்புண்டு. பின்னர் கீழான செயல்களில் மனம் இறங்கும். கீழான மனம் எந்த நிலைக்கு தாழ்ந்து போகும் என்பதை நாலடியார் சொல்கிறது.

கடுக்கென சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர் மாட்டு வைக்கும் அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம்,விறன்மலை நன்னாட !
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் (348)

எப்போதும் கடுஞ்சொல் பேசுவது, இரக்கமற்றிருப்பது,பிறர்க்கு துன்பம் செய்து மகிழ்வது, மீண்டும் மீண்டும் கோபப்படுவது ஆகியவை கீழ்மக்கள் குணங்களாகும். அவற்றை விடமுடியாது, விடச் சொல்பவரை இகழவும் செய்வர்.

அப்படி பிறருக்கு ஏற்படுத்தும் மனத்துன்பத்தின் பின் விளைவு எப்போது எந்த வடிவத்தில் அவரிடமே திரும்புமோ சொல்ல முடியாது. அதனால் தடைப்படப் போவது அவரது பயணம் தான்.

கடல் நடுவே பெரும் சுழல்களும் உண்டு,சூறாவளிகளின் அபாயமும் உண்டு. கரை சேரும் வரை எதுவும் நிச்சயமில்லை. தீவினைப்பயன்கள் அத்தகைய சுழலாகவோ சூறாவளியாகவோ வந்து தாக்கக்கூடும். அதைக் குறிப்பிடவே நாவாய் இன்னும் நடுக்கடலில் என்று கபீர் குறிப்பிடுகிறார்.

கண்ணாடி மாளிகையுள் இருந்து கொண்டு பிறர் மீது கல் வீசலமா?

ஒருவனுக்கு நல்ல காலம் பிறந்து நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அவனுக்கு ஏற்றம் வந்துவிடுகிறது. அதனோடு கூடவே அவன் அகங்காரமும் பெரிதாக வளர்ந்து விடுகிறது. உற்றார் பலரும் விட்டு விலகி போகின்றனர். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமும் அவனுக்கில்லை. போனால் போகிறது.

குறைந்தபட்சம் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா? காலப்போக்கில் நண்பர்கள் குறைந்தது மட்டுமின்றி எதிரிகள் பெருகி நிம்மதியை குலைத்தது.

புராணத்திலும் வரலாற்றிலும் இப்படிஅல்லலுற்ற அசுரர்கள், சக்ரவர்த்திகள்,செல்வந்தர்கள்,பண்டிதர்கள் மற்றும் கலைஞர்கள் எத்தனையெத்தனையோ !

அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை மன உளைச்சலில் கழிக்கின்றனர்.

குறுகிய அறைக்குள் புழுக்கம் அதிகரிக்கிற்து.உட்கார முடிவதில்லை.கர்வத்தால் குறுகிப் போன மனதிலும் இதே நிலைமைதான்.மனப்புழுக்கம்.

வாழ்க்கையை தமக்குத் தாமே நரகமாக்கிக் கொள்கின்றனர் மக்கள். அறையை விட்டு வெளியே வந்தால் குளிர்ந்த காற்று வரும். செருக்கு என்ற தாழ்பாளை நீக்கி வெளி வந்து மனம் குளிர்ந்து யாவருடனும் உறவாட ஆரம்பித்தால் உறவினரும் நண்பரும் தாமே தேடி வருவர். இதையே வள்ளுவர்

தமராகி தற்றுறந்தார் சுற்றம், அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன்பு தமக்கு உறவினாராயிருந்து தாமாகவே தன்னை விட்டுப் பிரிந்து சென்ற சுற்றத்தார், அதற்குரிய காரணம் நீங்கப் பெறின் தாமாகவே பகையின்றி மீண்டும் வந்து சேர்வர் என்று உரைக்கிறார். பிரிந்து செல்வதற்கான காரணம் ஒருவனுடைய செருக்கு. அதை அழித்து விட்டால் பிரிவதற்கான காரணம் நீங்கப் பெற்று மீண்டும் உற்றார் வந்து உறவாடுவர். கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

जग में बैरी कोई नहीं, जो मन शीतल होय ।
यह आपा तो डाल दे, दया करे सब कोय ॥


ஜக் மே பைரீ கோய் நஹி, ஜோ மன் ஷீதல் ஹோய் |
யஹ் ஆபா தோ டால் தே, தயா கரே ஸப் கோய் ||


செருநர் சகத்தில் இல்லை, சீதள மாயின் மனமே
செருக்கு செத்தப் பின்னே,செறிஞர் சேருவர் தாமே

(செருநர்=எதிரிகள்; சகம்= உலகம் சீதளம்=குளிர்ச்சி,ஆணவமில்லா நிலை; செருக்கு= ஆணவம்; செறிஞர்=உற்றார்)

ஆபா தோ டால் தே ’ என்பது “ நான் என்ற எண்ணத்தை
தூக்கி எறிந்து விட முடிந்தால் ...” தயா கரே ஸப் லோக் யாவரும் அன்பு பாராட்டுவர் என்று பொருள் படும். அது “செருக்கு செத்த பின்னே, செறிஞர் சேருவர் தாமே என்பதாக மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .
____________________
பிற்குறிப்பு:

ஆரம்பத்தில் கண்ட ”லேனே குரு நாம் ஹை” என்ற தோஹாவில் கபீர் சொல்ல விழையும் உட்பொருளை முதலில் எழுதி வைத்திருந்தேன். ஆனால் அது வெளிப்படையாக சொல்லப் படாததால் மேலே அதற்குரிய முறையான மொழி பெயர்ப்பை தந்துள்ளேன். கீழே உட்பொருளை பிரதிபலிக்கும் ஈரடியை தருகிறேன்.

துணைக்கொள் ளகுரு நாமம், ஈவதற்கு அன்ன தானம்
கரை சேரவே தயை வேண்டும், கலம் கவிழ கர்வம் தானே

Saturday, September 06, 2008

பெருநெறி பற்றும் பேராளர்

வால்-பையன் ஒருவன். துறுதுறுவென்று அலைபாயும் கண்கள். ஒரு நிமிடம் கூட கை கால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எதை வேண்டாம் என்று தடுப்பரோ அதை செய்து பார்த்துவிடும் துடிப்பு. அவன் கை வைத்தால் அந்த பொருள் அதோகதிதான். ஆனால் அவன் செல்லப்பிள்ளை.

ஓரொரு சமயம் ”அம்மா, இனிமே செய்யமாட்டேன், நல்ல பையனா இருக்கேம்மா ” என்று அடிபட்டு அழும்போது கோபமெல்லாம் கரைந்து அவனை உச்சிமுகந்து குளிர்ந்து போகிறாள் தாய்.

அந்த இன்பம் சிறிது நேரத்திற்குத்தான். அது அவளுக்கும் தெரியும்.

பின்னர் மீண்டும் தொடர்கிறது அர்ச்சனை, “சனியன், குரங்கு! கைய வச்சதெல்லாம் நாசம். ஊர்ல எல்லோருக்கும்தான் பொறக்கலையா? அது என்ன! எனக்குன்னு இப்படி ஒரு பிசாசு வந்து வாய்ச்சிருக்கு'' . ஆற்றாமையால் புலம்புகிறாள் அவன் தாய்.

பிறத்தியாருக்கு சிரிப்பு, வேடிக்கை. அந்த தாயின் நிலையை புரிந்து கொண்டவர் அவளுடைய மாமியார் மட்டும் தான். “ஹும் அப்பனைப் போல பிள்ளை. போகப் போக சரியாயிடும் பாரேன். இன்னிக்கு எவ்ளோ சாதுவா இருக்கான். அவன் குழந்தையா இருந்த போது படுத்தின பாடு இருக்கே...........” கதை தொடர்கிறது.

நம்முடைய மனதுடன் நமது போராட்டம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது செல்லப்பிள்ளை. இழுத்த இழுப்பெக்கெல்லாம் ”முடியாது” என்று சொல்ல முடியாமல் அதன் வழியே ஓடுகிறது சித்தம்.

நல்லதற்கு அல்ல என்று புரிந்தாலும் ஒரு இயலாமை. வாழ்க்கையில் துன்பம் வருத்தும் போது ஞானிகளின் பேச்சை கேட்பது போலவும் புரிந்து கொண்டது போலவும் ஒரு பாவனை. ஆனால் வேதாளம் மீண்டும் மரம் ஏறிக்கொள்கிறது.

பில்வமங்கள் என்பவன் இப்படித்தான், தன் மனதின் போராட்டத்தை வழிக்குக் கொண்டுவர பல வருடங்கள் காட்டிலே சென்று தவம் செய்தான். சற்றே சித்தம் தெளிந்தது. இப்போது ஊருக்குள் செல்வதால் மக்களுடன் பழகுவதால் ஏதும் கேடு வராது என்றெண்ணி பிட்சைக்காக ஊருக்குள் போய் வர ஆரம்பித்தான். ஒருநாள் வீதியிலே மிக அழகான பெண்மணி நடந்து செல்வதைக் கண்டதும் வேதாளம் மரமேறியது. அவளையே பின் தொடர்ந்தான். அவள் தன் வீட்டுக்குள் சென்றதும் இவன் வாயிலருகே நின்றிருந்தான்.

வெளியே ஒரு சாது பிட்சைக்காக நிற்கிறார் என்றெண்ணி அப்பெண்மனியின் கணவர் அவரை மரியாதையுடன் வரவேற்கிறார். வெளியே நின்றபடியே ”வீட்டின் எஜமானியை நான் காணலாமா?” என்று வினவுகிறான் பில்வமங்கள். அவளும் வந்து பாதநமஸ்காரம் செய்கிறாள். “ அம்மணி தங்கள் தலையில் உள்ள கொண்டை ஊசியை தரமுடியுமா” என்று யாரும் கேட்காத யாசகம் கேட்கிறான். ஏதும் புரியாதவளாய் கொண்டையின் ஊசியை கழற்றிக் கொடுத்தாள் அப்பெண்மணி. அடுத்து அவருடைய செய்கை யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் நீ காணக் கூடாது” என்று கூறியபடியே தன் இருகண்களையும் அந்த ஊசியினால் அங்கேயே குருடாக்கிக் கொண்டான்.

மனம் சில கணங்களே தடம் புரண்டாலும், அவ்வளவு நாட்கள் செய்த தவத்தின் பயனாய், (பின்னாலே தரப் போகும் கிருஷ்ண தரிசனத்திற்காக) தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் மனவலிமையை அந்நேரத்தில் இறைவனே கொடுத்தான் போலும்.

பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்மிர்தம் பாடிய லீலா ஷுகர் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான மனப் போராட்டம் அத்தகையது.

இந்த நிலையைக் கண்டு கபீரும் பரிதாபம் கொள்கிறார்.

मन के मारे बन गये, मन तजि बस्ति मांहि ।
कहैं कबीर क्या कीजिए, यह मन ठहरै नांहि ॥


மனமொ ழியவனம் புகுவாய், மாய்வ தில்லை மனமே
மனம்நிற்க வழியு மேது, கபீரது நிலையின்றி திரியுமே

புலன்களால் அலைக்கழிக்கப்படும் வரை மனம் ஒரு நிலைகொள்ளாது. அந்த அவத்தையை திருநாவுக்கரசர் இப்படிச் சொல்கிறார்.

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து

பெருமழை வாழ்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்

கருமுகில் தவழும் மாடக் கச்சியேகம்ப னீரே


( குட்டம்= குட்டை, நீர்நிலை; பெருமழை= பெரு நெறி, முக்திக்கான ஞானம்; முதலை ஐந்து= ஐம்புலன்கள்)

ஐம்புலன்களின் ஆட்டம் அடங்காத வரையில் நமது ஆன்மீக நாட்டம் வெறும் 'பிதற்றலாக'த்தான் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுபாடுள்ள மனம் தான் ஞானத்திற்கு வழி காட்டமுடியும். ஆனால் பொறி வழித் திரியும் அதனை பிசாசு, குரங்கு, சனியன் என்று பலவாறாக பலர் வைதாலும் அது செல்லக் குழந்தைதான். அதைவிட்டால் நம் பிறவிக்கு அர்த்தம் கிடையாது. எப்படி? கபீர் தரும் இந்த உதாரணத்தை பார்ப்போம்.

कुंभै बांधा जल रहै, जल बिन कुंभ न होय ।
ज्ञानै बांधा मन रहै, मन बिनु ज्ञान न होय ॥


கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ


ஒரு சிறிய செம்பினுள் நீரைப்பிடித்து மாவிலையும் தேங்காயும் அதன் மேல் வைத்து “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.... என்று பிரார்த்திக்கும் போது அது கலசம் என்ற ஒரு மேலான அந்தஸ்து பெறுகிறது. சிவோஹம் சிவோஹம் என்றோ, ஸோஹம் ஸோஹம் என்றோ மனதை நிறுத்த முடிந்தால் நம் பிறவியும் சிவனடியைப் பற்றிக்கொள்ள தகுதியுடையதாகிறது.

ஆனால் மனம் என்று ஒன்று இல்லாமலே போனால் இதை எப்படி செய்ய முடியும்? அல்ஜெமிர் (Alzhemier disease) வியாதியால் பீடிக்கப் பட்டவர்களுக்கு மனம் வேலை செய்யாது (செய்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது) அப்படி மனமற்றவர்களை ஞானிகள் என்று ஏற்றுக் கொள்ளுமா உலகம் ?

ஞானிகளிடம் மனம் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் வலிமையுடன் கூடிய ஆற்றல் உடையவனை வீரன் என்று சொல்வர். மன வலிமை மிக்கவர்கள் தீரன் எனப்படுவர்.

யாழ்பாணத்து யோகசுவாமி ரமணாசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம்.

இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி?

ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.

தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)


எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்

றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)

இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே


ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும்.
அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

லீலாசுகரின் பிரபலமான 'கஸ்தூரி திலகம் 'என்று தொடங்கும் பாடலை இந்த சுட்டியில் கேட்கலாம். வலையேற்றியிருக்கும் அன்பருக்கு நன்றி.

அதையே பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் குரலில் கேட்க