Thursday, April 12, 2007

திகம்பரர் நடுவே மடிவாளன்

ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு. It is better to keep away from the mire than washing it off. மழைகாலத்தில் நம்மை வேகமாகத் தாண்டிச் செல்லும் வண்டிகள் சேற்றை வாரியிறைத்து செல்லும் போது ஒதுங்கி ஒதுங்கி செல்லும் அவஸ்தை, பட்டவர்களுக்குத்தான் தெரியும். அதே போல் சமூகத்தில் தகாத மனிதர்களுடன் சேர்க்கை வரும் பொழுது அதி கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களை முற்றும் விலக்கவும் முடியாது; ஒட்டி உறவாடவும் முடியாது. அத்தகைய நிலை பல காரணங்களால் ஏற்படலாம். சிலரை வியாபர நோக்கத்தோடு அணுக வேண்டியிருக்கலாம். ஒரு சிலர் அதிகாரிகளாகவோ சக ஊழியராகவோ வாய்க்கலாம். பல சமயங்களில் சுயநல காரணங்களுக்காக ஒரு சிலர் நம்மை சுற்றி வரலாம்.

அத்தகையவர்களின் முக்கிய ஆயுதம் என்ன? ஒருவனை ஆசை வலையில் அடிமைப் படுத்தி தமது சுய காரியங்களை சாதித்துக் கொள்வதாகவே இருக்கும். எனவே புலனின்பங்களைத் துறக்கத் தெரிந்தால் வெகு சுலபமாக அத்தகைய இக்கட்டான நிலைமைகளினின்று விடுபடலாம். இதைக் கபீர் எவ்விதம் உரைக்கிறார் பார்ப்போம்.

कबीरा संगति साधुकी जौ की भूसी खाय
खीर खाँड़ भॊजन मिले ताकर संग न जाय
.

கபீரா சங்கதி சாது கீ ஜௌ கீ பூஸி காய்
கீர் காண்ட் போஜன் மிலே தாகர் சங்க் ந ஜாய்


கூழும் உப்பே ஆயினும் கபீரா, நல்லாரிணக்கம் அறிந்திரு
கூட்டும் பருப்பும் கிடைப்பினும் அல்லாரிணக்கம் துறந்திரு.


(அல்லது)

கைப்பிடி அவலே ஆயினும் கபீரா நல்லோர் அவைதனை சேர்ந்திரு
நெய்யொடு விருந்து மணக்கினும் அல்லார் மனைதனை துறந்திரு.

பல தியாகச் செம்மல்கள் பிற்காலத்தில் பெரிய பதவிகள் தம்மைத் தேடி வந்த போதும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெறுத்து ஒதுக்கினர். அவர்களால் அத்தகைய பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது என்பதால் அல்ல. பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் தாம் தினமும் சந்திக்கப் போகும் மனிதர்களையும் அத்தகைய பதவிகளைச் சுற்றி வரும் சுயநலமிகளின் எதிர்பார்ப்பும், பூர்த்தி செய்யாவிடில் வரப்போகும் இன்னல்களும் அது ஒரு சகதியான பாதை என்பதை உணர்த்தி விடுகின்றன. பதவிகளால் வரும் சுகங்களைவிட மன துன்பங்களே அதிகம் என்ற காரணத்தால் தவிடு, கூழ் அவல் இவற்றிலேயே திருப்தியுடன் மகிழ்சியுடன் காலத்தை கழித்தனர். அது மேலோர் காட்டும் வழி.

ஆச்சாரியா வினோபா பாவே மகாத்மாவின் அஹிம்சா கொள்கையின் வாரிசாக கருதப்பட்டவர். விரும்பியிருந்தால் எத்தகைய பதவியும் சுதந்தரத்திற்குப் பின் அவர் வகித்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரோ பவுனாரில் (மஹாராஷ்ட்ரா) ஆசிரமம் அமைத்துக்கொண்டு பூதானம், கிராம முன்னேற்றம் என பல உயரிய இலட்சியங்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1951 முதல் 1964 வரை பாதயாத்திரை மூலம் இந்தியா முழுவதும் சுற்றி 42 லட்சம் ஏக்கர் நிலங்களை பூதானமாகப் பெற்று ஏழைகளுக்கு வழங்கச் செய்தார். சம்பல் கொள்ளைக்காரர்கள் அவரது அஹிம்சா முறையினால் ஈர்க்கப்பட்டு 1960 ல் பெருமளவில் சரணடைந்தனர். 1970 க்கு பிறகு தன்னை முழுவதுமாக இறைநாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். எளிமைக்கு உதாரணமான அத்தகையவரின் ஆசிரமத்திற்கு ஒருவர் சென்றிருந்தால் நெய்யும் பருப்புமா மணக்கும் ? ஆனால் அன்பிற்கு அங்கே குறைவிருக்காது. நாலடியாரில் வரும் ஒரு பாடலை இங்கே நினைவு கூறுதல் பொருந்தும்.

கழுநீருட் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்- விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்.


அரிசி களைந்த கழுநீரில் இட்டு சமைத்த கீரை உணவு என்றாலும் உள்ளன்போடு படைக்கப்பட்டால் அதுவே அமுதமாகும். சிறந்த பொரியல் துவையல் வகைகளுடன் சேர்த்து பரிமாறுகிற நல்ல வெள்ளரிசி சோறு என்றாலும் உள்ளன்பில்லாதவர் கொடுக்க உண்பது எட்டிக்காயை உண்பது போலாகும்.

நற்குணங்களைப் போற்றாதார் நடுவில் ஒருவன் வாழ நேர்ந்தால் அது துன்பம் தருவதே ஆகும்.

கபீரின் இன்னொரு ஈரடி நமது நற்பண்புகளை மேன்மேலும் பலப்படுத்தக்கூடிய நண்பர் வட்டத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

जहां न जाकॊ गुन लहै, तहां न ताकॊ ठावं
धोबी बसके क्या करे, दिगम्बर के गांव


ஜஹா ந ஜாகோ குண் லஹை, தஹா ந தாகோ டாவ்
தோபீ பஸ்கே க்யா கரேன் திகம்பர் கே காவ்


குடிபோக வேண்டா, குணம் போற்றார் நடுவே
மடிவாளனும் எதற்கு ஆடை அறியார் நடுவே.


(திகம்பரர் = ஆடை அணியாதவர்; மடிவாளன் =வண்ணான்)

நல்ல குணங்களை கொள்ளாதோர் ஆடையற்றவரைப் போல். (இங்கே அவதூத நிலைமை அடைந்து ஆடை துறந்தவர்களைப் பற்றி குறிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. திகம்பரர் என்று ஜைன முனிகளில் ஒரு பிரிவு உண்டு. அவர்களும் ஆடை எதுவும் அணிவதில்லை. கபீர் குறிப்பிடுவது கலாசாரத்தால் ஆடை அணியும் பழக்கம் இல்லாதவர்களைப் பற்றி. குழப்பதைத் தவிர்க்கவே ' ஆடை அறியார்' என்று மொழி பெயர்ப்பில் கையாளப் பட்டுள்ளது.)

எங்கே ஒருவனுடைய நற்குணங்களும் திறமைகளும் மதிப்பில்லாத நிலை உள்ளதோ அங்கே அவன் இருந்து அடையப் போவது என்ன? அவர்கள் மத்தியில் வசிப்பதனால் காலம் வீணாகும். அது திகம்பரர் வசிக்கும் ஊரில் சலவைத் தொழிலாளி தொழில் செய்ய முற்படுவது போலாகும். எனவே தன் திறமைக்கும் நற்குணங்களுக்கேற்ப வசிக்கும் சூழலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கபீர் வலியுறுத்துகிறார்.

வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சர்வ ஜித் வருடத்தில் சர்வ சுப காரியங்களும் ஜெயம் பெறுவதாக.