Tuesday, February 20, 2007

வேடதாரிகளின் வேடிக்கைகள்

உலகம் ஒரு நாடக மேடை. நாடகம் என்றால் நவரசங்களும் வேண்டும். சோகக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் நகைச்சுவையும் இறைந்து கிடக்கிறது நாம் எந்த கண் கொண்டு பார்க்கிறோம் என்பதைப் பொருத்து. பொதுவாக நகைச்சுவை என்பது பிறருடைய அனுபவமாகவோ அல்லது பிறர் சம்பந்தப் பட்ட விஷயங்களாக இருக்கும் போது ருசி அதிகம். அதனால் நமக்கு பாதிப்பு இல்லை பாருங்கள் ! Hypocrisy எனப்படும் சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமில்லாமல் நடந்து கொள்பவர்கள் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். "படிக்கிறது ராமாயாணம் இடிக்கிறது பெருமாள் கோவில் " என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி.

ஒரு சிலர் அறியாமையால் அப்படி நடந்து கொண்டால் வேறு சிலர் தம்மை பிறரை விட அதி புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு நகைப்புக்கு இடமளிக்கிறார்கள். கபீர் குறிப்பிடும் கீழ் கண்ட மனிதன் ஒரு அறிவிலி. அவனுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

अहिरन की चोरी करै करॆ सुई का दान
ऊंचा चटिकर दॆखता कॆतिक दूर विमान


அஹிரன் கீ சோரீ கரை கரே ஸுயீ கா தான்
ஊஞ்சா சடிகர் தேக்தா, கேதிக் தூர் விமான்


உலைக்கல்லே திருடுவான், செய்வனே ஊசி யளவு தானம்
உயரே ஏறித் தேடுவான், எதுவரை வந்தது விமானம்

அஹிரன் என்பது கொல்லன் உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் உலைக்கல். இதுவும் இரும்பால் ஆனது. மிகவும் எடையுள்ளது. காய்ச்சிய இரும்புத் துண்டை இதன் மேல் வைத்தே சம்மட்டியால் அடித்து விரும்பிய வடிவமைப்பை கொண்டு வருவர். இதை ஆங்கிலத்தில் anvil என்று உரைப்பர்.

அடிப்படையில் நம் கவிதை நாயகனுக்கு கொஞ்சம் திருட்டுகுணம் அதிகம். எங்கே வேண்டுமானாலும் சென்று எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக தூக்கிக் கொண்டு வந்து விடுவான். அவனுக்கு உலைக்கல் போன்ற தூக்குவதற்கே சிரமமான பொருள் ஒன்றும் பெரிய விஷயமில்லை. அத்தகையவன் எப்பொழுதோ ஒரு கதை கேட்க நேரும் பொழுது ஏழைகளுக்கு தானம் செய்பவர்களை வைகுண்டத்திற்கு புஷ்பக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் அழைத்து செல்வார்கள் என்று கேள்விப் பட்டிருந்தான். அவனுக்கும் ஏதோ ஒரு நாளில் ஒரு ஏழைக்கு சிறிய தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைத்து விட்டதாகவே நினைக்கிறான். அவன் வீட்டு மாடி ஏறி வைகுண்டம் வானத்தில் எந்த திசையில் உள்ளது என்று தேடுகிறான். விஷ்ணு தூதர்கள் எந்த பக்கத்திலிருந்து வரக்கூடும் என்றும் ஆராய்கிறான். கண்டிப்பாக இவன் புத்திசாலியாக இருக்க முடியாது. அவன் தன் கற்பனை உலகில் வாழ்பவன். ஆனாலும் நகைச்சுவைக்கு குறைவில்லை.

அதிபுத்திசாலிகளின் விதம் இன்னொரு வகை.

माला तिलक तॊ भॆष है , राम भक्ति कुछ और
कहैं कबीर जिन पहिरिया, पाँचॊं राखै ठौर

மாலா திலக் தோ பேஷ் ஹை, ராம் பக்தி குச் ஔர்
கஹை கபீர் ஜின் பஹிரியா, பான்ஞ்சோ ராகை டௌர்

திலகம் மாலை வேடமோ பலே, இராம பக்தியே வேறே
திகழும் பக்தி அவருளே கபீரா, ஐந்தும் அடக்குவார் உள்ளே


'ஐந்தும் அடக்குவாருள்ளே' என்பது ஐம்புலன்களையும் தம் கட்டுக்குள் வைத்திருப்பவர்களை குறிப்பதாகும்.

பலரும் பெரும் பக்திமான்கள் போல திருநீறு அல்லது திருமண், ருத்திராட்ச மாலைப் போன்ற பல சமயச் சின்னங்களைப் பகட்டாக வெளிக்காட்டிக் கொண்டு தினம் முழுவதும் வலம் வருவார்கள். ஆயின் உள்ளத்திலே சிறிதளவும் கட்டுப் பாடின்றி புலன் வழி போக்கிலேயே காலத்தைக் கழிப்பர். இவர்களைப் பொருத்தவரை இறைவன் அவனுடைய இடத்திலிருந்து நமது பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டு நமக்கு அருள் புரிபவன் (ஒரு வேளை அது அவனுடைய கடமை என்றும் நினப்பார்களோ). நாம் வேளைக்கு தக்கபடி கிடைத்ததை அனுபவிப்போம் என்ற வகையில் அவர்கள் போக்கு இருக்கும். செய்கின்ற உபதேசத்திற்கும் செயலுக்கும் ஒரு தொடர்பும் இருக்காது.

ராமகிருஷ்ணர் சொல்லிய கதையில் ஒரு பகுதி. ஒரு பசு தோட்டத்தில் நுழைந்து செடிகளையெல்லாம் மேய்ந்து விடுகிறது. அந்தத் தோட்டம் ஒரு பிராமணனுக்கு சொந்தமானது. அவனுக்கு வந்த கோபத்தில் அடி அடியென்று அடித்து அந்த பசு இறந்து விடுகிறது. பசுவின் சொந்தகாரன் வந்து '"கடவுளுக்கு அருகே" இருக்கும் ஒரு பிராமணனுக்கு இப்படி ஏன் புத்தி போயிற்று என்று சண்டைக்கு வருகிறான். பிராமணன் சளைத்தவனா என்ன ? இதோ பார். மனிதனின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு தேவதை அதிபதி. கண்ணுக்கு சூரிய சந்திரர்கள், கையிற்கு இந்திரன், காதுக்கு வாயு இத்தியாதி. ஆகவே உன் பசுவை கொன்றது கைக்கு அதிபதியான இந்திரனே. அவனைப் போய் கேள்." என்று சண்டைக்கு வந்தவனை மடக்கினான். சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, இத்தகைய அதிபுத்திசாலிகளுடன் பேசுவதில் தன் நேரம் விரயமாகும் என்றுணர்ந்த மாட்டின் சொந்தக்காரன் பிராமணனைத் திட்டிக் கொண்டே சென்றுவிட்டான். கோபம் என்ற உணர்ச்சியின் மீது சிறிதும் கட்டுப் பாடற்ற தன் செயலை அந்த பிராமணன் நியாயப் படுத்த முனைவதுதான் நகைப்பிற்கு உள்ளாகிறது. வெளிப்பார்வைக்கு சாத்வீகன் போல காட்சியளித்தாலும் உள்ளே குரூர மனப்பான்மையும் பொய் பேசுதலும் குணமாகக் கொண்ட இத்தகையவர் எப்படி இறைவன் அருளுக்கு பாத்திரமாக முடியும் என்பதே கபீரின் கேள்வி.

உண்மை பக்தியை, சிவ போகத்தை, வளர்த்துக் கொள்ளும் முறையை பட்டினத்தார் கூறுகிறார்.

அஞ்சக் கரம் எனும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்காட்டை வேர் அற வெட்டி வளங்கள் செய்து
விஞ்சத்திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை இட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே


(அஞ்சக்கரம் = நம: சிவாய என்ற நாமம், ஐந்து அட்சரம்; அக்ஷரம் என்பது அக்கரம் ஆகும்
வஞ்சப் புலக் காட்டை = ஐம்புலன்கள் வஞ்சகம் செய்து மனதை திசைதிருப்பும் இவ்வுலகப் பற்றை
புஞ்சக் களை= காமம் என்கின்ற களை)


தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம் என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்தும் தெளிவாகிறது.

Tuesday, February 13, 2007

நிலையா யாக்கை

நாம் வாழ்நாளிலேயே சந்திக்காத ஒருவர் நம் முயற்சிகளுக்கு கண்ணுக்குத் தெரியாமலிருந்து உதவி வந்திருக்கிறார் என்பதை அவருடைய மரணத்திற்கு பிறகு தெரிய வரும் போது "கடன் பட்டார் போல்" மனம் சங்கடப் படுகிறது. திரு உமருத்தம்பியின் பிரிவு வருத்தம் அளிப்பதாய் இருந்தாலும் அவர் ஓரளவு வாழ்ந்து முடித்திருந்தவர். ஆனால் இளைஞரான திரு கல்யாண் என்ற சாகரனின் அகால மறைவு 'அலகிலா விளையாட்டுடையானின்' விளையாட்டாக ஒப்புக் கொள்ள முடியாமல் திகைக்கிறது உள்ளம். அவர் மறைவு நிலையாமை என்பதை மீண்டும் நம் யாவருக்கும் நினைவு படுத்த ஒரு குறுஞ்செய்தியோ? செய்தியை தந்த அவனையே அவர் குடும்பத்தார்க்கு அதைத் தாங்கிக் கொள்ளவும் சக்தியை கொடு என்று பிரார்த்தனை செய்வோம்.

இப்பதிவை, தமிழ் வலைப்பூக்களை அழகாக தொடுத்துக் கொடுத்து வரும் தேன் கூடு திரட்டியை துவக்கி திறம்பட நடத்தித் தந்த திரு கல்யாணராமன் என்கிற சாகரன் அவர்களின் நினைவிற்கு சமர்ப்பிக்கிறேன்.

கபீரின் சில ஈரடிகள்- நிலையாமைப் பற்றி

क्या करियॆ क्या जॊडिये थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


க்யா கரியே க்யா ஜோடியே தோடே ஜீவன் காஜ்
சாடி சாடி சப் ஜாத் ஹை தேஹ் கேஹ் தன் ராஜ்

அற்ப வாழ்வு அவனியிலே அலைவதென்ன அடைந்ததென்ன
சொற்ப தினமே போயின யாவும் தனந்திவரம் கிருகம் தேகம்


(தனம் = செல்வம் திவரம் =அரசு ; கிருகம்=வீடு,மனை ; தேகம்= உடல்)


कबीरा गर्व न कीजीयॆ ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना ऊपर जम्सी घास

கபீரா கர்வ் ந கீஜியே ஊன்சா தேக் ஆவாஸ்
கால் பரொவ் புயீ லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்


செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ ! காலன் கிடத்தும் இடங்கண்டு


काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं
सास-सास सुमिरन करॊ, और यतन कुछ नाहिं

காஹ் பரோசா தேஹ் கா, பின்ஸ் ஜாத் சின் மான்ஹி
ஸாஸ் -ஸாஸ் சுமிரன் கரோ, ஔர் யதன் குச் நாஹி


நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு
மூச்சிலும் செபிநாமம் முயல்வதற் கில்லை வேறெதுவும்