Sunday, December 17, 2006

குரு பெருமை

குரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி வாராணசி எனப்படும் காசியிலியே கழிந்தது. இயல்பிலேயே அவரது மனம் இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்திருந்தது. அவருக்கு குருவின் அவசியமும் புரிந்திருந்தது. ராமானந்தரின் முற்போக்கான கருத்துகளும், மனத்தூய்மையையும் கண்ட அவர் அவரையே மனத்தால் குருவாக வரித்து விட்டார். அவரிடம் மந்திர உபதேசம் பெறுவது எப்படி ? அவரோ ஆழ்ந்த இந்து. இவரோ முற்றிலும் வேறு சமய நம்பிக்கை உடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர். . அவரை அணுகி எவ்வாறு கேட்பது ?

கபீர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். உத்தமர்கள் வாயில் எப்போதும் இறைநாமமே இருக்கும் ஆதலால் அவர்கள் எதிர்பாராது நிகழும் போது கூட அதுவே வெளிப்படும். (காந்திஜி சுடப்பட்ட நிலயிலும் அவர் சொன்னது "ஹே ராம்" ). இதை உணர்ந்த கபீர் ஒரு நாள் ராமானந்தர் கங்கையில் அதிகாலையில் நீராடி வரும் பொழுது படித்துறையின் ஒரு படியில் குறுக்கே படுத்து விட்டார். இருள் விலகாத நிலையில் தெரியாமல் கபீரை மிதித்து விட்டார் ராமானந்தர். அனிச்சையாக "ராம் ராம்" என்று சொல்லிக் கொண்டே அவர் காலை பின் வாங்கிக்கொண்டார். உடனே கபீர் எழுந்து அவரை வணங்கி அவரது திருவடி தன் மீது பட்டு சொல்லப்பட்ட ராம நாமத்தையே தன் உபதேச மந்திரமாகக் கொள்ள ஆசி வேண்டினார்.

"தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு" என்பார் திருமூலர் (2049).
"குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே" (2054)

என்றும் உரைப்பார். கபீருக்கு இவைகள் அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக இயல்பாகக் கூடியது. அதை புரிந்து கொண்ட ராமானந்தரும் அவரை தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
வினோதமான சீடன். வினோத முறையில் உபதேசம். பிற்காலத்தில் ராமானந்தரின் தலையாய சீடராகக் கபீர் போற்றப்பட்டார்.

குருபெருமையைக் கூறும் கபீரின் தோஹாக்கள் ஏராளம்.

1. गुरु गॊविन्द दॊऊ खडॆ़ काकॆ लागूं पांय
बलिहारी गुरु आपनॆ गॊविन्द दियॊ बताय


குரு கோவிந்த் தோஹூ கடே காகே லாகூம் பாய்
பலிஹாரீ குரு ஆப்னே கோவிந்த் தியோ பதாய்


குருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே
குருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே

கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.

2. गुरु धॊबी सिख कपडा़ साबू सिरजन हार
सुरति सिला पर धॊइयॆ निकसॆ ज्यॊति अपार

குரு தோபீ ஸிக் கப்டா ஸாபூ ஸிரஜன் ஹார்
ஸுரதி ஸிலா பர் தோயியே நிக்ஸே ஜ்யோதி அபார்

துவைப்பவன் ஆசான் துணிசீடன் திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறைக்கூட்டி ஒளிரும் சிவமேயாம்
( திட்பம் = மன உறுதி : உறை = அழுக்கு அகற்றும் உவர் நீர், மந்திர உறை என்பது மன மாசை அகற்றும் செபமந்திரம் )

3. गुरु बिन ज्ञान न उपजै, गुरुबिन मिलै न मॊष
गुरु बिन लखै न सत्य कॊ, गुरु बिन मिटै न दॊष


குருபின் ஞான் ந உபஜை, குருபின் மிலை ந மோஷ்
குருபின் லகை ந ஸத்ய்கோ, குருபின் மிடை ந தோஷ்

குருவன்றி ஞானமும் உண்டோ குருவன்றி வருமோ மோக்கம்
குருவன்றி சத்தியம் புரியுமோ குருவன்றி மாயுமோ மும்மலம்
(மோக்கம் = மோட்சம்)

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் மனிதன் தாண்டிச் செல்லவேண்டிய முப்பெரும் தடைகள். இவைகளால் சேர்ந்துள்ள மனமாசை துவைத்து சுத்தம் செய்யும் வல்லமை குரு ஒருவருக்கே உண்டு. துணியை கல்லின் மேல் அடித்து துவைக்க வேண்டும். குரு வைக்கும் ஒவ்வொரு சோதனையும் சீடனுடைய மனவுறுதி என்ற கல்லில் அடிப்பதற்கு ஒப்பாகும். அப்போது அவனுடைய துணைக்கு நிற்பது குரு உபதேசித்த செபமந்திரமே. அதை உறுதியாகப் பிடித்து கொண்டால் மன அழுக்குகள் கரைந்து சத்தியம் அசத்தியம் என்பவனெல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. ஆகவே குருவை விட வேறு யார் ஒரு சாதகனை கரையேற்ற வல்லார் ? சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் ? ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும்? இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுதல் என்பது இல்லாமல் முடியாது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'ஸ்வாமி ராமா'வின் "Life with Himalayan Masters" என்ற புத்தகத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் படியுங்கள். குரு கொடுக்கும் சோதனைகள் புரியும்.

4. कॊटिन चन्दा उगहीं सूरज कॊटि हजार
तीमिर तॊ नाशॆं नहीं बिन गुरु वीर अंधार

கோடின் சந்தா உக்ஹீ, ஸூரஜ் கோடி ஹஜார்
தீமிர் தோ நாஷேன் நஹி, பின் குருவீர் அந்தார்


இந்து கோடி உகுக்கினும் கோடி விண்மணி கூடினும்
அந்தகாரம் அழிவதில்லை ஆசானில்லா அந்தனுக்கே


(இந்து = சந்திரன் ; விண்மணி =சூரியன் ; அந்தகாரம்= இருள் ; அந்தன்= அந்தகன், குருடன்)

(தீமிர் என்ற ஹிந்தி சொல்லும் தமிழில் திமிரம் என்ற சொல்லும் இருள் என்பதை குறிக்கும் !)

பல கோடி ஜென்மமெடுத்து சந்திர சூரியர்களின் ஆதிக்கத்தில் இந்த பூமியில் வந்து போனாலும் நல்ல குரு வாய்க்காதவனுக்கு ஞானமென்பது கிடையாது. அவனென்றென்றும் அஞ்ஞான இருளில் உழலும் குருடனாகவே இருந்திடுவான். இது மேலெழுந்தவாரியான விளக்கம். வேறொரு வகையிலும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. நாம் மூச்சு விடும் பாங்கில் இடது பக்கம் சந்திர கலை என்றும் வலது பக்கம் சூரிய கலை என்றும் இவையிரண்டும் சேருமிடத்து சுஷும்னை அல்லது சுழுமுனை என்றும் கூறுவர். முறையாக செபத்தின் மூலம் மூச்சைக் கூட்டி சுஷும்னயில் எழுப்புவதை (அக்னி கலை) கற்றறியும் போது சிந்தை தெளிந்து சிவமாவர் என்பதை திருமூலரும் பல இடங்களில் கூறுகிறார்.

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர மாரு மறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலுமே (2703)


சந்திர கலையும் சூரிய கலையும் "சிவாய நம" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் கூட்டப் படுதலை உணார்த்துகிறார். இன்னுமொரு பாடலில்

சந்திரன் சூரியன்தான் வரின் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே (1989)


உபய நிலம் என்பது சகசிரதளத்தை குறிப்பதாகிறது. இப்பெரும் தத்துவத்தை கபீரும் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதும் செபம் மற்றும் குருவின் அவசியம் பற்றி அவர் எளிமையாக போதித்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.

5. बिना सांच सुमिरन नहिं, बिन भेदी भक्ति न सॊय
पारस में परदा रहा, कस लॊटा कंचन हॊय


பினா சாஞ்ச் சுமிரன் நஹி, பின் பேதி பக்தி ந ஸோய்
பாரஸ் மே பர்தா ரஹா, கஸ் லோடா கஞ்சன் ஹோய்


சத்திய மில்லாஸ் மரணையும் கூடா சத்குரு வில்லா பக்தியும் சமையா
நித்தியத் திரையும் நிற்றலு மிடையே பாரதம் செய்யும் கஞ்சனம் வாரா

( ஸ்மரணை = இறை சிந்தனை ; சமையா= பக்குவப் படாதது ; பாரதம் = பாதரசம்; கஞ்சனம் = பொன், தங்கம் )

ரச வாதம் என்பது பல விதமான உலோகங்களை பாதரசத்தின் தொடர்பினால் பொன்னாக மாற்றும் கலை. தாயுமானவர் இதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எப்படி ? " அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்". அதாவது
குபேரனுக்கு சமமாக செல்வம் உள்ளவரும் செப்பையும் இரும்பையும் பொன்னாக மாற்றும் கலைக்காக அலைந்திடுவர் என்றார். இந்த ரசாயன மாற்றத்திற்கு தேவையான பாதரசத்தின் தொடர்பை ஒரு மெல்லிய துணியால் பிரித்து விட்டால் பின் இரும்பு இரும்பாகவே இருக்கும். செப்பு செப்பாகவே இருக்கும். விரும்பும் கிரியா மாற்றம் அங்கே நிகழாது என்கிறார் கபீர்.
ஆன்மீக முன்னேற்றத்தில் அசத்தியம் ஒரு திரை. அவநம்பிக்கை ஒரு திரை. சத்தியத்தைக் கடைபிடிக்காமல் என்னதான் பிரார்த்தனைகளும் பூசைகளும் ஒருவன் செய்யினும் அவை என்றும் கைக்கூடாது. அசத்தியம் குறுக்கே வருகிறது. அது போலவே குரு என்பவரிடம் வைக்கப்படும் நம்பிக்கையும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை unconditional என்று சொல்லலாம். அது சற்றே ஆட்டம் கண்டாலும் பக்தி என்பதானது பக்குவப்படாமலே நின்று விடுகிறது. குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை. கீழ் நிலைக்கு ஒப்பான சாதாரண இரும்பைப் போன்ற சாதகனை பொன்னுக்கு நிகரான ஆன்மீக சக்தியுள்ளவராக மாற்றும் வல்லமை அவைகளுக்கு உண்டு. இவைகள் இல்லாமல் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்ட யாரும் தமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு திரையிட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். அதை வெற்றி கொள்ள வேண்டுமானால் மானுட உருவத்தில் உலவும் குரு ஒருவரில் அசையாத நம்பிக்கை வைத்து அவரையே கடவுளாகப் பாவித்து சாதனையில் ஈடுபட வேண்டும். இன்னொன்றையும் நினவில் கொள்ள வேண்டும். உண்மையான ஞானப் பசி உள்ளவனுக்கு இறைவனே ஒரு குருவை அனுப்பி தடுத்தாட் கொள்கிறான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆகையால் நமது முதல் கடமை ஆன்மீகத்தில் முழுமையான நாட்ட முடையவராய் மாறுவது தான்.